அனகாரிக தர்மபால

அனகாரிக தர்மபால (Anagarika Dharmapala, சிங்களம்: අනගාරික ධර්මපාල, 17 செப்டெம்பர் 1864 - 29 ஏப்ரல் 1933), 20 ஆம் நூற்றாண்டில் புத்த சமயத்தின் இரண்டு முக்கியமான அம்சங்களைத் தொடக்கி வைத்ததில் முன்னணியில் இருந்தவர் ஆவார். இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக ஏறத்தாழ முற்றாகவே அழிந்த நிலையில் இருந்த புத்த சமயத்துக்கு அங்கே புத்துயிர் அளிப்பதில் முன்னோடியாக இருந்தார். தற்காலத்தில் ஆசியா, வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்களில் புத்த தர்மத்தைப் போதித்த முதல் பௌத்தரும் இவரே.

அனகாரிக தர்மபால
Anagarika Dharmapala
அனகாரிக தர்மபால
பிறப்புசெப்டம்பர் 17, 1864(1864-09-17)
கொழும்பு, பிரித்தானிய இலங்கை
இறப்புஏப்ரல் 29, 1933(1933-04-29) (அகவை 68)
சாரநாத், இந்தியா
தேசியம்இலங்கை
மற்ற பெயர்கள்டொன் டேவிட் ஹேவவிதாரண
இனம்சிங்களவர்
கல்விகிறித்தவக் கல்லூரி, கோட்டை,
கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரி,
முகத்துவாரம் புனித தோமையர் கல்லூரி,
கொழும்பு அக்காதெமி
அறியப்படுவதுஇலங்கை விடுதலை இயக்கம்,
பௌத்த மறுமலர்ச்சி
சமயம்தேரவாத பௌத்தம்
பெற்றோர்டொன் கரோலிசு ஹேவவிதாரண
மல்லிகா தர்மகுணவர்தன
கையொப்பம்

தற்காலத்தில், மணம் முடிக்காமல், புத்த சமயத்துக்காக முழுநேரம் உழைக்கும் ஒருவரே அனகாரிக என அழைக்கப்படுகிறார். தர்மபாலவே முதலாவது அனகாரிக ஆவார். இவர் தனது எட்டாம் வயதிலேயே மணம் செய்து கொள்வதில்லை என உறுதி எடுத்துக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இவ்வுறுதி மொழியை அவர் வாழ்நாள் முழுதும் காப்பாற்றினார். இவர் மஞ்சள் உடை தரித்தபோதும், இவர் ஒரு பிக்கு அல்ல. இவர் தனது தலையை மழித்துக் கொண்டதில்லை. மரபு வழியான துறவற ஒழுங்குகளைப் பின்பற்றுதல் தாம் எடுத்துக் கொண்ட வேலைகளுக்கு, குறிப்பாக, உலகப் பயணங்களின்போது, இடையூறாக இருக்கும் என அவர் கருதினார்.

வரலாறு

இவரது இயற்பெயர் டொன் டேவிட் ஹேவாவிதாரண. தந்தையார் டொன் கரோலிஸ் ஹேவாவிதாரண, தாயாரின் கன்னிப் பெயர் மல்லிகா தர்மகுணவர்த்தன. அப்போது இலங்கை பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் இருந்தது. பெரும்பாலான பாடசாலைகள் கிறிஸ்தவப் பாடசாலைகளாகவே இருந்தன. டொன் டேவிட்டும் ஒரு கிறிஸ்தவப் பாடசாலையிலேயே கல்வி பயின்றார். முதலில் கோட்டேயிலிருந்த கிறிஸ்தவக் கல்லூரியிலும் பின்னர் கொழும்பு அக்கடமியிலும் பயின்றார். அப்போது, இலங்கையில், தேசிய உணர்வு தலை தூக்கத் தொடங்கியது. இலங்கையின் வடக்கு, கிழக்குத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் புத்த மதத்துக்குச் சார்பான நிலைமைகள் தோன்றின. 1875 ஆம் ஆண்டு நியூ யார்க்கில், கர்னல் ஒல்கொட் எனபவரும், பிலவத்ஸ்கி அம்மையாரும், பிரம்மஞான சபையை (Theosophical Society) நிறுவினர். அவர்கள் இருவரும், புத்த மதத்தின்பால் ஈர்ப்புக் கொண்டிருந்தனர். 1880 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த அவர்கள் தங்களைப் பௌத்தர்களாக அறிவித்துக் கொண்டனர். ஒல்கொட் அடிக்கடி இலங்கைக்கு வந்து பௌத்த கல்வி வளர்ச்சிக்குத் தொண்டாற்றினார். இவர் 300 பௌத்த பாடசாலைகள் வரை நிறுவினார். இவற்றுட் சில இன்றும் உள்ளன. இளைஞனாக இருந்த தர்மபால, ஒல்கொட்டின் பணிகளில் உதவி வந்தார்.

