மம்லூக்கிய மரபு (தில்லி)

மம்லூக் வம்சம் அல்லது குலாம் வம்சம் (உருது: غلام خاندان, இந்தி : ग़ुलाम ख़ानदान) என்பது, மத்திய ஆசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட துருக்கத் தளபதியான குதுப்புத்தீன் ஐபாக் என்பவரால் இந்தியாவில் நிறுவப்பட்டது. இவ்வம்சம் 1206 முதல் 1290 வரை தில்லி சுல்தானகத்தை ஆண்ட ஒன்றுக்கொன்று தொடர்பற்ற ஐந்து வம்சங்களுள் முதலாவது ஆகும்.[1][2] இவ்வம்சத்தைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் பலர் முன்னர் கோரி அரச மரபில், அடிமைகளாக இருந்தமையால் இவ்வம்சம் தில்லி அடிமை வம்சம் எனவும் அழைக்கப்படுவது உண்டு. கோரி அரசனால் அவரது இந்தியப் பகுதிகளுக்கு நிர்வாகியாக நியமிக்கப்பட்ட ஐபாக், 1192 முதல் 1206 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், இந்தியாவின் கங்கைச் சமவெளி வரை படை நடத்திப் பல புதிய பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.[2] கோரி மன்னன் கொலை செய்யப்பட்டபோது, தில்லியில் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகளுக்குத் தானே ஆட்சியாளரானார்.[3] எனினும் தில்லியின் சுல்தானாக இவரது ஆட்சிக்காலம் குறுகிய காலமே இருந்தது. 1210 ஆம் ஆண்டில் ஐபாக் காலமானார். இவரைத் தொடர்ந்து அவரதுமகனான அராம் சா அரியணையில் அமர்ந்தார். எனினும் 1211 ஆம் ஆண்டில் இல்த்துத்மிசு என்பவர் புதிய சுல்தானைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினார்.

பல்பான் காலத்து நாணயம்
குதுப் மினார், மம்லூக் வம்சத்தினரின் கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
இல்த்துத்மிசின் காலத்தில் தில்லி சுல்தானகத்தின் அளவைக் காட்டும் நிலப்படம்

இல்த்துத்மிசின் ஆட்சியில் 1228க்கும் 29க்கும் இடையில், தில்லி சுல்தானகம், அப்பாசியக் கலீபகங்களோடு நல்லுறவு கொண்டிருந்தது. இதனால் கெங்கிசுக் கானின் படையெடுப்புக்கள் இந்தியாவைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள முடிந்தது[2] 1236 ஆம் ஆண்டில் இல்த்துத்மிசு இறந்ததும் பலமற்ற ஆட்சியாளர்கள் சிலகாலம் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தனர். அக்காலத்தில் பல பிரபுக்களும் சுல்தானகத்தின் சில பகுதிகளில் தன்னாட்சியை நடத்தி வந்தனர். ஆட்சி, ருக்கினுத்தீன் ஃபைரூசு என்பவரிடம் இருந்து,ராசியா சுல்தானாவுக்கும், பின்னர் கியாசுத்தீன் பல்பான் என்பவருக்கும் கைமாறியது. பல்பான் வெற்றிகரமாக உள்நாட்டிலும், வெளியிலும் இருந்து சுல்தானகத்துக்கு ஏற்பட்டிருந்த அச்சுறுத்தல்களை வெற்றிகரமாகக் களைந்தெறிந்தார்[2][3] இந்த வம்சத்தின் கடைசி சுல்தான் முயிசுத்தீன் கைக்காபாத் என்பவராவார். பல்பானின் பேரனான இவர் காலத்தில், சலாலுத்தீன் பைரூசு கில்சி என்பவர் தில்லி சுல்தானகத்தைக் கைப்பற்றி மம்லூக் வம்சத்தினரை ஆட்சியில் இருந்து அகற்றிப் புதிய கில்சி வம்சத்தை நிறுவினார்.[4]

வரலாறு

மம்லூக், அதாவது சொந்தமானது என்று பொருள், அடிமை வம்சாவளியைச் சேர்ந்த இராணுவச் வீரர், ஒருவர் இசுலாமிற்கு மாறினார். இந்த நிகழ்வு 9 ஆம் நூற்றாண்டில் தொடங்கி மேலும் படிப்படியாக பல்வேறு முசுலீம் சமூகங்களில் மம்லூக் ஒரு சக்திவாய்ந்த இராணுவ சக்தியாக மாறியது. மம்லூக் அரசியல் மற்றும் இராணுவ அதிகாரத்தை குறிப்பாக எகிப்தில் மட்டுமல்லாமல், லெவண்ட், ஈராக் மற்றும் இந்தியாவிலும் கொண்டிருந்தனர்.

