வாடன் சம்பா (நெல்)

வாடன் சம்பா (Vadan Samba) பாரம்பரிய நெல் வகைகளில் இளம் குழந்தைக்கு முதல் உணவாக (இதன் அரிசிக் கஞ்சி) வழங்கப்படும் இது, மானாவாரி மற்றும் வறட்சியான பகுதிகளில் பரவலாகச் சாகுபடி செய்யப்படும் நெல் இரகமாகும். வறட்சியைத் தாங்கி, மழை பெய்யும்போது பயிர் வளர்ச்சி அடையும் தன்மை கொண்ட வாடன் சம்பா, சுமார் நான்கடி வரையிலும் வளரக்கூடிய நெல் வகையாகும். நூற்று நாற்பது நாள் வயதுடைய நீண்ட காலப் பயிரான இந்நெல் இரகம், மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்துடன் கூடிய சன்ன இரக அரிசியைக் கொண்டது.[3]

வாடன் சம்பா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
155 – 160 நாட்கள்[1]
மகசூல்
ஏக்கருக்கு சுமார் 1200 கிலோ[2]
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

பராமரிப்பு

வாடன் சம்பா நெற்பயிருக்கு ஒருமுறை மூலிகை பூச்சி விரட்டியும், ஒருமுறை பஞ்சகவ்யமும் பயன்படுத்தினால் ஒரு ஏக்கருக்கு இருபத்து ஐந்து மூட்டைவரை மகசூல் கிடைக்ககூடிய இந்த இரகத்தின் விற்பனைக்கு நல்ல வரவேற்பு உண்டு. மேலும், இந்த இரகத்துக்கு இரசாயன உரங்களோ, பூச்சிக்கொல்லிகளோ தேவையில்லை என கருதப்படுகிறது. பூச்சி, மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ள இந்நெல் இரகம், நெல் மணிகள் கொட்டும் தன்மை கொண்டவை என்பதால், பத்து நாட்களுக்கு முன்பாக அறுவடை செய்வது அவசியம் என்று கூறப்படுகிறது.[3]

சன்ன இரகம்

இந்த நெல்லின் அரிசி சன்ன இரகமாகவும், சத்து மிகுந்த இரகமாகவும் இருப்பதால் உணவு மற்றும் பலகார வகைகளுக்கு ஏற்றதாக அதிகம் விரும்பப்படுகிறது. உணவுத் திருவிழாக்களில் பங்கேற்க வாடன் சம்பா அரிசியில் பலகாரம் செய்ய விரும்பும் பெண்கள் இருக்கிறார்கள் என்கின்றனர். மிகுந்த ருசியுடன் இருப்பதால் மக்களிடையே வாடன் சம்பா பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.[3]

பருவகாலம்

மத்திய, மற்றும் 130 நாள் முதல், 140 நாள் வரையிலான நீண்டக்கால நெல் வகையைச்சார்ந்த வாடன் சம்பா, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், சம்பா பட்டம் எனப்படும் ஆகத்து, மற்றும் செப்டம்பர் மாதங்களில் சாகுபடி செய்ய ஏற்ற நெல் இரகமாகும்.[4]

மருத்துவக் குணம்

அதீதமான மருத்துவக் குணமும் கொண்ட வாடன் சம்பா, மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு மூலிகை வைத்தியம் எடுத்துக்கொள்பவர்கள் பத்தியம் (உணவு கட்டுப்பாடு) இருக்க வேண்டும். மேலும், பேதிக்கு மருந்து சாப்பிடுபவர்களுக்கும் வாடன் சம்பா அரிசிக் கஞ்சி வைத்துக் கொடுக்கும் பழக்கம் கிராமப் பகுதிகளில் இன்றும் இருந்துவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். குழந்தைகளுக்கு முதன்முதலில் சோறு ஊட்டும்போது இந்த அரிசியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதற்குக் காரணம் விரைவில் சீரணம் ஆவதும், நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்ததுமான இந்த நெல் இரகம், குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்துக்கும் சிறந்ததாக இருக்கும் என்பது தெரியவருகிறது.ref name="thehin"/>

இவற்றையும் காண்க

சான்றுகள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.