தில்லி சுல்தானகம்

தில்லி சுல்தானகம் என்பது 1206 ஆம் ஆண்டு முதல் 1526 ஆம் ஆண்டு வரை இந்தியாவை ஆண்ட பல்வேறு அரசுகளைக் குறிக்கும். பல்வேறு துருக்கிய, பஸ்தூனிய வம்சத்தினர் தில்லியில் இருந்து இந்தியாவை ஆண்டனர். இவற்றுள் மம்லுக் வம்சம் (1206-90), கில்சி வம்சம் (1290-1320), துக்ளக் வம்சம் (1320-1413), சையிது வம்சம் (1414-51), லோடி வம்சம் (1451-1526) என்பன அடங்கும். 1526 இல் முகலாயப் பேரரசு சுல்தானகத்தைத் தன்னுள் அடக்கிக்கொண்டது.

தில்லி சுல்தானகம்
دلی سلطنت
दिल्ली सलतनत

1206–1527
தில்லி சுல்தானகம் அமைவிடம்
தில்லி சுல்தானகத்தின் வரலாற்று நிலப்படம்
தலைநகரம் தில்லி
சமயம் சன்னி இசுலாம்
அரசாங்கம் முடியாட்சி
சுல்தான்
 -  1206-1210 குதுப்புத்தீன் ஐபாக்
 - 1517-1526 இப்ராகிம் லோடி
வரலாற்றுக் காலம் பிந்திய மத்தியகாலம்
 - உருவாக்கம் 1206
 - குலைவு 1527

மம்லுக்

குதுப் மினார் மம்லுக் சுல்தானகக் காலத்தில் கட்டப்பட்டது.

இந்தியாவின் இரண்டாவது முசுலிம் ஆக்கிரமிப்பாளர் முகம்மது கோரி அரசியல் நோக்கங்களைக் கொண்டிருந்தார். இவர் பிரித்திவிராஜ் சௌகானுடன் தாரைன் போர்கள் எனப்பட்ட இரண்டு போர்களில் ஈடுபட்டார். இரண்டாவது போரில் வெற்றிபெற்ற "முகம்மது கோரி" அப்பகுதியில் தனது கட்டுப்பாட்டை நிலை நிறுத்தினார். இந்த வம்சத்தின் பெரும்பாலான ஆட்சியாளர் தொடக்கத்தில் கோரியின் அடிமைகளாகவே இருந்ததால் இவ்வம்சம் அடிமை வம்சம் எனவும் அழைக்கப்படுவது உண்டு. "கோரி" குதுப்புத்தீன் ஐபக் என்பவரை இந்தியப் பகுதிகளுக்கு ஆளுனராக்கியதுடன் குதுப் மினாரையும் கட்டத் தொடங்கினார். எனினும் இது குதுப்புதீனுக்குப் பின் வந்த இல்துமிசு என்பவராலேயே கட்டி முடிக்கப்பட்டது. இல்துமிசுக்குப் பின்னர் ஆட்சியில் அமர்ந்தவர் பால்பன் என்பவர். இவருக்குப் பின்னர் இல்துமிசின் மகளான ராசியா சுல்தானா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் இவர் திறமை வாய்ந்த நிர்வாகியாகத் திகழ்ந்ததுடன், முசுலிம் உலகின் முதலாவது பெண் ஆட்சியாளராகவும் விளங்கினார். எனினும் துருக்கியப் பிரபுக்களின் எதிர்ப்புக் காரணமாக இவர் பதவி விலக நேரிட்டது. இதற்குப் பின்னர் பல திறமையற்ற, விரும்பப்படாத பல ஆட்சியாளர்கள் வந்து போயினர். ஆட்சிப் பகுதிகளில் ஏற்பட்ட புரட்சிகளாலும், பிரபுத்துவக் குடும்பங்களுக்கு இடையேயான எதிர்ப்பு உணர்ச்சிகளாலும் மம்லுக் வம்சம் 1290 இல் முடிவுற்றது.

