சிந்துவின் வரலாறு

சிந்து வரலாறு (History of Sindh) (சிந்தி: سنڌ, உருது: سندھ, இந்தி: सिन्ध) பாகிஸ்தான் நாட்டின் மாகாணங்களில் ஒன்றாகும். 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிந்து பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்த போது சிந்துவெளி நாகரீகம் கண்டறியப்பட்டது. ஆரியர்கள் சிந்து பகுதிகளில் வாழ்ந்த காலத்தில் இந்து சமய வேதங்கள் வெளிப்பட்டது. பாரசீகர்கள் சிந்து பகுதியையும், சிந்து ஆற்றையும் இந்த் என்று அழைத்தனர். இதனால் பரத கண்டத்தை ஆண்ட தில்லி சுல்தான்களும், முகலாயர்களும் இந்துஸ்தான் என்று அழைக்க காரணமாயிற்று. இதன் அடிப்படையில், பிரித்தானிய கம்பெனி ஆட்சியாளர்கள் இந்தியத் துணைக்கண்டத்திற்கு இந்தியா என்று பெயரிட்டனர். சிந்துவில் பாயும் வற்றாத சப்த நதிகளில் நீண்ட சிந்து ஆறு சிந்து பகுதியை வளமாக வைத்துள்ளது. [1] [2]

வரலாறு

பண்டைய காலம்

தற்கால நாடுகளின் எல்லைகளைக் காட்டும் படத்தில் சிந்துவெளி நாகரிகத்தின் அமைவைக் காட்டும் படம்
பிந்தைய வேதகாலத்தில் சிந்துவின் அமைவிடம்

கி மு 7,000 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துவெளி நாகரீக காலத்திய அரப்பா, மெஹெர்கர் நகரக் குடியிருப்புகள் சிந்து மாகாணத்தில் அகழ்வாராய்ச்சிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சிந்து பகுதிகளில் கி மு 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய வேத கால பண்பாடு செழித்து விளங்கியது.

ஆரியர்கள் சிந்து மற்றும் அதன் அண்டைப் பகுதிகளில் வாழ்ந்த காலத்தில் வேதங்கள் வெளிப்பட்டது. வேத இலக்கியங்கள், சிந்து ஆறு கடலில் கலக்கும் இடத்தை பெருங்கடல் என்று குறித்துள்ளது.

சிந்துப் பகுதியை அசிரியர்கள் சிந்தா என்றும், பாரசீகர்கள் இந்த் என்றும், கிரேக்கர்களும், ரோமானியர்களும் சிந்தஸ் என்றும், சீனர்கள் சிந்தௌ என்றும், அரேபியர்கள் சிந்த் என்றும் அழைத்தனர். மகாபாரத காவியத்தில் சிந்து நாட்டின் மன்னராக ஜெயத்திரதனைக் குறிப்பிடுகிறது. பண்டைய சிந்து நாட்டின் அண்மை நாடுகளாக சௌவீர நாடு மற்றும் சிவி நாடுகள் விளங்கின.

கி மு 6ஆம் நூற்றாண்டில் அகாமனிசியப் பேரரசின் பாரசீகப் பேரரசர் சிந்து பகுதியை வென்று, சிந்து பகுதியை பாரசீகப் பேரரசின் ஒரு மாகாணமாகக் கொண்டார். பாரசீகர்கள் சிந்துவை இந்து என்றே அழைத்தனர்.

கி மு 323இல் கிரேக்கப் பேரரசர் அலெக்சாண்டர் சிந்து பகுதியைக் கைப்பற்றினார். அலெக்சாண்டரின் மறைவுக்குப் பின்னர் ஹெலனிய காலத்தில் கிரேக்கப் படைத்தலைவர் செலுக்கஸ் நிக்கோடர் நிறுவிய செலூக்கியப் பேரரசில் சிந்து பகுதி ஒரு மாகாணமாக விளங்கியது.

கி மு 305இல் சந்திரகுப்த மௌரியர் காலத்தில் சிந்து பகுதியை செலூக்கியப் பேரரசிடமிருந்து கைப்பற்றி மௌரியப் பேரரசில் இணைத்துக் கொண்டார்.

அசோகர் காலத்தில் சிந்து பகுதி பௌத்தர்களின் சிறந்த வாழ்விடங்களில் ஒன்றாக விளங்கியது. கி மு 232இல் மௌரியர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் சிந்து பகுதி கிரேக்க பாக்திரியர்களின் கையில் வீழ்ந்தது. மேலும் கிரேக்க பாக்திரியா ஆட்சியாளர்களும், மக்களும் பௌத்த சமயத்திற்கு மதம் மாறி, பௌத்த சமயத்தைப் பரப்பினர்.

