சிந்தி மொழி

சிந்தி மொழி தெற்காசியாவின் சிந்துப் பகுதியில் பேசப்பட்டு வரும் ஒரு மொழியாகும். இப்பகுதி தற்போது பாகிஸ்தான் நாட்டின் மாகாணங்களுள் ஒன்றாகும். இது இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இந்திய-ஈரானியப் பிரிவைச் சேர்ந்த இந்திய-ஆரிய மொழிகளுள் ஒன்று. இது பாகிஸ்தானில் சுமார் 18.5 மில்லியன் மக்களாலும், இந்தியாவில் ஏறத்தாழ 2.8 மில்லியன் மக்களாலும் பேசப்பட்டு வருகிறது. இது மேற்படி இரண்டு நாடுகளிலும் உத்தியோக பூர்வ மொழியாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. இம் மொழி ஒர் இந்திய-ஆரிய மொழியாக வகைப்படுத்தப்பட்டு உள்ள போதும், இதில் திராவிட மொழிச் செல்வாக்குக் காணப்படுவதால் இது ஒரு தனித்துவமான மொழியாக விளங்குகிறது. பெரும்பாலான சிந்தி போசுவோர் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் செறிந்து வாழ்கின்றனர்.[1] ஏனையோர் இந்தியாவிலும், உலகின் வேறுபல நாடுகளில் இடம்பெயர்ந்தும் வாழ்கின்றனர்.

சிந்தி மொழி
Default
மொழிக் குறியீடுகள்
ISO 639-1sd
ISO 639-2snd
ISO 639-3snd

எழுத்து முறை

இந்திய, பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்து சிந்திகள் சிந்து மாகாணத்தை விட்டு வெளியேறியபோது, சிந்தி மொழி பரவத் தொடங்கியது. முன்னர் இம் மொழி தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டு வந்தது. பிரித்தானிய ஆட்சிக் காலத்தில், கிழக்கிந்தியக் கம்பனியின் உதவியுடன், சிந்து மொழிக்காக மாற்றம் செய்யப்பட்ட அரபி எழுத்துமுறை உருவாக்கப்பட்டது. பிரிவினைக்குப் பின்னர், இந்திய அரசு, அரபி எழுத்து முறையுடன், தேவநாகரி எழுத்து முறையையும் மீண்டும் அறிமுகப்படுத்தியது [2].

பாடதிட்டம்

தென்கிழக்குப் பாகிஸ்தானில் உள்ள பாடசாலைகளில் சிந்தி மொழி முதல் மொழியாகப் பயிற்றப்படுகிறது. இந்தியாவில், சிறப்பாக மகாராட்டிர மாநிலத்தில் பல பாடசாலைகள் சிந்திச் சமுதாயத்தினரால் நடத்தப்படுகின்றன. இப் பாடசாலைகளில் சிந்தி கல்வி மொழியாகவோ அல்லது ஒரு பாடமாகவோ இருக்கிறது. சிந்தி மொழி ஏராளமான சொற்களைக் கொண்டது. இதனால், இது இலக்கியங்களை ஆக்குவதற்கு ஏற்ற மொழியாக விளங்கியது. கவிதைகள் உட்படப் பல இலக்கியங்கள் இம்மொழியில் ஆக்கப்பட்டன. சிந்தியின் கிளைமொழிகள் பாகிஸ்தானின், தெற்குப் பஞ்சாப், பலூச்சிஸ்தான், வடமேற்கு முன்னரங்க மாகாணம் ஆகிய இடங்களிலும், இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் பேசப்பட்டு வருகின்றன.

உசாத்துணை

  1. "Sindhi". எத்னொலோக். பார்த்த நாள் அக்டோபர் 20, 2016.
  2. UCLA Language Materials Project
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.