கால்சி

கால்சி அல்லது கில்சி வம்சம் என அழைக்கப்படும் வம்சம் முகம்மது கோரியின் காலத்தில் தம்மை வங்காளத்தின் ஆட்சியாளர்களாக நிலைநிறுத்திக் கொண்டனர். இவர்கள் சதிப் புரட்சி மூலம் மம்லுக் ஆட்சியாளரை வெளியேற்றிப் பேரரசைக் கைப்பற்றினர். கால்சிகள் குசராத்தையும், மால்வாவையும் கைப்பற்றியதுடன், முதன்முதலாக நர்மதை ஆற்றுக்குத் தெற்கே தமிழ் நாடு வரையும் படை நடத்திச் சென்றனர். தில்லி சுல்தானகத்தின் ஆட்சி தொடர்ந்து தென்னிந்தியாவுக்குள் விரிவடைந்தது. முதலில் தில்லி சுல்தானகமும், பின்னர் அதிலிருந்து பிரிந்த குல்பர்கா பகுமானி சுல்தானகமும், பகுமானி சுல்தானகம் பிளவுபட்டு ஐந்து தனித்தனியான தக்காணச் சுல்தானகங்களாக ஆனபின் அவையும் தென்னிந்தியாவுக்குள் ஆட்சி நடத்தின. இக் காலத்தில் ஒன்றுபட்ட தென்னிந்தியா விசயநகரப் பேரரசின் தலைமையில் சில காலம் சுல்தானகங்களின் விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்தியது. எனினும் இறுதியில் விசயநகரப் பேரரசும் 1565 இல் தக்காணச் சுல்தானகங்களிடம் வீழ்ச்சியடைந்தது.

துக்ளக்

துக்ளக்காபாத்தில் உள்ள கியாத் அல்-தீன் துக்ளக்கின் சமாதி

துக்ளக் வம்சம் "காசி மாலிக்" எனவும் அறியப்பட்ட கியாசுத்தீன் துக்ளக் என்பவரால் நிறுவப்பட்டது. இவர் கால்சிகளின் கீழ் படைத் தளபதியாக இருந்தார். துக்ளக்குகள் ஆப்கானிசுத்தானைச் சேர்ந்த துருக்கிய இன மரபினர். எனினும் இவர்கள் நீண்ட காலம் இந்தியாவில் வாழ்ந்து பஞ்சாப் பகுதியின் ராசபுத்திரர், சாட்டுகள் போன்றோரோடு மண உறவும் கொண்டிருந்தனர். கியாசுத்தீனைத் தொடர்ந்து முகம்மது பின் துக்ளக் ஆட்சிக்கு வந்தார். இவர் உயர்ச்சியில் ஆர்வம் கொண்ட ஒருவர். பல வளர்ச்சித் திட்டங்களுக்கு இவரே மூல காரணமாக இருந்தார். எனினும் அதிட்டமின்மையாலும், சரியான திட்டம் இன்மையாலும் இவற்றுட்பல தோல்வியடைய நேரிட்டது. மத விடயங்களில் தாராண்மையை இவர் கடைப்பிடித்தார். சமூகத்தின் மரபுவாதம் சாராத, துருக்கியச் சார்பற்ற பிரிவுகளை இவர் விரும்பினார். இவரது ஆட்சிக் காலத்தின் தாயக முசுலிம்கள் பலம் வாய்ந்த பதவிகளுக்கு உயர்ந்தனர்.

