இசுபிங்சு

இசுபிங்சு (Sphinx) என்பது, சிங்கத்தின் உடலும், செம்மறி ஆடு, வல்லூறு, மனிதன் ஆகியவற்றுள் ஒன்றின் தலையுடனும் கூடிய ஒரு உருவத்தைக் குறிக்கும். இது பண்டைய எகிப்தியர்களின் பழைய அரசுக்காலத்து உருவாக்கமாக இருந்தாலும், பண்பாட்டுத் தொடர்புகளினால் கிரேக்கத் தொன்மங்களிலும் இடம் பெற்றுள்ளது.

இசுபிங்சு

எகிப்திய இசுபிங்சு

எகிப்திய இசுபிங்சு தொன்மம் சார்ந்த கற்பனைப் பிராணிகள் ஆகும். எகிப்திய சிற்ப மரபில் இவை காவலுக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன. ஸ்ஃபிங்ஸ்கள் மூன்று விதமான வடிவங்களில் காணப்படுகின்றன.

  1. அண்ட்ரோ இசுபிங்சுகள்: இவை சிங்க உடலும் மனிதத் தலையும் கொண்டவை.
  2. கிரியோ இசுபிங்சு: சிங்க உடலும் செம்மறியாட்டுத் தலையும் கொண்டு அமைந்தவை.
  3. ஹையெரொகோ இசுபிங்சு: சிங்க உடலும் வல்லூறு அல்லது பருந்தின் தலையும் கொண்டவை.
லக்சோரின் கர்னாக்கில் உள்ள செம்மறியாட்டுத் தலை ஸ்ஃபிங்ஸ்களின் வரிசை

எகிப்தில் உள்ளவற்றில் பெரியவையும், புகழ் பெற்றவையுமான இசுபிங்சுகள் கீசாவில், நைல் நதியின் மேற்குக் கரையில், வடக்கு நோக்கியபடி, அமைந்து உள்ளதாகும். இதன் பாதங்களுக்கு இடையில் சிறிய கோயிலொன்றும் உள்ளது. கீசாவின் பெரிய இசுபிங்சின் தலை எகிப்திய ஃபாரோவான கஃப்ரா (Khafra) என்பவருடையது அல்லது அவருடைய தம்பியான ஜெடெஃப்ரா (Djedefra) என்பவருடையது எனக் கருதப்படுகின்றது. இதன் அடிப்படையில் இது நாலாம் மரபுவழிக் (கி.மு. 2723 - கி.மு. 2563) காலப்பகுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் இதன் கட்டுமானத்தை இன்னும் பழைய காலத்துக்குத் தள்ளும் எடுகோள்களும் உள்ளன.

தெற்கு, தென்கிழக்காசிய இசுபிங்சுகள்

புருசமிருக அல்லது இந்திய இசுபிங்சு, இந்தியாவின் திருபுவனத்தில் உள்ள ஸ்ரீ வரதராச பெருமாள் கோவிலில்

மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட உயிரினங்கள் பற்றிய தகவல்கள், தெற்காசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் மரபு, தொன்மங்கள், சிற்பங்கள் முதலியவற்றில் காணப்படுகின்றன. இவை பலவிதமாகப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் புருஷமிருக (சமஸ்கிருதம்), புருஷமிருகம், நரசிம்ஹ என்றும், மனுசிஹ அல்லது மனுதிஹ என மியன்மாரிலும், நோரா நைர் அல்லது தெப்நோரசிங் எனத் தாய்லாந்திலும் இசுபிங்சைக் குறிக்கப் பெயர்கள் வழங்குகின்றன.

எகிப்து, மெசொப்பொத்தேமியா, கிரீஸ் போன்ற இடங்களில், பண்பாட்டுத் தொடர்ச்சியின்மை காரணமாக, இசுபிங்சு பற்றிய மரபுகள் அற்றுப்போனாலும், ஆசிய இசுபிங்சுகள் பற்றிய மரபுகள் இன்றும் புழங்கிவருன்றன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.