கிரேக்க பாக்திரியர்களை வென்ற சிதியர்கள் சிந்து பகுதியை ஆண்டனர். கி பி முதல் நூற்றாண்டில் குசாணர்களின் பேரரசர் கனிஷ்கர் சிந்து பகுதியை கைப்பற்றி, பௌத்த சமயத்தைத் தழுவி, பௌத்த சமயத்தை பேரரசு முழுவதும் பரப்பினார்.

கி பி 3ஆம் நூற்றாண்டில் நடுவில் பாரசீகத்தின் சசானியர்களின் கீழ், இந்தோ சசானியர்கள் சிந்து பகுதியை ஆண்டனர்.

கி பி 4ஆம் நூற்றாண்டில் குப்தப் பேரரசின் கீழ் சிந்து மாகாணம் சென்றது. கி பி 5ஆம் நூற்றாண்டில் ஹெப்தலைட்டுகள் குப்த பேரரசை வென்று சிந்து மாகாணத்தைக் கைப்பற்றி ஆண்டனர். பின்னர் ரோர் பல நூற்றாண்டுகள் சிந்து மாகாணத்தை ஆண்டனர். ஹர்சப் பேரரசில் இருந்த சிந்து மாகாணம், பின்னர் ராய் வம்சத்தினரால் ஆளப்பட்டது. கி பி 632இல் அரோர் வம்சத்தினர், இராய் வம்சத்தவர்களை வென்று வடக்கில் முல்தான் முதல் தெற்கில் கட்ச் வரை ஆண்டனர்.

மத்திய கால வரலாறு

கி பி எட்டாம் நூற்றாண்டில் அரபு படையெடுப்பாளாரான சிரியாவின் முகமது பின் காசிம், சிந்து பகுதியை ஆண்ட இந்து மன்னர் இராஜா தாகிரை வென்றதால், உமையா கலீபகத்தின் கிழக்கு மாகாணமாக சிந்து பகுதி விளங்கியது.

கி பி பதிமூன்றாம் நூற்றாண்டின் நடுவில் பரத கண்டத்தின் சூம்ர வம்சத்தவர்களால் இராஜபுத்திர இசுலாமியர்களான சம்மா வம்சத்தவர்கள் வெல்லப்பட்டு, மீண்டும் சிந்து பகுதியில் இந்து இராச்சியம் உருவாகப்பட்டது.

ஆப்கானிய கஜினி முகமது மற்றும் கோரி முகமது ஆட்சியில் சிந்து பகுதி கொள்ளையடிக்கப்பட்டது. பின்னர் தில்லி சுல்தானகம் மற்றும் முகலாயப் பேரரசு காலத்தில் சிந்து மாகாணமாக விளங்கியது.

1747இல் அகமது ஷா துராணிப் பேரரசிற்கு கப்பம் செலுத்தும் நாடாக சிந்து இராச்சியம் விளங்கியது.

காலனியக் காலம்

1843இல் பிரிட்டிஷ் ராஜ் படைகள் சிந்துவைக் கைப்பற்ற, பஷ்தூன் இனத்தைச் சேர்ந்த முதலாம் ஆகா கான் உதவியதால், அவருக்கு இறக்கும் வரை ஆங்கிலேயர்கள் ஓய்வூதியம் அளித்தனர். பின்னர் ஆங்கிலேயர்கள் சிந்துப் பகுதியை , மும்பை மாகாணத்துடன் இணைத்தனர். பின்னர் 1936இல் பம்பாய் மாகாணத்திலிருந்து, சிந்துப் பகுதியை பிரித்து, தனி சிந்து மாகாணத்தை உருவாக்கினர்.

இந்தியப் பிரிவினைக்குப் பின்னர்

இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் சிந்து பகுதி பாகிஸ்தான் நாட்டின் ஒரு மாநிலமாக விளங்குகிறது. கராச்சி நகரம் சிந்து மாநிலத்தின் தலைநகராக உள்ளது. பாகிஸ்தானின் மிகப் பெரிய துறைமுகமாக கராச்சி துறைமுகம் இயங்குகிறது.

மொழிகள்

சிந்து வெளி பண்பாட்டுக் காலத்தில் சிந்து பகுதியில் பேசப்பட்ட மொழி குறித்து இதுவரை அறியப்படவில்லை. வேத காலத்தில் சமசுகிருதம், பிராகிருதம், பாலி பேசப்பட்டது. சமசுகிருதம் மற்றும் பாலி மொழியில் பல சமய இலக்கியங்கள் தோன்றியது. பண்டைய சிந்தி பழங்குடி மக்கள் சிந்தி மொழி, முண்டா மொழிகள் மற்றும் திராவிட மொழிகள் பேசினர்.

புகழ் பெற்றவர்கள்

மேற்கோள்கள்

  1. History of Sindh
  2. History of Sindh
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.