வாலான் (நெல்)

வாலான் (Valan) பாரம்பரிய நெல் இரகங்களில் நீண்ட வயதுடைய இரகமான இவ்வகை நெல் முனையில் வால் போன்று காணப்படுவதால், “வாலான்” எனப் பெயர்பெற்ற இது,[1] 160 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாகும். வெள்ளம், மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும் வாலான், அனைத்து மண் வகைகளுக்கும் ஏற்ற இரகமாகும். வெண்ணிற அரிசியுடைய மோட்டா (தடித்த) இரகமாக உள்ள இது, இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது. ஒரு சால் (ஒரு முறை) உழவில் விதைப்புக்கு ஏற்ற இவ்வகை நெல், எவ்வித உரமும் இன்றி செழித்து வளரும் திறனுடையது. தமிழ்நாட்டில் பரவலாகச் சாகுபடி செய்யப்பட்டுவரும் இந்த நெல் இரகம், ஒரு ஏக்கருக்கு முப்பது முட்டைக்கும் மேலாக மகசூல் தரகூடியது. இவ்வரிய வகை நெல் இரகம், அதிகச் செலவில்லாமல் மகசூல் கொடுக்கக்கூடிய இரகங்களில் முதன்மையானதாகும்.[2]

வாலான் நெல்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
160 – 165 நாட்கள்
மகசூல்
சுமார் 900 கிலோ
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

வளரியல்பு

களிமண் உட்பட எந்த வகை மண்ணிலும், அனைத்து பட்டத்திலும் (பருவத்திலும்), வடிகால் வசதியற்ற பள்ளக்கால் (தாழ்வு) பகுதியிலும், மற்றும், இருபது நாட்களுக்கு ஒரு தண்ணி கிடைக்கிற இடத்திலும் செழித்து விளையக்கூடிய இந்த வாலான் நெல், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர், காவிரிக் கரையோரங்களில் பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.[1]

மருத்துவ குணங்கள்

வாலான் அரிசியைத் (சோறு) தொடர்ந்து சாப்பிடுவதன்மூலம் குடல் சுத்தப்பட்டு, தேகம் அழகு பெறும். பித்தம், வயிறு சம்பந்தமான நோய்கள், கரப்பான், மந்த வாயு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதாக கருதப்படுகிறது. இந்த இரகத்தின் அரிசியை வேகவைத்து அதில் சிறிது கறிவேப்பிலையைப் போட்டு ஊறவைத்து, அதன் நீராகாரத்தைப் பருகினால் நெய் போல் மணம் கமழும். மேலும், இந்த நெல் இரகத்தில் நோய் எதிர்ப்புசக்தி அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.[2][3]

பயன்கள்

வாலான் நெல்லின் அரிசியில், இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது. அனைத்து வகையான பண்டங்களும் செய்ய ஏற்ற இரகமாக உள்ள இது. பிட்டு செய்து பருவமடைந்த பெண்களுக்குக் கொடுத்தால் அதிகச் சக்தியைக் கொடுக்கும் என்றும், சுமங்கலி பூசை, மற்றும் ஆடிப்பெருக்குப் போன்ற நிகழ்வுகளில் இந்த அரிசி பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. "வடிகால் வசதியில்லாத நிலத்திலும், வளமை காட்டும் வாலான்!". பசுமை விகடன் (தமிழ்) (© ஏப்ரல் 25, 2010). பார்த்த நாள் 2017-01-01.
  2. "எல்லா வயதினருக்கும் ஏற்ற வாலான்". தி இந்து (தமிழ்) (© ஆகத்து 29, 2015). பார்த்த நாள் 2016-12-23.
  3. "பாரம்பரிய நெல் இரகங்களின் மருத்துவ குணங்கள்". முனைவர் கோ. நம்மாழ்வார் (தமிழ்) (© 2016). பார்த்த நாள் 2017-01-01.

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.