பாசுமதி

பாசுமதி (பாஸ்மதி, Basmati வங்காள: বাসমতী) என்பது இந்தியா, வங்காளதேசம், பாக்கித்தான் முதலிய நாடுகளில் விளையும் ஒரு வகை நீண்ட அரிசியாகும். இதன் தனிப்பட்ட நறுமணமும் சுவையும் குறிப்பிடத்தக்கது. பாசுமதி என்னும் வடமொழிச் சொல்லுக்கு, "நறுமணம் வாய்ந்த" என்றும் "மென்மையான அரிசி" என்றும் பொருள் கொள்ளலாம். இந்த வகை அரிசியை இந்தியத் துணைக் கண்டத்தில் குறிப்பாக இந்தியாவில் மிகக் கூடுதலாகப் பயிரிடுகிறார்கள். பஞ்சாப் பகுதியிலும் வங்காளத்திலும் உள்ள வயல்வெளிகளில் இதைக் கூடுதலாகப் பயிரிடுகிறார்கள்.

பாசுமதி அரிசி

உற்பத்தி

இந்தியா

உலக பாசுமதி அரிசி உற்பத்தியில் 70% இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் மிகக் குறைந்த அளவில் இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படுகிறது. ஜூலை 2011 - ஜூன் 2012 ஆம் ஆண்டில் இந்தியாவில் 50 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது. இந்தியாவில் பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், தில்லி, உத்தராகண்டம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் அதிக அளவு பாசுமதி அரிசியினை உற்பத்தி செய்கின்றன.

நேபாளம்

நேபாளத்தில் குறிப்பாக காத்மண்டு பள்ளத்தாக்கு மற்றும் தெராய் பகுதிகளில் அதிக அளவு பாசுமதி அரிசி விளைவிக்கப்படுகிறது. சிறப்பான நேபாளா பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு அந்நாடு சில சமயங்களில் தடை விதிக்கவும் செய்கிறது.

பாக்கிஸ்தான்

பாகிஸ்தானில் விளைவிக்கப்படும் பாசுமதி அரிசியில் 95% பஞ்சாப் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில் 24.7 இலட்சம் டன்கள் பாசுமதி அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா

அமெரிக்காவில் பாசுமதி அரிசி வகை தெக்ஸ்மதி எனும் பெயரில் விளைவிக்கப்படுகிறது.

கென்யா

கென்யாவின் ம்வியா (Mwea) எனும் பகுதியில் பாசுமதி அரிசி பிஸோரி எனும் பெயரில் விளைவிக்கப்படுகிறது.

ஏற்றுமதி

கலாசார மற்றும் வணிகப்பறிமாற்றத்தின் ஒரு பகுதியாய் இந்து வணிகர்கள் பாசுமதி அரிசியை மத்தியக் கிழக்கு பகுதிகளில் அறிமுகப்படுத்தினர். இதன் காரணமாய் நேபாளம், இலங்கை, வங்காளதேசம் மற்றும் பெர்சியா/அரேபியா பகுதிகளிலும் பாசுமதி அரிசி பயன்பாட்டில் உள்ளது. பாசுமதி ஏற்றுமதியில் இந்தியாவும் பாக்கிசுத்தானும் முன்னணியில் இருக்கின்றன.[1] 2014 ஆம் ஆண்டின் உலக பாசுமதி ஏற்றுமதியில் 59 சதவீதம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியானது. மீதி பாகிஸ்தானிலிருந்து ஏற்றுமதியானது. வேறு பல நாடுகளும் உள்ளூரில் பாசுமதி அரிசியைச் சாகுபடி செய்கின்றனர்.