இவரது வாரிசான ஃபைரூசு கான் சா முகம்மது பின் துக்ளக்கின் கொள்கைகளை முற்றாக மாற்றினார். இவர் மரபுவாத சுன்னி முசுலிமாகவும், மதம் தொடர்பில் குருட்டுப் பிடிவாதம் கொண்டவராகவும் இருந்தார். இந்துக்களையும், சியா முசுலிம்களையும் ஒடுக்கினார். தாயக முசுலிம்கள் மீது எதிர்ப்புணர்ச்சி கொண்டவராகவும் இவர் இருந்ததுடன், அரச பதவிகள் பரம்பரை வழி தொடர்வதற்கும் ஏற்பாடு செய்தார். இதனால், ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருக்கும் முசுலிம்கள் உயர் பதவிகளுக்கு வருவது முடியாமல் போனது. இவரது இறப்புக்குப் பின் பேரரசின் வலு பெருமளவு குறைந்து போனது.

நாணய முறைமை

MALWAR SULTHAN 1
முகமது பின் துக்ளக்கினால் வெளியிடப்பட்ட ஒரு நாணயம்

14 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் சுல்தானகம் நாணயப் பொருளாதாரத்தை மாகாணங்களிலும், மாவட்டங்களிலும் அறிமுகப் படுத்தியது. நாட்டுப்புறப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும், அவற்றிலிருந்து பயன்பெறுவதற்கும் அவற்றைப் பரந்த பண்பாட்டுப் புலத்துக்குள் கொண்டுவருவதற்கும் சந்தை மையங்கள் வலைப்பின்னல்களாக நிறுவப்பட்டன. அரச வருமானம் வெற்றிகரமான வேளாண்மையிலேயே பெரிதும் தங்கியிருந்தது. இதுவே, ஊர்களில் கிணறுகளை வெட்டுதல், விவசாயிகளுக்கு விதைகளை வழங்குதல், கரும்பு போன்ற வணிகப் பயிர்களை உற்பத்தி செய்வதற்கு ஊக்குவித்தல் போன்ற முகம்மது பின் துக்ளக்கின் திட்டங்களுக்குத் தூண்டுகோலாக இருந்தது.

பெண் ஆட்சியாளர்

தில்லி சுல்தானகமே பெண் ஆட்சியாளர் ஒருவரைக் கொண்டிருந்த சுல்தானகம் ஆகும். ராசியா சுல்தானா (1236-1240) என்னும் இவர் இந்தியாவின் மிகக் குறைவான பெண் ஆட்சியாளர்களில் ஒருவர். இவரது ஆட்சிக்காலம் மிகக் குறுகியதாக இருந்தாலும் வரலாற்றாளர்கள் இவரை மதிப்புடனேயே நோக்குகிறார்கள். இளவரசி ராசியா சுல்தானா பெயர் பெற்றவராகவும் அவரது உடன்பிறந்தோரிலும் புத்திக் கூர்மை உடையவராகவும் விளங்கினார். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றில் முதல் முசுலிம் பெண் ஆட்சியாளராக விளங்கியவர் இவரே. கிழக்கே தில்லியிலிருந்து மேற்கே பெசாவர் வரையும், வடக்கே காசுமீரில் இருந்து தெற்கே முல்தான் வரையும் இவரது நாடு பரந்திருந்தது. இவரது அரசுக்குள் இருந்த இவரது எதிர்ப்பாளர்கள் இவரையும் இவரது கணவரையும் கொன்று தில்லிக்கு வெளியே புதைத்துவிட்டனர்.