1206 இல், கோரி பேரரசின் சுல்தானான கோரி முகம்மது படுகொலை செய்யப்பட்டார்.[5] அவருக்கு குழந்தைகள் இல்லாததால், அவரது பேரரசு அவரது முன்னாள் மம்லூக் தலைவர்கள் தலைமையிலான சிறு சுல்தான்களாகப் பிரிந்தனர். தாஜ்-உத்-தின் எல்துஸ் கசினியின் ஆட்சியாளராகவும், முகம்மது பின் பக்தியார் கில்ஜிக்கு வங்காளமும், நசீர்-உத்-தின் கபாச்சா முல்தானின் சுல்தானாகவும் ஆனார்கள். குதுப் உத்-தின் ஐபக் டெல்லியின் சுல்தானானார், அதுவே அடிமை வம்சத்தின் தொடக்கமாகும்.

ஒரு கோரி மேலதிகாரி படுகொலை செய்யப்பட்டபோது ஐபக் அதிகாரத்திற்கு வந்தார்.[3] இருப்பினும், டெல்லி சுல்தானாக அவரது ஆட்சி குறுகிய காலமே நீடித்தது. 1210 இல் ஐபக் இறந்ததால் அவரது மகன் அராம் ஷா அரியணை ஏறினார், இவரும் 1211 இல் இல்துதுமிசுவால் படுகொலை செய்யப்பட்டார்.

இல்துதுமிசுவின் கீழ் சுல்தானகத்தில் அப்பாசிய கலிபகத்துடன் சுமூகமான தூதரக தொடர்பு நிறுவப்பட்டது. 1228-1229 க்கு மிடையே இந்தியா மீது செங்கிஸ்கான் மற்றும் அவரது வழித்தோன்றல்களின் படையெடுப்பால் பாதிக்கப்படாமல் வைத்துக் கொண்டனர்.[2] 1236 இல் இல்துதுமிசு இறந்ததைத் தொடர்ந்து பல பலவீனமான ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்தனர் மற்றும் பல பிரபுக்கள் சுல்தானகத்தின் மாகாணங்களில் சுயாட்சியைப் பெற்றனர். கியாசுத்தின் பால்பன் அரியணைக்கு வரும் வரை இருக்னுன் தின் பிரூஸிலிருந்து ரசியா சுல்தானாவிற்கு அரசாட்சியை மாற்றி, சகதை கானேடு படையெடுப்புகளிலிருந்து சுல்தானக்கதிற்கு வெளிப்புற அச்சுறுத்தல்களிருந்தும் கிளர்ச்சி செய்த சுல்தானக பிரபுக்களிடமிருந்தும் வந்த அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை வெற்றிகரமாக விரட்டினார்.[3] ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜி , அடிமை அரச வம்ச ஆட்சியாளரான முயிசுதீன் கைகாபாத் என்பவரை வீழ்த்தியபின் கில்ஜி வம்சம் உருவானது .இவர் பால்பானின் பேரனாவார், மேலும் தில்லி மணிமகுடம் முடிசூட்டிக்கொண்டார்.[4]

