காஷ்மீர்
காசுமீர் (கசுமீரி: कॅशीर, کٔشِیر ; இந்தி: कश्मीर ; உருது: کشمیر) இந்திய துணை கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ளது. ஆதியில், இமயத்திற்கும் பிர் மலைத் தொடருக்கும் இடையே உள்ள பள்ளத்தாக்கே காசுமீர் எனப்பட்டது.


இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காசுமீர், சம்மு, காசுமீர் மற்றும் லடாக் ஆகிய மூன்று பகுதிகளையும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர், ஆசாத் காஷ்மீர் மற்றும் வடக்கு நிலங்கள் ஆகிய இரண்டு பகுதிகளையும் கொண்டுள்ளது. அக்சாய் சின் என்றழைக்கப்படும் பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. மலைப் பாங்கான இடங்களுக்கு கீழ் உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல ஆறுகளும் அருவிகளும் பாய்வதால், இப்பகுதியின் இயற்கை வளம் அழகுடன் காட்சி அளிக்கிறது.
பல காலங்களாக, இந்துக்களின் பிரதான வழிபாட்டுத் தலமாகவே காசுமீர் கருதப்படுகிறது. பிற்காலத்தில் புத்த மதம் முக்கியத்துவம் பெற்று, இன்றும் காசுமீர சைவம் மற்றும் இஸ்லாமியத்திற்கும் இடையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
வரலாறு
காஷ்மீர் சமவெளியை மௌரியர்கள் கி மு 322 முதல் கி மு 185 முடியவும்; குசானர்கள் கி மு 30 முதல் கி பி 375 முடியவும்; காபூல் இந்து சாகிகள் கி பி 500 முதல் 1010 முடியவும்; லெகரா இந்து அரச குலத்தினர் 1003 முதல் 1320 முடியவும் ஆண்டனர். பின்னர் தில்லி சுல்தான்கள், முகலாயர்களும், இறுதியாக காஷ்மீர் இந்தியாவுடன் இணைப்பதற்கு முன் வரை தோக்ரி மொழி பேசும் இராசபுத்திர இந்து மன்னர்கள், பிரித்தானிய இந்தியாவின் மேலாண்மையை ஏற்ற் பகுதியாக ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தை 6 மார்ச் 1846 முதல் 17 நவம்பர் 1952 முடிய ஆண்டனர்.
இந்தியப் பிரிவினையின் போது, காஷ்மீரின் மேற்கு பகுதிகளை, பாகிஸ்தான் இராணுவ ஆதரவுடன் வடமேற்கு எல்லைப்புற மாகாண மக்கள் தாக்கி கைப்பற்றி ஆசாத் காஷ்மீர் என்ற பகுதியை நிறுவினர்.
இந்தியப் பிரிவினை முதல், தற்போது வரை காஷ்மீர் பிரச்சினை ஆறாத புண்ணாகவே உள்ளது.
போர்கள்
காஷ்மீர் பிரச்சினை குறித்து இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே, 1947, 1965 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் மூன்று போர்கள் நடந்துள்ளது.