குத்புத்தீன் ஐபக்
குத்புத்தீன் ஐபக் (பாரசீகம் / உருது: قطب الدین ایبک) மத்திய கால இந்தியாவில் ஆட்சி செய்த ஒரு துருக்கிய ஆட்சியாளர் ஆவார். இவர் தில்லியின் முதல் சுல்தானும், தில்லி அடிமை வம்சம் அல்லது குலாம் வம்சம் என அழைக்கப்படும் வம்சத்தைத் தோற்றுவித்தவரும் ஆவார். இவர் 1206 ஆம் ஆண்டு முதல் 1210 வரை நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்தார்.
குத்புத்தீன் ஐபக் | |
---|---|
![]() | |
பிறப்பு | நடு ஆசியா |
இறப்பு | லாகூர் |
வம்சம் | மம்லூக்கிய மரபு |
தொடக்க காலம்

குத்புத்தீன் நடு ஆசியாவில் உள்ள ஒரு இடத்தில் பிறந்த துருக்கிய மரபினர். சிறுவனாக இருந்தபோது இவரைப்பிடித்து அடிமையாக விற்றுவிட்டனர். வடகிழக்கு ஈரானில் உள்ள கோராசான் மாகாணத்தில் இருந்த நிசாப்பூர் நகரத்தின் தலைவர் காசி (Qazi) அவரை விலைக்கு வாங்கினார். காசி, குத்புத்தீனைத் தன்னுடைய மகன் போலவே வளர்த்ததுடன், அவருக்கு நல்ல கல்வியும் அளித்தார். குதுப்-உத்-தீன் பாரசீகம், அரபு ஆகிய மொழிகளில் நல்ல அறிவு பெற்றதுடன், வில்வித்தை, குதிரையேற்றம் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றார். காசி இறந்த பின்னர், குத்புத்தீன் மீது பொறாமை கொண்ட காசியின் மகன் அவரை மீண்டும் அடிமை வணிகரிடம் விற்றுவிட்டார். பின்னர், வடமேற்கு ஆப்கானிசுத்தானில் இருந்த கோர் என்னும் இடத்தின் ஆட்சியாளர் முகம்மத் கோரி குத்புத்தீனை விலைக்கு வாங்கினார்.
உயர்ச்சி
தனது சொந்த இடமான கோர் என்னும் சிறிய பகுதியில் தொடங்கிய முகம்மத் கோரி, இன்றைய ஆப்கானிசுத்தான், பாகிசுத்தான், வட இந்தியா ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். 1193 இல் அவர் டில்லியைக் கைப்பற்றினார். இப்பகுதிகளில், அரசு வரிகள்; சட்டத்தின் ஆட்சி; நியாயமான நிலப் பகிர்வு; தனக்குக் கீழ் உள்ள பிரபுக்களுக்கு வருமானம்; உள்ளூரில் தெரிவு செய்யப்பட்டவர்கள், நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஆகியவர்களைக் கொண்ட உள்ளூர் நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் இவர் முதல் முறையாக முசுலிம் நிர்வாகத்தை அறிமுகப்படுத்தினார்.
இந்தப் பின்னணியில், குதுப்-உத்-தீன், சுல்தான் கோரியின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக உயர்ந்தார். கோரியின் பெரிய வெற்றிகள், குதுப்-உத்-தீன் கோரியின் நேரடியான கட்டுப்பாட்டிலும், வழிகாட்டலிலும் இருந்தபோதே கிடைத்தன. வட இந்தியாவில் சுல்தான் கோரியின் படையெடுப்புக்களை நிறைவேற்றுவதிலும், வெற்றிகளை உறுதிப்படுத்துவதிலும் குதுப்-உத்-தீன் பெரும் பங்காற்றினார். 1192 ஆம் ஆண்டுக்குப் பின்னர், சுல்தான் கோரி, நடு ஆசியாவில் கூடுதல் கவனம் செலுத்தியதால், இந்தியப் படையெடுப்புக்களிலும், இப் பகுதிகளில் வரி அறவிடுவதிலும் குதுப்-உத்-தீன் சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்கப்பட்டார்.
டில்லி சுல்தானகத்தின் தோற்றம்
முகம்மத் கோரியே வட இந்தியாவில் முதன் முதலாக முசுலிம் ஆட்சியை ஏற்படுத்தியவர். 1206 ஆம் ஆண்டில் சுல்தான் கோரி இறந்ததும், ஏற்பட்ட குறுகிய கால அதிகாரப் போட்டியைத் தொடர்ந்து, குதுப்-உத்-தீன் ஐபக் ஆப்கானிசுத்தான், பாகிசுத்தான், வட இந்தியா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பேரரசுக்கு ஆட்சியாளராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். கோரியின் நடு ஆசியப் பகுதிகளை மங்கோலியப் போர்த்தலைவனான கெங்கிசு கான் கைப்பற்றிக் கொண்டார்.

குதுப்-உத்-தீனின் ஆட்சியின் கீழ் வந்த பகுதிகளில் அவருக்கு ஏற்கெனவே அதிகாரம் இருந்தது. கோரியின் ஆட்சிக்காலத்திலேயே இப் பகுதிகளில் கோரியின் திறை அறவிடுதல் முதலியவற்றுக்குப் பொறுப்பாகக் குதுப்-உத்-தீன் பெருமளவு அதிகாரத்தைக் கொண்டிருந்தார். அதனால், இவரின் முறைப்படியான ஆட்சி நான்கு ஆண்டுகளே ஆயினும், இவரது கட்டுப்பாடு முன்னரும் சில ஆண்டுகள் இப்பகுதியில் இருந்தது. இது, நிர்வாக முறைகளை உறுதிப்படுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்தது. குதுப்-உத்-தீன் முதலில் லாகூரில் இருந்து ஆட்சி நடத்தினார். பின்னர் தனது தலைநகரை டில்லிக்கு மாற்றினார். இதனால் இவரே தெற்காசியாவின் முதல் முசுலிம் ஆட்சியாளராகக் கருதப்படுகிறார்.
டில்லியில் கட்டப்பட்ட முதல் முசுலிம் நினைவுச்சின்னங்கள் இவராலேயே தொடங்கப்பட்டன. குவ்வாத்-உல்-இசுலாம் மசூதி, குதுப் மினார் போன்றவை இவற்றுள் அடங்கும்.
இறப்பு
1210 ஆம் ஆண்டில், குதுப்-உத்-தீன் குதிரையில் ஏறி ஒரு விளையாட்டில் கலந்து கொண்டிருந்தபோது இடம்பெற்ற விபத்தில் இறந்தார். லாகூரில் உள்ள அனார்க்கலி பசார் என்னும் இடத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார். துருக்கிய மரபினரும், இன்னொரு முன்னாள் அடிமையும், குதுப்-உத்-தீனின் மகளை மணந்தவருமான சம்சு-உத்-தீன் இல்துத்மிசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.