மம்லுக் வம்சத்தின் முதல் சுல்தான் குதுப் உத்-தின் ஐபக் ( قطب الدین ایبک ), இவர் சுல்தான் ( سلطان ) என்ற பெயரைக் கொண்டிருந்தார் மற்றும் 1206 முதல் 1210 வரை ஆட்சி செய்தார். முல்தானின் நசீர்-உத்-தின் கபாச்சா மற்றும் கசினியின் தாசுதீன் இல்தோஸ் ஆகியோரின் கிளர்ச்சிகளை அவர் தற்காலிகமாகத் அடக்கினார். இலாகூரை தனது தலைநகராக மாற்றிய அவர், தில்லி மீதான நிர்வாகப் பிடிப்பின் மூலம் வட இந்தியா மீதான தனது கட்டுப்பாட்டை பலப்படுத்தினார். டெல்லியின் ஆரம்பகால முசுலீம் நினைவுச்சின்னங்கள், குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதி மற்றும் குதுப் மினார் ஆகியவற்றின் கட்டுமானத்தையும் அவர் தொடங்கினார். 1210 ஆம் ஆண்டில், லாகூரில் போலோ விளையாட்டை விளையாடும்போது விபத்தில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் இறந்தார்; அவரது குதிரை விழுந்தது, அவர் தனது சேணத்தின் பொம்மலில் குத்தப்பட்டார். அவர் லாகூரில் உள்ள அனார்கலி பஜார் அருகே அடக்கம் செய்யப்பட்டார்.

இரண்டாவது சுல்தான் அராம் ஷா ( آرام شاہ ), இவர் சுல்தானின் பெயரைக் கொண்டிருந்தார் மற்றும் 1210 முதல் 1211 வரை ஆட்சி செய்தார். சிஹல்கானி ("நாற்பது") என்ற நாற்பது பிரபுக்கள் கொண்ட ஒரு உயரடுக்கு குழு அராம் ஷாவுக்கு எதிராக சதி செய்து, அராமை மாற்றுவதற்கு அப்போதைய பதாவுன் ஆளுநராக இருந்த சம்சுத்தீன் இல்த்துத்மிசுவை அழைத்தது. 1211 இல் டெல்லிக்கு அருகிலுள்ள ஜுட் சமவெளியில் இல்த்துத்மிசு அராமை தோற்கடித்தார். அராமுக்கு என்ன ஆனது என்பது உறுதியாகத் தெரியவில்லை.

கட்டிடக்கலை

மெகரௌலி என்னும் இடத்தில், குதுப் தொகுதியில் உள்ள இல்த்துத்மிசின் சமாதி

இவ் வம்சத்தினரின் கட்டிடக்கலைப் பங்களிப்பாகச் சில எடுத்துக்காட்டுகள் உள்ளன. குதுப்புத்தீன் ஐபாக்கினால் கட்டப்பட்ட மெகரௌலியில் உள்ள குதுப் மினார், வசந்த்கஞ்ச் அருகில் உள்ள சுல்தான்காரி, இல்த்துத்மிசின் மூத்த மகனன நசிருத்தீன் மகுமூத்துக்காகக் கிபி 1231 ஆம் ஆண்டில் கட்டப்பட இந்தியாவின் முதலாவது இசுலாமியச் சமாதிக் கட்டிடம், மெகரௌலியில் தொல்லியல் பூங்காவில் அமைந்துள்ள பல்பானின் சமாதி என்பன இவற்றுள் அடங்கும்.

ஆட்சியாளர் பட்டியல்

  • குதுப்புத்தீன் ஐபாக் (1206–1210)
  • அராம் சா (1210–1211)
  • சம்சுத்தீன் இல்த்துத்மிசு (1211–1236), குதுப்புத்தீன் ஐபாக்கின் மகளின் கணவர்
  • ருக்கினுத்தீன் ஃபைரூசு (1236), இல்த்துத்மிசின் மகன்
  • ராசியாத்துத்தீன் சுல்தானா (1236–1240), இல்த்துத்மிசின் மகள்
  • முயிசுத்தீன் பகராம் (1240–1242), இல்த்துத்மிசின் மகன்
  • அலாவுதீன் மசூத் (1242–1246), ருக்னுத்தீனின் மகன்
  • நசிருத்தீன் மகுமூத் (1246–1266), இல்த்துத்மிசின் மகன்
  • கியாசுத்தீன் பல்பான் (1266–1286), பழைய அடிமை. இல்த்துத்மிசின் மகளின் கணவர்
  • முயிசுத்தீன் கைக்காபாத் (1286–1290), பல்பானினதும், நசிருத்தீனினதும் பேரன்

குறிப்புகள்

  1. Walsh, pp. 68-70
  2. Anzalone, p. 100
  3. Walsh, p. 70
  4. Anzalone, p. 101
  5. Nafziger, George F.; Walton, Mark W. (2003). Islam at War: A History. Praeger Publishers. பக். 56.

உசாத்துணைகள்

மேலும் அறிய

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.