நாராயணன் என்ற சொற்பொருள்

நாராயணன் என்ற பெயர் இந்து சமயத் தோத்திரமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 245-வது பெயராக வருகின்ற பெயர். விஷ்ணுவின் முக்கியமான பன்னிரு பெயர்களில் இரண்டாவது பெயர்.இந்து சமயத்திலேயே கடவுளின் பெயர்களுக்குள் ஆன்மிகச்சிறப்பு மிக்கதான பெயர்.பிறப்பு இறப்பு என்ற கோரமான விஷத்தீண்டலைப் போக்கவல்ல பெயர் என்பன புராணங்கள்.

சொற்பொருள்

தமிழ் நெறி விளக்கம்

பதின்மர் ஆழ்வார்களின் இரண்டாவது ஆழ்வாரான பூதத்தாழ்வார் "நாரணன்" என்னும் சொல்லைக் கையாண்டு அதற்கு "அன்பின் அண்ணன்" என விளக்கமும் தருகிறார்.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக்(கு) ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்

வடமொழி நெறி விளக்கம்

  • உள்ளதற்கெல்லாம் உறைவிடமாகியவர். 'நர:' என்றால் ஆன்மா. அதனிலிருந்து உண்டானவையெல்லாம் 'நாரா:' எனப்படும். அவைகட்கு 'அயனம்', அதாவது இருப்பிடம். அவைகளில் எல்லாவற்றிலும் உள்ளிலும் வெளியும் நிறைந்திருப்பவர்[1] ஆதலால் 'நாராயணன்'.
  • இன்னும் விளக்கமாகச் சொல்லப் போனால்,ஆன்மாவிலிருந்து வெளி, வெளியிலிருந்து காற்று, காற்றிலிருந்து தீ, தீயிலிருந்து நீர், நீரிலிருந்து நிலம் -- இதுதான் படைப்பு வரிசை [2].இப்படி விளக்கம் பெற்று வெளியானதே இவ்வுலகம்.இது ஆன்மா எனப் பொருள்படும் 'நர'னிலிருந்து உண்டானதால் 'நாரம்'.நாரத்தை இருப்பிடமாகக் கொண்டவர் 'நாரயணன்'.
  • வெளி முதலிய ஐந்து பெரும்பூதங்களும் ஒன்றோடொன்று நன்கு கலந்து வெளித் தோற்றம் பெறுமுன்னர், தனித்தனியாக இருந்தன.அவைகளுக்கு 'காரணோதகம்' அல்லது 'அப்பு' என்று பெயர். அம்மூல தத்துவங்களில் உட்புகுந்து அவற்றைத் தன்னிடமாகக் கொண்டு படைப்பைத் தொடங்கியவர் 'நாராயணன்'[3]
  • [4] வடமொழி இலக்கணத்தில் 'தத்புருஷ-ஸமாஸம்' (வேற்றுமைப்புணர்ச்சி), 'பஹுவ்ரீஹி ஸமாஸம்' (அன்மொழித்தொகை) என்று இருவித சொற்புணர்ச்சிகள் உண்டு. 'நாராயண' என்ற சொல், 'நர' , 'அயன' ஆகிய இரண்டு சொற்களைக் கொண்டு சேர்க்கும்போது, இரண்டுவிதமாகவும் சேரும்.
நாராணாம் அயனம் அதாவது, நாரங்களுக்கு அயனம், என்பது முதல் வகை.
நாரா: அயனம் யஸ்ய ஸ:, அதாவது 'நாரங்களை அயனமாக (நுழையப்படும் பொருளாக) உடையவர்' என்பது இரண்டாவது வகை.
உயிருள்ளவை, உயிரில்லாதவை இரண்டும் இல்லாத இடத்திலும் அவன் உளன் --இது முதல் வகைப் புணர்ச்சியினால் ஏற்படும் பொருள். இதை 'புறப்பரவல்' ('பஹிர்-வ்யாப்தி) என்று வேதாந்தத்தில் கூறுவர்.
உயிருள்ளவையோ, உயிரில்லாதவையோ, உள்ள இடத்தில் தான் இல்லை என எண்ணவொண்ணாதபடி அவன் கலந்து நிற்கிறான் -- இது இரண்டாவது வகைப் புணர்ச்சியினால் ஏற்படும் பொருள். இதை 'உள்ளுறைதல்' ('அந்தர்-வ்யாப்தி) என்று வேதாந்தத்தில் கூறுவர்.

'நாராயண' என்ற சொல்லின் பெருமை

ஆதி சங்கரர் 'நாராயண' நாமத்தின் பெருமையை தன் விஷ்ணு சஹஸ்ரநாம உரையின் முன்னுரையில் பல மேற்கோள்களை எடுத்தாண்டு விளக்குகிறர். அவைகளில் சில:

நீராடும்பொழுதும் மற்ற எல்லாச்செய்கைகளிலும் 'நாராயணனை' நினத்தமாத்திரத்தில் கூடாத செய்கைகளனைவற்றிற்கும் பிராயச்சித்தமாகின்றது.
அத்தனை சாத்திரங்களையும் திரும்பத்திரும்ப அலசிப்பார்த்தாலும் 'நாராயணனை' எப்பொழுதும் தியானிப்பதொன்றே சிறந்ததாக ஏற்படுகிறது.

ஸ்ரீமத்பாகவதத்தைத் தொடங்கும்போதே சுக மஹரிஷி அரசன் பரீக்ஷித்துக்குச் சொல்கிறர்[5]: கருமங்களை சரிவரச்செய்வதாலோ அல்லது யோகாப்பியாசத்தினாலோ அல்லது ஆன்மிகத்தொடர்பினாலோ எப்படி ஏற்பட்டாலும், ஒரு பிறப்பின் மேலோங்கிய பெருமை கடைசி மூச்சின்போது 'நாராயணனை' நினைவு கூறுவதுதான்.

  • இப் பாடலில் நாராயணன் அன்பு (அருள்) வெள்ளம் நம்மீது பாய்வதை உணரமுடிகிறது.

ஒரு சுவையான செய்தி

பகவானின் தத்துவங்களை ஆதி முதல் அந்தம் வரை எடுத்து அலசியிருக்கும் பகவத் கீதை யின் 18 அத்தியாயங்களிலும் 'நாராயண' என்ற சொல் வரவேயில்லை என்பது ஓர் அதிசயம்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. யச்ச கிஞ்சித் ஜகத் ஸர்வம் த்ருச்யதே ச்ரூயதேபி வா; அந்தர் பஹிஶ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித: (தைத்திரீயோபநிடதம் 3-1.
  2. யஜுர் வேதம், தைத்திரீயோபநிடதம், 2-வது அத்தியாயம், முதல் அனுவாகம்
  3. ஆபோ நாரா: என்று கூறும் மனுஸ்மிருதி 1-10
  4. வேதாந்த தேசிகர்: 'தேசிகபிரபந்தம்' பாட்டு #300
  5. ஸ்ரீமத்பாகவதம், 2-1-6

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.