சமால் கார்கி

சமால் கார்கி (Jamal Garhai) என்பது வடக்கு பாக்கிசுத்தானின் மாகாணமான கைபர் பக்துன்குவாவில் உள்ள மர்தானில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பண்டைய காந்தாரப் பண்பாட்டுக்குரிய களம் ஆகும். இந்தியத் துணைக்கண்டத்தின் இப்பகுதியில் புத்த மதம் செழிப்புற்றிருந்த காலத்தில், கிபி முதலாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டு வரை சமால் கார்கி, பௌத்த விகாரையாக இருந்தது. இங்கே ஒரு அழகிய துறவி மடமும், முதன்மைத் தாதுகோபமும் அதைச் சூழச் சிறிய சைத்தியங்களும் நெருக்கமாக அமைந்திருந்தன.[1]

புத்தரின் கருத்துருவைக் காட்டும் தாதுகோபக் கற்பலகை: அரசி மாயா, வெள்ளை யானை தனது வலது பக்கம் நுழைவதைக் கனவு காணல், கிபி 100-300, இளகல் தீப்பாறைக்கற் சிற்பம், பிரித்தானிய அருங்காட்சியகம்

கண்டுபிடிப்பு

சமால் கார்கியின் அழிபாடுகள் 1848ம் ஆண்டில், பிரித்தானியத் தொல்லியலாளரான அலெக்சாண்டர் கன்னிங்காம் என்பவரால் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. தாது கோபுரம், கர்னல் லும்சுடன் என்பவரால் வெளிப்படுத்தப்பட்டது. ஆனாலும் அக்காலத்தில் பெறுமதியான எதுவும் கிடைக்கவில்லை. 1871ல் இக்களம் லெப்டினன்ட் குரொம்டன் என்பவரால் அகழ்வாய்வு செய்யப்பட்டபோது, பெருந்தொகையான புத்தர் சிலைகள் கிடைத்தன. இவை இப்போது பிரித்தானிய அருங்காட்சியகத்திலும்,[2] கொல்கத்தாவில் உள்ள அருங்காட்சியகத்திலும் உள்ளன. இக்களத்தில் கரோசுட்டி மொழிக் கல்வெட்டு ஒன்றும் கிடைத்தது. இது இப்போது பெசாவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சிதிலமடைந்த பௌத்தச் சின்னங்கள்

எஞ்சிய பௌத்த சிற்பங்கள்

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.