மாறனேரி நம்பி

மாறனேரி நம்பி (English : Maraneri Nambi) புகழ்பெற்ற வைணவப் பெரியோர்களில் ஒருவர்.[1] இவர் ஆளவந்தாரின் சீடர். தன்னுடைய குரு ராஜபிளவை நோயால் அவதியுற்றபோது அதனை உபதேசங்களை கேட்டு வாங்குவதைப் போல ராஜபிளவை நோயையும் வாங்கிக்கொண்டார்.[1] இவர் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் என்பதால் ராஜபிளவை நோயினால் அவதியுற்று இறந்தபோது, வைணவர்கள் யாரும் அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய முன்வரவில்லை. ஆளவந்தாரின் சீடராக இருந்த பெரிய நம்பி முன்வந்து வைணவர்களுக்கு செய்கின்ற இறுதிச் சடங்குகளைச் செய்தார்.[1] இவ்வாறு செய்தமைக்காக திருவரங்க வைணவர்கள் பெரிய நம்பியை ஜாதியை விட்டுத் தள்ளிவைத்தனர்.[1]

மாறனேரி நம்பி
பிறப்புபுராந்தகம்
இறப்புதிருவரங்கம்

பிறப்பு

ஆனி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பாண்டிய நாட்டிலுள்ள புராந்தகம் என்னும் சிற்றூரில் நான்காம் வருணம் எனப்படும் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தார்.

பெயர்க் காரணம்

மாறனாகிய நம்மாழ்வாருக்கு ஒப்பாக கருதும் வகையில் திருவரங்கத்தில் உறையும் அரங்கன் மீது அளவற்ற பக்தி கொண்டமையால் இவரை மாறனுக்கு நேரான நம்பி எனும் பொருளில் மாறனேர் நம்பி (மாறன்+நேர்+நம்பி) அல்லது மாறனேரி நம்பி என அனைவராலும் அழைக்கப்பட்டார்.

குருபக்தி

தன் குருவாகிய ஆளவந்தார் இராஜபிளவை எனப்படும் கொடுநோயால் படும் வேதனை பொருக்க ஒண்ணாது, தன் குருவை அணுகி, குருப்பிரசாதமாக அக்கொடிய நோயை தனக்கு அளிக்குமாறு வேண்டி நின்றார். ஆளவந்தார் மறுதளித்தும் பிடியாய் இருந்த நம்பிக்கு வேறுவழியின்றி தன் நோயை மாற்றியருளினார். மூன்று மாதங்களுக்கும் மேலாக அக்கொடிய நோயால் பாதிப்படைந்தவர், குருபக்தியால் அனைவரும் வியக்கும் வண்ணம் விரைவில் குணமடைந்தார். ஆயினும் இச்செய்கையால் தன் குடும்ப அங்கத்தினாராலேயே ஒதுக்கப்பட்டார்.

இறுதி விருப்பம்

ஆளவந்தார் திருநாடு அலங்கரித்தப்(இறப்பினைக் குறிக்கும் வைணவச் சொல்)பின் மாறனேரி நம்பி தனித்துவிடப் பட்டார். ஆளவந்தாரின் முதன்மை சீடரும், பிள்ளை பிராயம் தொட்டு தனக்கு உற்ற தோழனுமான பெரிய நம்பிகளிடம் தான் ஆச்சாரியன் திருவடி (இறப்பினைக் குறிக்கும் வைணவச் சொல்) அடைந்தப்பின் தன் பூத உடலை தன் உறவினர்களிடம் சேர்க்காது பெரியநம்பிகளே ஈமக்கிரியையகள் யாவும் செய்ய வேண்டும் என்ற தன் இறுதி விருப்பத்தை தெரிவித்தார்.ஏனெனில் ஆளவந்தாரின் இராஜபிளவை நோயை குருப்பிரசாதமாக பெற்றுக் கொண்டப்படியால் தன் உடலும் குருப்பிரசாதம் என்றும் அதனை வைணவர்கள் அல்லாத தன் குடும்பத்தினரிடம் அளிப்பது என்பது உயர்ந்த யாக நெய்யை தெருநாய்களுக்கு இடுவதற்கு ஒப்பாகும் என்றும் கருதினார்.அதன்படி இவரின் இறுதிக் கடன் யாவும் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த பெரிய நம்பிகளால் குறைவற நடத்திவைக்கப்பட்டது.

தனியன்

பின்வரும் வடமொழி தனியன் இவரின் பெருமையைக் கூறும்.

யாமுநாசார்ய ஸச்சிஷ்யம் ரங்கஸ்தலநிவாஸிநம்
ஜ்ஞாநபக்த்யாதிஜலதிம் மாறனேரிகுரும் பஜே

ஆதாரங்கள்

  1. ஆன்மிகம் இதழ் 1-15 ஜூலை 2016 பக்கம் 86

ஆறாயிரப்படி குருபரம்பரை பிரபாவம், பெரிய திருமுடி அடைவு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.