யாப்பகூவா

யாப்பகூவா என்பது இலங்கையின் தென்மேற்கு ஈர வலையத்தில் காணப்படும் யாப்பகூவா மலையில் காணப்பட்ட இராசதானி. இக்குன்று கிட்டத்தட்ட 300 மீற்றர்கள் உயரமானது. யாப்பகூவா கோட்டை இலங்கையின் குருநாகலை மாவட்டத்தின் மகவ என்னும் கிராமத்துக்குச் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. ஈழத்தின் கலை வரலாற்றில் இரண்டாவது சீகிரியா என வர்ணிக்கப்படுகிறது.

யாப்பகூவா அரசு
யாப்பகூவா இராசதானி

கிபி 1272–கிபி 1300
தலைநகரம் யாப்பகூவா
மொழி(கள்) சிங்களம்
சமயம் பௌத்தம்
அரசாங்கம் மன்னராட்சி
அதிபர்
 -  கிபி 1272-1284 முதலாம் புவனேகபாகு
 - கிபி 1287-1292 மூன்றாம் பராக்கிரமபாகு
 - கிபி 1292-1299 இரண்டாம் புவனேகபாகு
வரலாறு
 - உருவாக்கம் கிபி 1272
 - குலைவு கிபி 1300

வரலாறு

யாப்பகூவா இராசதானி தம்பதெனிய இராசதானிக்குப் பின்னர் இலங்கையில் உருவான ஒரு இராசதானி ஆகும். இது இராசதானியாகும் முன்னர் சுபா தளபதியால் ஓர் அரணாகப் பயன்பட்டது. பின்னர் 1273 இல் முதலாம் புவனேகபாகு மன்னனால் தலைநகரமாக மாற்றப்பட்டது. இவனாலேயே இங்கு மாளிகைகளும், யாப்பகூவா கோட்டை கட்டிடங்களும் கட்டப்பட்டன. புத்தரின் தந்தத்தாதுவை தம்பதெனியவில் இருந்து யாப்பகூவாக்குக் கொண்டு வரப்பட்டது. முதலாம் புவனேகபாகு மன்னனின் இறப்பின் பின்னர் பாண்டியத் தளபதியான மாறவர்மன் குலசேகரமால் இலங்கை ஆக்கிரமிக்கப்பட்டது. அவன் புத்தரின் தந்தத்தாதுவை பாண்டிய தேசத்திற்குக் கொண்டு சென்றான். இவ் இராசதானியின் இரண்டாவது அரசனாக வந்த மூன்றாம் பராக்கிரமபாகுவால் நட்பின் மூலமாக புத்தரின் தந்தத்தாது மீட்கப்பட்டது. பின்னர் இரண்டாம் புவனேகபாகு மன்னனாகி தலைநகரத்தை குருணாகலுக்கு மாற்றினான்.

கி.பி 478 தொடக்கம் 496 ஆண்டுகள் வரையான காலப் பகுதிகளில் காசியப்ப அரசன் சீகிரியா கோட்டையை நிறுவி குபேரனைப் போல வாழ்ந்தான் என்று மகாவமிசம் கூறுவதைப் போல இயற்கை அரணாக விளங்கும் யாப்பகூவாவை சுப எனப்படும் இராசதாணி தங்கியிருந்து தனது ஆதிக்கத்தை செலுத்தியதாக பௌத்த சாதுக்களின் கல்வெட்டுக்களின் மூலம் அறியக் கிடைக்கிறது. சுப எனப்படுபவர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர். இருந்த போதிலும் பதின் மூன்று பௌத்தப் பிக்குகளின் பௌத்த அனுஷ்டானங்களை பாதுகாத்து வந்துள்ளார். மேலும் 1214 – 1235 காலப் பகுதிகளில் திராவிடர்களின் பாதுகாப்பாக காணப்பட்டதோடு இதனை அலங்கரிக்க எண்ணி பல அழகியல் அலங்கார வேலைப்பாடுகள் செய்து இக் கட்டிடம் மெருகூட்டப்பட்டுள்ளது.

