பிட்டு

பிட்டு அல்லது புட்டு என்பது ஒருவகை உணவுப் பண்டம். இதை அரிசி மாவு, தேங்காய்த் துருவல் கொண்டு செய்கின்றனர். அரிசி மாவைக் கொதித்த நீரில் குழைத்துப் பின்னர் சிறு சிறு துண்டுகளாக ஆக்கிய பின்னர் அதனுடன் தேங்காய்த் துருவலையும் சேர்த்து நீராவியில் இட்டுப் பிட்டு அவிக்கின்றனர். அரிசி மாவு தவிர, சிறு தானிய வகைகளில் ஒன்றான குரக்கன் மாவும் பிட்டு சமைப்பதற்குப் பயன்படுகின்றது. ஒடியல் பிட்டு என்னும் ஒருவகைப் பிட்டு, பனங்கிழங்கைக் காயவிட்டுப் பெறப்படும் ஒடியலின் மாவினால் செய்யப்படுகின்றது. தற்காலத்தில் பிட்டு மென்மையாக இருப்பதற்காக அரிசி மாவுடன் கோதுமை மாவையும் கலந்து பிட்டு அவிக்கும் வழக்கம் உண்டு. தமிழ் நாட்டில் கூடுதலாக பிட்டு சமைப்பதில்லை என்றாலும், இலங்கையிலும், கேரளாவிலும் இதைச் சமைத்து மிகவும் விரும்பி உண்கின்றனர். இலங்கைத் தமிழர்கள், பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் காலை, இரவு உணவுகளுக்கு விரும்பி உண்ணும் உணவுகளில் பிட்டும் ஒன்றாகும். தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குத் தோசையும், இட்டிலியும் போல, இலங்கைத் தமிழர்களுக்குப் பிட்டும், இடியப்பமும் அதிகம் உண்ணப்படும் உணவுப் பண்டங்களாக உள்ளன. தென்கிழக்காசிய நாடுகளிலும் புட்டு உணவு காணக் கிடைக்கிறது. இந்தோனேசியாவில் இதனைப் புத்து என்கின்றனர்.

பிட்டு
குழற்பிட்டு. பிட்டுக் குழலில் இட்டு அவிக்கப்படுவது
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிஇந்தியா (கேரளம், இலட்சத்தீவுகள், புதுச்சேரி, தமிழ்நாடு),
இலங்கை
முக்கிய சேர்பொருட்கள்அரிசி மா, தேங்காய்
Cookbook: பிட்டு  Media: பிட்டு
பிட்டுக் குழலில் பிட்டு அவித்தல்

அவித்தல் முறை

மரபு வழியாகப் பிட்டு அவிப்பதற்கு இரண்டு முறைகள் உள்ளன. ஒரு முறையில் பிட்டுக் கலவையைப் பனையோலையினால் செய்யப்பட்ட கூம்பு வடிவான நீற்றுப் பெட்டியில் இட்டு அவிக்கின்றனர். மற்ற முறையில் பிட்டு அவிப்பதற்கு மூங்கிலால் செய்யப்படும் பிட்டுக் குழல்கள் பயன்படுகின்றன. இம் முறையில் அவிக்கப்படும் பிட்டு "குழற்பிட்டு" எனப்படுகின்றது. குழற்பிட்டுச் செய்யும்போது மாவுத் துண்டுகளும் தேங்காய்த் துருவலும் ஒன்றாகக் கலக்கப்படுவது இல்லை. முதலில் சிறிதளவு தேங்காய்த் துருவலைக் குழலில் இட்டுப் பின்னர் அதன்மேல் ஏறத்தாழ 2 தொடக்கம் 3 அங்குல அளவுக்கு மாவுத் துண்டுகளை இடுவர். இவ்வாறு மாறிமாறிக் குழல் நீளத்துக்கு நிரப்பி அவிப்பது வழக்கம். இவ்வகைப் பிட்டு ஏறத்தாழ 2 அங்குல விட்டம் கொண்ட சிறிய உருளை வடிவத் துண்டுகளாக அமையும். தற்காலத்தில், பிட்டுக் கலவையை பருத்தித் துணியில் இட்டு இட்டிலிச் சட்டியிலோ, அவிக்கும் பாத்திரத்திலோ இட்டும் அவிக்கும் வழக்கம் உள்ளது.[1]

பிட்டு அவிக்கப் பயன்படும், பனையோலையால் செய்யப்பட்ட ஒரு வகை நீற்றுப்பெட்டி

பிட்டு வகைகள்

செய்முறை வாரியாக

  • குழற்பிட்டு
  • நீத்துப்பெட்டிப் புட்டு
  • பிடிப் புட்டு
  • புட்டுக் கலவை

இடுபொருள் வாரியாக

  • அரசிமாப் புட்டு
  • குரக்கன் புட்டு
  • வெள்ளைப் பிட்டு (வெள்ளை மா)
  • கீரைப் பிட்டு
  • வெங்காயப் புட்டு
  • பிட்டுக் கலவை (மரக்கறி, மாமிசம்)
  • அலுவாப்பிட்டு
  • ஆலங்காய்ப்பிட்டு
  • சீனிப்பிட்டு
  • மணிப்பிட்டு
  • பாற்பிட்டு
  • குரக்கன் பிட்டு
  • ஒடியற்பிட்டு
  • ஆட்டாமாப் புட்டு

ஊட்டச்சத்து

இடுபொருட்களைப் பொறுத்து புட்டின் ஊட்டச்சத்து வேறுபடுகிறது. ஒப்பீட்டளவில் குரக்கன், ஒடியல் மா புட்டுக்கள் வெள்ளைப் புட்டை விட ஊட்டச்சத்து மிக்கவை. பொதுவாக எல்லா வகைப் புட்டுக்களும் புட்டு மாசத்து நிறைந்த உணவு ஆகும். எனவே நிறைய ஆற்றலை வழங்கக் கூடியவை.

இவற்றையும் பார்க்கவும்

  • தமிழர் உணவுகள்

சான்றுகள்

  1. "செய்முறை". பார்த்த நாள் ஆகத்து 22, 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.