வினதா

வினதா, இந்து தொன்மவியலின்படி தட்சனின் பதின்மூன்று மகள்களுள் ஒருவராவர், இவர் காசிபர் மகரிசியை மணந்தார். இவர்களுக்கு அருணன், கருடன் என இரு மகன்கள் உண்டு. இதில் அருணன் சூரியனின் தேரோட்டியாவார். நாகர்களின் தாயான கத்ரு இவளின் சக்களத்தியாவர்.

வினதை அடிமை ஆதல்

ஒரு முறை வானத்தில் சென்று கொண்டிருந்த இந்திரனின் உச்சைச்சிரவமென்னும் குதிரையின் நிறம் குறித்து, கத்ரு கேட்டதற்கு, அதன் நிறம் வெண்மை என வினதை கூற, கத்ரு அதன் நிறம் கருமை எனக் கூறியதால், குதிரையின் சரியான நிறம் குறித்த போட்டியில் தோற்றவர், வென்றவர்க்கு அடிமை என ஒப்பந்தமாயிற்று.

கத்ரு போட்டியில் வெல்ல வேண்டி தன் மக்களான ஆயிரக்கணக்கான கருநாகங்களை அழைத்து, உச்சைச்சிரவம் எனும் இந்திரனின் தேவலோக குதிரையின் உடலைச் சுற்றிக் கொள்ளுங்கள் என ஆணையிட, அவ்வாறே கருநாகங்கள் உச்சைச்சிரவம் என்ற வெண் குதிரைச் சுற்றிக் கொள்ள, குதிரை பார்ப்பதற்கு கருநிறமாக மாறியது. கத்ரு உடனே வினதையை அழைத்துக் கொண்டு கருமையாக இருந்த உச்சைச்சிரவம் எனும் குதிரையைக் காட்டினாள். வினதையும் குதிரையின் நிறம் கருமை என ஏற்றுக் கொண்டு, வினதை தன் குழந்தைகளான கருடன் மற்றும் அருணன் உடன் நாகர்களின் தாயான கத்ருவுக்கு அடிமையானாள்.

அடிமைத் தனத்திலிருந்து விடுதலை

கருடன் கத்ருவிடம் தனது தாயையும் தங்களையும் விடுதலை வேண்டினான். அதற்கு கத்ரு, தேவ லோகத்திலிருந்து எங்களுக்கு அமிர்தம் கொண்டு வந்து தர வேண்டும் என்றதற்கு, கருடனும் தேவலோகத்திலிருந்து அமிர்த கலசத்தை கொண்டு வந்து நாகர்கள் முன்பு தர்ப்பைப்புல் மீது வைத்தார். உடன் வினதா, கருடன் மற்றும் அருணன் நாகர்களின் தாய் கத்ருவிடமிருந்து விடுதலையானர்கள். நாகர்கள் கடலில் குளித்துவிட்டு கலசத்திலிருந்த அமிர்தத்தை உண்ண வருகையில், இந்திரன் அமிர்த கலசத்தை தூக்கிக் கொண்டு சென்று விட்டார். ஏமாந்த நாகர்கள் அமிர்த கலசம் வைத்திருந்த தர்பைப்புல்லை தங்கள் நாக்கினால் நக்கியதால், பாம்பினங்களுக்கு நாக்குகள் பிளவுண்டன.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.