மேலும் தம்பதெனியா காலத்தில் விஜய பாகுவின் மகனான இரண்டாம் பராக்கிரமபாகு 1236 தொடக்கம் 1266 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிகளில் தமிழர்களுக்கு எதிராக பல போர்களை செய்தான். வட இந்திய திராவிடர்களின் வருகையை தடை செய்வதற்கு புவனேக பாகு இக் கட்டிடத்தைப் பேணி வந்ததாகவூம் சிலர் கூறுவர். வேறு சிலர் சந்திர பாகு அதனை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதால் விஜய பாகு போரிட்டு புவேனேக பாகுவிடம் பொறுப்பளித்ததாகவூம் வரலாற்றாசிரியர்கள் கூறுவர்.

நான்காம் விஜயபாகு 1271 தொடக்கம் 1273 காலங்களில் மித்ராவினால் நஞ்சூட்டி கொலை செய்யப்பட்டான். மித்ரா என்பவர் மன்னனுடைய தோழாராக இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த விஜயபாகுவின் அண்ணனான புவனேக பாகு மித்ராவை கொலை செய்து வன்னி ராஜவையையும் போர் செய்து வாழ்ந்து வந்தான். எந்த சமயத்திலும் வட பகுதியிலிருந்து பாண்டிய அரசர்கள் படையெடுக்கலாம் என்று எண்ணி பாதுகாப்பான கல்லரண்களை மேலும் நிறுவி 1273 தொடக்கம் 1284 வரை இப் பகுதியை வைத்திருந்தார். இருந்த போதிலும் தொடர்ந்தும் பாண்டிய மன்னனுடைய படையெடுப்புகளும் ஆக்கிரமிப்புகளும் தொடர்ந்தன. இதனை எதிர்க்க இலங்கை அரசன் பலமிழந்தான்; தளர்வடைந்தான். மேலும் மிஸர் அரசனிடம் உதவி கோரி ஒரு குழுவினரை அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொண்டான். மிஸர் நாட்டுப் படையினர் நாட்டிற்கு வந்து சேர்வதற்கு முதல் அரசன் உயிர் நீத்தான். இதன் பின் நாட்டில் மழை வளம் குன்ற ஆரம்பித்ததாகவும். பசி, பஞ்சம் சூழ்ந்ததாகவும் வரலாறுகள் பறைசாட்டும். இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பாண்டிய மன்னன், சூழ்ச்சி செய்யலானான். வட நாட்டவரைக் கைப்பற்றச் செய்து பாண்டி என்றழைக்கப்படும் திராவிடன் மூலமாக இங்கிருந்த சிற்பங்களுட்பட, யானைத் தந்தங்களையும் தன்னகத்தே எடுத்துக் கொண்டான். அததைத் தொடர்ந்து கவனிப்பாரற்ற யாப்பகுவையின் கலை சோபனமிழந்தது எனலாம். பராமரிப்பு இன்மையால் காடுகள் வளர்ந்தது. அதன் வனப்பும் மெல்ல மெல்ல மங்கத் தொடங்கின.

1886 ஆம் ஆண்டு பகுதியில் கோர்டன் என்ற ஆங்கிலேயரின் கவனத்துக்குள்ளாகியது. மேலும் அவர் அதன் கலைத் தன்மை மங்காது காக்க வேண்டுமென உணர்ந்து அதனை பொது மக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் கவனத்திற்கு கொண்டு வர முனைந்தார்.