தர்மபாலவின் சமயத் தொண்டு

ஒல்கொட்டுக்கு உதவி வந்த தர்மபால, பெரும்பாலும் அவருக்கு ஒரு மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டார். பிளவத்ஸ்கி அம்மையாரோடும் நெருங்கியவராக இருந்த தர்மபாலவுக்கு, பாளி மொழியைக் கற்கும்படி அம்மையார் ஆலோசனை வழங்கினார். இக் காலத்திலேயே இவர் தனது பெயரை, தர்மத்தின் காவலன் எனப் பொருள்படும், தர்மபால என்று மாற்றிக்கொண்டார்.

தர்மபால, 1891 ஆம் ஆண்டில், கௌதம புத்தர் ஞானம் பெற்ற இடமான புத்த காயாவில் உள்ள மகாபோதி கோயிலுக்கு யாத்திரை சென்றார். அப் பௌத்த கோயில், சைவக் குருவானவருடைய பொறுப்பில் இருந்ததையும், அங்கிருந்த புத்தர் சிலை இந்துக் கடவுளாக மாற்றி வணங்கப்பட்டு வந்ததையும், பௌத்தர்கள் வணங்குவதற்கு அனுமதிக்கப்படாததையும் தர்மபால கண்டார். இதனை எதிர்த்துப் பிரச்சார இயக்கமொன்றை அவர் தொடங்கினார்.

1891 இலேயே மகாபோதி சங்கம் கொழும்பில் தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டில் அதன் அலுவலகங்கள் கல்கத்தாவுக்கு மாற்றப்பட்டன. புத்த காயாவிலுள்ள மகாபோதி கோயிலின் கட்டுப்பாட்டைப் பௌத்தர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது இச் சங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. இந் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் பல நூற்றாண்டுகளாக அக் கோயிலின் கட்டுப்பாட்டைத் தம் வசம் வைத்திருந்த சங்கராச்சாரியார் மடத்தின் மீதும், அதன் தலைவர் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டது. இது உடனடியான பலன் எதுவும் கொடுக்காவிட்டாலும், இந்திய விடுதலைக்குப் பின்னர் 1949 ஆம் ஆண்டில் இவர்களது கோரிக்கைக்கு அரைகுறை வெற்றி கிடைத்தது.

1893 ஆம் ஆண்டில் சிக்காகோவில் நடைபெற்ற உலகச் சமயங்களின் பாராளுமன்றத்துக்கு, தேரவாத புத்த சமயத்தில் சார்பாளராக அழைக்கப்பட்டார். இவர் தனது முப்பதுகளின் தொடக்கத்திலேயே உலகம் அளவில் இயங்கும் ஒருவரானார். உலகம் முழுதும் பயணம் செய்து விரிவுரைகள் ஆற்றியதுடன், விகாரைகளையும் நிறுவினார். இத் தொண்டு அடுத்த 40 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது. அதே வேளை, இலங்கையில் பாடசாலைகளையும், மருத்துவ நிலையங்களையும் நிறுவியதுடன் இந்தியாவிலும் பௌத்த கோயில்களையும், விகாரைகளையும் நிறுவினார். இவற்றுள் முக்கியமானது, புத்தர் முதன் முதலாக உபதேசம் செய்ததாகக் கருதப்படும் சாரநாத் என்னும் இடத்தில் அவர் அமைத்த கோயில் ஆகும். சாரநாத்தில் 1933 ஆம் ஆண்டில் பிக்குவாக ஆன தர்மபால அங்கேயே, அதே ஆண்டில், தனது அறுபத்து ஒன்பதாவது வயதில் காலமானார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.