சிறீ மகாபோதி

சிறீ மகாபோதி (Sri Maha Bodhi) என்பது இலங்கையின் முதல் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள புனித வெள்ளரசு மரம் ஆகும். புத்தர் இருந்து ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையில் இருந்து வளர்க்கப்பட்டதே இது என்று கூறப்படுகிறது. இது கிமு 288 ஆம் ஆண்டில் நடப்பட்டதாக இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. மனிதனால் நடப்பட்டதும், அவ்வாறு நடப்பட்ட காலம் அறியப்பட்டதுமான, மரங்களில், உலகிலேயே மிகப் பழமையான மரம் இதுவே எனச் சொல்லப்படுகிறது.

சிறீ மகாபோதி மரம். மனிதனால் நட்டு வளர்க்கப்பட்ட, உலகிலேயே பழமையான மரம்

இது நில மட்டத்திலிருந்து 6.5 மீட்டர் உயரமான சமதரையில் நடப்பட்டுள்ளது. சுற்றிலும் பாதுகாப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பௌத்தர்களினால் மிகப் புனிதமாக மதிக்கப்படும் பௌத்த சின்னம் இதுவே என்பதுடன் உலகம் முழுவதிலும் உள்ள பௌத்தர்களாலும் இது பெரிதும் மதிக்கப்படுகின்றது. இதைச் சுற்றியுள்ள சுவர், கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் என்னும் அரசன் காலத்தில், இம் மரத்தைக் காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காகக் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.

புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளை கிமு மூன்றாம் நூற்றாண்டில், அசோகப் பேரரசரின் மகளும், பௌத்த பிக்குணியும் ஆன சங்கமித்தை என்பவரால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த மகாபோதி மரம், அனுராதபுரத்திலிருந்த மகாமேகவண்ண பூங்காவில் இலங்கை அரசன் தேவநம்பியதீசன் என்பவனால் நடப்பட்டது.

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.