வாசவதத்தை, பௌத்தம்

வாசவதத்தை (Vasavadatta) (சமக்கிருதம்: वासवदत्ता, இந்தியாவின் சமசுகிருத மொழி காதல் கவிதை இலக்கியம் ஆகும். இந்நூல் கிபி ஏழாம் நூற்றாண்டில் கவிஞர் சுபந்து எனும் பௌத்த அறிஞரால் இயற்றப்பட்ட பௌத்த இலக்கியம் ஆகும்.[1] [2]கவிஞர் சுபந்து, (கிபி 385 - 465) குப்தப் பேரரசின் அவையில் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர் மான் சிங் கருதுகிறார். [3] வளர்ந்த, விரிவான, அலங்காரமான மற்றும் பகட்டான அமைப்பு கொண்ட இந்நூலின் தாக்கத்தால், பிந்தயை எழுத்தாளர்களின் காதல் வர்ணனையை மாற்றி அமைத்ததில் பெரும் பங்கு வகித்ததாக மான்சிங் கூறுகிறார். [3]

வாசவதத்தையின் விமர்சன நூலாக, கிபி பதினெட்டாம் நூற்றாண்டின் சிவராம திரிபாதி எழுதிய காஞ்சனதர்பணம் மற்றும் ஜெகத்தாரர் எழுதிய தத்துவதீபினி எனும் நூல்கள் வெளியாயின.

வாசவதத்தை நூலை 1913ல் லூயிஸ் ஹார்பெர்ட் கிரே என்பவர் சமசுகிருத மொழியிலிருந்து ஆங்கில மொழியில் மொழிபெயர்த்தார். இதனை ஏ. வி. வில்லியம் ஜாக்சன் திருத்தி வெளியிட்டார். [4]

நூல் சுருக்கம்

வட இந்தியாவின் மதுரா நகரத்தில் உபகுப்தர் பௌத்த சமயப் பிரச்சாரம் செய்து வந்தார். அவ்வூரின் விலைமகளான பேரழகி வாசவதத்தையின் பணிப் பெண், உபகுப்தரின் கட்டழகைக் கண்டு வியந்து, வாசவதத்தையிடம உபகுப்தரின் உடல் அழகை வருணித்துச் சொன்னாள். அது முதல் வாசவதத்தையின் மனம் உபகுப்தரை அடைய அலைபாய்ந்தது.

எனவே வாசவத்தை, உபகுப்தரை நேரில் தன் வீட்டிற்கு வருமாறு, தனது பணிப் பெண் மூலம் கடிதம் அனுப்பினாள். அதற்கு உபகுப்தர், நானே ஒரு நாள் உன்னைப் பார்க்க வேண்டிய நிலை வரும் என்று பதில் கடிதம் அனுப்பினார்.

ஒரு நாள் வாசவதத்தையின் வாடிக்கையாளர்களில் ஒரு பெரும் தனவாணிகன், வாசவத்தையின் வீட்டில் குருதி வெளியேறியவாறு இறந்து கிடந்தான். இச்செய்தி அறிந்த மதுரா மன்னரின் அரண்மனை வீரர்கள், நடைபெற்ற நிகழ்வை விசாரணை செய்யாது, வாசவதத்தையை கைது செய்தனர். வாசவதத்தை விலைமகள் என்பதால் பொருளுக்கு ஆசைப்பட்டு காதலனைக் கொன்றுவிட்டதாக மன்னரிடம் கூறினர்.

பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வழக்கம் இல்லை என்பதால், வாசவதத்தையின் முகம், மூக்கு, காது பகுதிகளை சிதைத்து, கூந்தலை மழித்து மொட்டையடித்து, உடலை சிதைத்து அலங்கோலப்படுத்தி, ஊரை விட்டு வெளியே விரட்டி விட மன்னர் ஆணையிட்டார். எனவே உடற்பாகங்கள் சிதைந்த நிலையில், அலங்கோலமான வாசவதத்தை, ஊருக்கு வெளியே உள்ள சுடுகாட்டில், தனக்கு நம்பிக்கையான பணிப்பெண்னுடன் வாழ்ந்து வந்தாள்.

இந்தச் செய்தி அறிந்த உபகுப்தர் வாசவதத்தை வசித்து வரும் சுடுகாட்டை அடைந்தார். வாசவதத்தையின் பணிப்பெண், உபகுப்தரை அடயாளம் கண்டு கொண்டு, வாசவதத்தைக்கு உபகுப்தரை அறிமுகம் செய்துவைத்தாள். உடலெல்லாம் உருக்குலைந்த நிலையில் உபகுப்தரைச் சந்திக்கும் படியாக நேரிட்டதால் மனம் கலங்கி கண்ணீர் வடித்தாள் வாசவதத்தை.

உபகுப்தர் சிறிதும் தயக்கமின்றி, வாசவதத்தை அருகில் அமர்ந்தார். அப்போது வாசவதத்தை இவ்வுடல் நன்னிலையில் இருக்கும் போது என்னை பாராது, வெறுக்கத்தக்க நிலையில் இருக்கையில் வந்தது குறித்து கண்ணீர் விட்டாள். அதற்கு உபகுப்தர், வாசவத்தைத் நோக்கி, இதுவே உன்னைப் பார்க்க வேண்டிய நேரம் என்று கூறினார். மானிடர் அனுபவிக்கும் இம்மைச் சுகங்களெல்லாம் அழியக்கூடியது என்பதை அறிந்து கொள் என வாசவதத்தைக்கு உபகுப்தர் உபதேசம் செய்தார்.

வாசவதத்தை துக்கம் நீங்கி, ஆறுதல் அடைந்து, பௌத்த சங்கத்தில் இணைந்து பிக்குணியாகி, சாந்தி பெற்று உயிர் நீத்தாள். [5]

மேற்கோள்கள்

  1. Keith, Arthur Berriedale (1993). A History of Sanskrit Literature, Delhi: Motilal Banarsidass, ISBN 81-208-1100-3, p.308
  2. https://books.google.co.in/books?id=2ZZpxKxcDNAC&pg=PA5&lpg=PA5&dq=Subandhu&source=bl&ots=1e2R12r-bb&sig=OMb8EAPg4J7ZJgn3sc0K014o7qM&hl=en&sa=X&ved=0ahUKEwiQj7eVrNLXAhUBsI8KHWYcAh4Q6AEIQDAE#v=onepage&q=Subandhu&f=false
  3. Singh, Maan (1993). Subandhu, New Delhi: Sahitya Akademi, ISBN 81-7201-509-7, pp. 9-11.
  4. Arthur Berriedale Keith (October 1914). "Vāsavadattā by Louis H. Gray". The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland: 1100–1104.
  5. [http://www.sacred-texts.com/bud/btg/btg81.htm VASAVADATTA, THE COURTESAN

மேலும் படிக்க

  • T. V. Srinivasachariar (1906). Vasavadatta of Subandhu, Trichinopoly, St. Joseph's College Press.
  • Louis Herbert Gray (1913). Vasavadatta: A Sanskrit Romance by Subandhu. 1965 reprint: ISBN 978-0-404-50478-6; 1999 reprint: ISBN 81-208-1675-7.
  • Jaydev Mohanlal Shukla (1966), Vāsavadatta of Subandhu, crit. ed., Jodhpur.
  • Bronner, Yigal (2010), Extreme Poetry, The South Asian Movement of Simultaneous Narration, New York, Columbia University Press. ISBN 978-0231151603


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.