வகைகள்

பாசுமதி அரிசியில் பல்வேறு வகைகள் உள்ளன. பாரம்பரிய இந்தியப் பாசுமதி அரிசியில் பாசுமதி 370, பாசுமதி 385 மற்றும் பாசுமதி ரன்பீர்சிங்புரா (ஆர். எஸ். புரா) & இந்தோ - பாக் பகுதியின் ஜம்மு மாகாணத்தில்ணத்தில் பாசுமதி 1121 போன்ற வகைகள் உள்ளன. பாகிஸ்தானிய வகைகளில் பிகே 385, சூப்பர் கெர்னல் பாசுமதி அரிசி மற்றும் டி -98 போன்றவையாகும். இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம், தில்லி வீரிய வகை புசா பாசுமதி - 1 எனும் அரிசியைக் கண்டுபிடித்துள்ளது. இவை ஓரளவிற்கு வறட்சியைத் தாக்கி நல்ல மகசூலைக் கொடுக்கின்றன. பிபி 1, பிபி2, பிபி3 மற்றும் ஆர்எஸ் 10 போன்றவை பாசுமதி அரிசியைப் போன்றே தோற்றத்திலும் நறுமணாத்திலும் இருந்தாலும் இவை வேறு வகை அரிசிகளாகும்.

இந்திய வகைகள்

பாசுமதி, பி3 பஞ்சாப், வகை 3 உத்திரப்பிரதேசம், ஹெச்பிஸி - 19 சாஃபிடான், 386 ஹரியானா, கஸ்தூரி (பாரான், இராஜஸ்தான்), பாசுமதி 198, பாசுமதி 217, பாசுமதி 370, பீகார் கஸ்தூரி, மாஹி சுகந்தா மற்றும் புஸா 1121 ஆகிய பாசுமதி அரிசி வகைகள் கண்டுபிடிக்கப்பட்டு பயிரிடப்படுகின்றன.

நேபாள வகைகள்

நேபாளத்தில் பாசுமதி 217, புசா பாசுமதி, பாசுமதி 1 மற்றும் நேபாள சிவப்பு பாசுமதி ஆகிய வகைகள் கண்டுபிடிக்கப்பட்டு பயிரிடப்படுகின்றன.

பாகிஸ்தான் வகைகள்

பாசுமதி 370 (பாக் பாசுமதி), சூப்பர் பாசுமதி, பாசுமதி பாக் (கெர்னால்), 386 அல்லது 1121 பாசுமதி அரிசி, பாசுமதி 385, பாசுமதி 515, பாசுமதி 2000 மற்றிம் பாசுமதி 198 ஆகிய பாசுமதி அரிசி வகைகள் கண்டுபிடிக்கப்பட்டு பயிரிடப்படுகின்றன.

பயன்பாடு

சமைக்கப்பட்ட இந்திய வெள்ளை பாசுமதி.

பாசுமதி அரிசி மற்ற இரக அரிசிகளை விட நீளமானதாக உள்ளது. ஆனால் மற்ற நீள இரக அரிசிகளைப் போலன்றி வேகவைத்த பாசுமதிச் சோறு ஒட்டிக்கொள்ளாமல் "உதிர்ந்து" காணப்படுகிறது. பாசுமதிச் சோற்றை அதன் நறுமணம் மூலம் எளிதாக அறியலாம். வழமையான வெண்ணிற பாசுமதி தவிர பழுப்பு நிற பாசுமதியும் உண்டு. இதன் சிறப்பியல்புகளுக்காக மற்ற வகை அரிசிகளை விட பாசுமதியின் விலை கூடுதலாகும். இதனால், பெரும்பாலும் சிறப்பாகச் சமைக்கும் பிரியாணி, புலாவு போன்ற உணவுகளிலும் பாயசம் போன்ற இனிப்புக்களிலும் மட்டுமே பாசுமதியைப் பயன்படுத்துகிறார்கள்.

சர்க்கரை உயர்த்தல் குறியீடு

கனடாவின் நீரிழிவு அமைப்பு பாசுமதி அரிசி நடுத்தர (56 - 69) சர்க்கரை உயர்த்தல் குறியீட்டினைக் கொண்டுள்ளது என அறிவித்துள்ளனர். எனவே இதை நீரிழிவு நோயாளிகளும் உண்ணலாம் எனத் தெரிவித்துள்ளனர்.[2]

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Rice Sales From India to Reach Record as Iran Boosts Reserve". பார்த்த நாள் 9 June 2016.
  2. "Canadian Diabetes Associate - The Glycemic Index" (PDF). பார்த்த நாள் 2017-06-01.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.