கட்டிடக் கலை

யாப்பகூவ கோட்டை

முன்னூறு அடி உயரமான இக்கோட்டை தெற்கு, தென் கிழக்கு தவிர ஏனைய பகுதிகள் மிக உயரமான அரண்களாக கட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இயற்கையாக பாதுகாப்பாக அமைக்கப்பட்ட இக் கோட்டையை மேலும் கருங்கல்லை சரிவாக வைத்து இக்கட்டிடத்திற்கு வலு சோர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இரண்டு மாடிகளைக் கொண்டு சதுர அமைப்பால் நூற்று இருபது அடி நீளத்தையூம் கொண்டுள்ளது. ஒரு கல்லின் நீளம் முந்நூறு அடியாக காணப்படவதோடு மேலும் சில கற்கள் 45 × 15 அடி அளவுடையதாகும். ஆழகிய நீர் தடாகங்களும் அருகே சேறு நிரப்பப்பட்ட குழிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

அரண் மனைக்குள் நுழையும் பிரதான நுழைவாயில் வலது பக்கமாக அமைந்துள்ளது. மேற்கிலும் கிழக்கிலும் இரகசியமாக வெளியேறுவதற்கும் வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நீர் தடாகங்கள் நான்கு காணப்படுகின்றன. 08 × 10 அடி அளவு கொண்ட கருங்கல்லாலான கதவு, யன்னல் நிலைகள் நான்கும் காணப்படுகின்றன. இவை பதின் எட்டாம் நூற்றாண்டில் செத்திபொலகம சுவாமியார் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னனின் வேண்டுகோலுக்கு இணங்க இதனை செய்வித்ததாகவும் கூறப்படும். விகாரை ஒன்றும் அதன் வட கிழக்கில் குகை ஒன்றும் அதில் புத்தர் சிலை தியான முத்திரைகளுடனான படைப்புக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் விஷ்ணு, சமன் தெய்வங்களின் வடிவங்கள் ஒரு சிறிய விகாரையில் காணப்படுகின்றன. இதனைப் பற்றி தொல்பொருளாய்வாளர் திரு H.C.B. பெல் கூறும் போது இது பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோற்றம் பெற்றிருக்கலாமென கூறுகிறார். இதன் கூரையில் சத்சதிய எனப்படும் புத்தரின் சரிதம் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. இதன் வலது சுவரில் புத்தரின் பிறப்பு முதல் இறப்பு வரையான கட்டங்களை ஓவியமாக வரைந்துள்ளனர். இடது பக்க சுவரில் வெஸ்ஸந்தரா ஜாதகக் கதைAம் வரையப்பட்டுள்ளன. பரதுக்கதுக்கித்த என்றழைக்கப்படும் பிறரின் துன்பங்களுள் பங்கு கொள்ளல் செய்தியை வெளிப்படுத்தும் இரண்டு புத்தருருவங்களும் வரையப்பட்டுள்ளன.

இத்தகைய ஓவியங்கள் ஓவிய மரபை பேணி வரையப்படாவிடினும் இரசிக்கத்தக்க வகையில் பழங்கால ஓவியங்களை நினைவூபடுத்துகின்றன. இங்கே காணப்படும் கற் செதுக்கலலங்காரம் அற்புதமாகவூம் மிகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஓவியங்களைப் பொறுத்தவரை கண்டி யுகத்தில் பிரபல்யாமான நீலகம பரம்பரையின் நிக்கவெவ பகலவத்தே உக்கு நைதே என்பவர் வரைந்திருக்கக் கூடும்.

ஸ்ரீ போதி நாராயக புவனேகபாகு கித்திரா சரியகே ஜீவன் நைதே இவர் இரண்டு சதுரவடிவான பீடம் செய்து தலதா மாளிகையை 42 சம அளவில் 21 சுற்றளவில் பெரிய தாகபை ஒன்றும் அலங்கரித்ததாகக் கூறப்படுகிறது. இங்கே புத்தருடைய தந்தம் வைக்கப்பட்டு தலதா மாளிகையாக இருந்ததாக எண்ண முடிகிறது. தலதா மாளிகையின் கலையம்சங்களை ஆராயும் பொழுது பல விடங்களில் தெளிவு கிடைக்கிறது. சிறிய தாகபையின் வலப் பக்கத்தில் மாளிகை காணப்படும். இங்கே அரைவாசிக்கும் மேலாக செங்கல். கருங்கள் கலந்து தென்னிந்திய கட்டிட முறையை தழுவியமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கட்டிடப் பகுதியினை மூன்று பிரதான பகுதிகளாக பிரித்தாளுவது பொருத்தமாகும். அவை முறையே