மங்கோலியர் ஆக்கிரமிப்புகள்

தில்லி சுல்தான்கள் அண்மைக் கிழக்கில் உள்ள முசுலிம் ஆட்சியாளர்களுடன் நல்ல உறவுகளைக் கொண்டிருந்தபோதும் அவர்களுடன் கூட்டு எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. சுல்தானகங்களின் சட்டங்கள் குரானையும், சரீயத்தையும் அடிப்படையாகக் கொண்டிருந்தன. முசுலிம் அல்லாத குடிமக்கள் தமது மதத்தைப் பின்பற்றுவதற்குத்தடை இருக்கவில்லை எனினும், பிற மதங்களைப் பின்பற்றுபவர்களுக்குத் தலை வரி விதிக்கப்பட்டது. சுல்தான்கள் நகர மையங்களிலிருந்து ஆட்சி செய்தனர். அதேவேளை நாட்டுப்புறங்களில் உருவாகிய நகரங்களுக்கான மையங்களாகப் படைமுகாம்களும், வணிகப் பகுதிகளும் விளங்கின. சுல்தானகங்களின் மிகப்பெரிய பங்களிப்பு, துணைக்கண்டத்தை, 13 ஆம் நூற்றாண்டில், தற்காலிகமாக மத்திய ஆசிய மங்கோலியர்களின் படையெடுப்பில் இருந்து பாதுகாத்தமை ஆகும். எனினும், 1398 ஆம் ஆண்டின் தைமூரின் ஆக்கிரமிப்பு தில்லி சுல்தானகத்தின் வலிமையைப் பெரிதும் பாதித்தது.

சுல்தானகத்தின் வீழ்ச்சி

சுல்தானகத்தை ஆண்ட கடைசி வம்சம் லோடி வம்சம் ஆகும். இந்த வம்சத்தின் கடைசி ஆட்சியாளரான இப்ராகிம் லோடி அவரது அரசைச் சேர்ந்தோராலும், குடிமக்களாலும் பெரிதும் வெறுக்கப்பட்டார். இதனால், பஞ்சாப்பின் ஆளுனராக இருந்த தௌலத் கானும், அவரது மாமனாரான ஆலம் கானும் இந்தியாவைக் கைப்பற்றும்படி காபுலை ஆண்டுவந்த பாபருக்கு அழைப்பு விடுத்தனர்.

ஏப்ரல் 1526 இல் இடம்பெற்ற முதலாவது பானிப்பட் போரில் பாபர் வெற்றிபெற்றார். இப்ராகிம் லோடி போர்க்களத்தில் கொல்லப்பட்டார். பாபர் ஆக்ராவையும், தில்லியையும் கைப்பற்றிக் கொண்டார். இதன் மூலம் பின்னர் 300 ஆண்டுகள் இந்தியாவில் ஆட்சி நடத்திய முகலாய வம்சத்தையும் தொடக்கி வைத்தார்.

தில்லி சுல்தானகத்தின் காலப்பகுதி இந்தியாவின் பண்பாட்டு எழுச்சியின் காலப் பகுதி ஆகும். இந்து-முஸ்லிம் பண்பாட்டுக் கலப்பு நிலைத்த விளைவுகளைக் கட்டிடக்கலை, இசை, இலக்கியம், மதம் ஆகியவற்றில் ஏற்படுத்தியது. 1398 ஆம் ஆண்டின் தைமூரின் படையெடுப்புக்குப் பின் சுல்தானகத்தின் வலு குறைந்துபோனது. அவத், வங்காளம், சவுன்பூர், குசராத், மால்வா ஆகிய இடங்களில் சுதந்திரமான சுல்தானகங்கள் நிறுவப்பட்டன. எனினும், முகலாயர்களால் கைப்பற்றப்படுவதற்கு முன், லோடி வம்சத்தினரின் கீழ் தில்லி சுல்தானகம் சிறிதுகாலம் நல்ல நிலையில் இருந்தது.

மேற்கோள்கள்

    • இந்தக் கட்டுரையில் Library of Congress Country Studies ஆய்விலிருந்து விதயங்கள் பெறப்பட்டுள்ளன, இவை ஐக்கிய அமெரிக்க கூட்டாட்சி அரசின் பொது பரப்பில் உள்ள பிரசுரங்கள். பார்க்க நாடு ஆய்வு, பாகிஸ்தான்
    • Fernand Braudel, The perspective of the World, vol III of Civilization and Capitalism 1984 (original French ed. 1979)

    புத்தகங்கள்

    வெளியிணைப்புக்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.