  1. கர்ப்பக் கிரகம்
  2. அந்திராலயம்
  3. அர்த்த மண்டபம்

இதில் கருங்கல்லால் மிகவும் இலகுவாகவும் மென்மையாகவும் சிற்பங்கள் ஒழுங்குபடுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளன. யன்னல்களின் நிலைகள் கருங்கல்லால் செய்யப்பட்டிருப்பது விஷேட அம்சமாகும். மேற்கு பக்கமாக காணப்படும் கதவு நிலையில் தனிக்கல்லால் செய்யப்பட்ட மகர தோரணம் காணப்படுகிறது. இங்கே தியான நிலையில் அமைந்த புத்தர் சிலையொன்றும் காணப்பட்டது. இது தற்போது கீழே விழுந்து சிதைவுற்ற நிலையில் காணப்படுகிறது.

அடுத்து அரச மாளிகையின் கலை அமிசங்களை நோக்கும் போது இம்மாளிகை மூன்று தொகுதியாகப் படி வரிசைகளுடன் நேர்த்தியாகவும் கம்பீரமாகவும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. முதலிலே நாம் காண்பது வரவேற்பு மண்டபமாகும். முப்பத்து ஜந்து படிகளைக் கொண்டும் கருங்கற்களைக் கொண்டும் அமைந்த செதுக்கல்கள், சிற்பங்கள் நிறைந்ததாகவும் அமைக்கப்பட்டுள்ளன. படி வரிசையின் இரு பக்கமும் யாக்ஷி, சிங்கம், யானை முதலிய மிருக உருவங்களும் முதற் படியின் இரு மருங்கிலும் பூச்சாடியை ஏந்திய எழில் மிக மங்கையர்களும் செதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் கங்கா, யமுனா தேவிகளாக இருக்கலாமென சமயக்காரர்களின் நம்பிக்கையாகக் காணப்படுகிறது.

மூன்றாவதாக அமைந்துள்ள திறந்த மண்டபத்தின் பின் பகுதியில் கருங்கல்லில் செதுக்கல்கள், சட்டகங்கள், நாட்டிய இசை வாத்தியக்காரர்களின் உருவங்களும் நயமாக செதுக்கப்பட்டுள்ளன. இவற்றை அவதானிக்கும் போது அக்காலத்தின் திராவிடர் கலையின் கலப்பு பௌத்த கலையோடு எவ்வாறு இணைந்திருக்கலாமென ஜயப்படத் தோணுகிறது. ஓன்றாகக் காணப்படும் மூன்று நாட்டிய உருவங்களும் நான்கு கால்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை தனியாக பிரித்து நோக்கும் போது வேறு பல உருவங்களும் காணக்கிடைக்கிறது. 4.7 × 3.3 அடி அளவு கொண்ட தனிக் கல்லால் செய்யப்பட்ட துளை அலங்காரங்களோடு ஜன்னல்களும் சிங்கம், யானை, அன்னம் போன்றனவும் உள்ளன.

இங்கே காணப்படும் நாலந்த கெடிகேவின் தென் கிழக்கில் கணேஷ்வரின் உருவமும் கீழ் பகுதி அலங்காரங்களுடனும் செதுக்கப்பட்டுள்ளது. வாயைத் திறந்த படி நின்றிருக்கும் இரண்டு சிங்கங்களின் முற்பகுதி லியவெலஇ நெலும்மல், நாரிப் பெண்கள், மேலே தாமரை அமைப்பு ஆகிய தலை சிறந்த அலங்காரங்களோடு அமைக்கப்பட்டுள்ளன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.