நேபாளி மொழி

நேபாளி மொழி நேபாளம், பூட்டான், ஆகிய நாடுகளிலும், இந்தியா, மியன்மார் ஆகிய நாடுகளின் சில பகுதிகளிலும் பேசப்படுகின்ற ஒரு மொழியாகும். இது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் துணைக் குடும்பமான இந்திய-ஈரானியக் குடும்பத்தின் ஒரு பிரிவான இந்திய-ஆரிய மொழிகளுள் ஒன்று.

நேபாளி மொழி
நேபாளி
உச்சரிப்புनेपाली
நாடு(கள்)நேபாளம், பூட்டான், இந்தியா, மியன்மார்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
17 மில்லியன்  (date missing)
இந்தோ-ஐரோப்பிய
தேவநாகரி, கைத்தி, மைதிலி
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
நேபாளம், சிக்கிம் (இந்தியா)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ne
ISO 639-2nep
ISO 639-3nep

நேபாள் என்பது முன்னர், காத்மண்டுப் பள்ளத்தாக்கைக் குறித்தது. இதனால் இப் பகுதியின் உள்ளூர் மொழியான, திபேத்திய-பர்மிய மொழியான நேவாரி அல்லது நேபாள் பாஷாவே நேபாளி என்னும் பெயரால் குறிக்கப்பட்டது. இன்று நேபாளத்தின் அதிகாரபூர்வ மொழியே நேபாளி என வழங்கப்படுகிறது. இக் கட்டுரையும் இறுதியாகக் குறிக்கப்பட்ட மொழி பற்றியதே ஆகும். இம்மொழி நேபாளத்தில் மட்டுமன்றி சிக்கிமிலும் அதிகாரபூர்வ மொழியாக உள்ளது.

நேபாளத்தில் மொத்த மக்கள் தொகையின் அரைப் பங்கினரே இம் மொழியைப் பேசுகின்றனர். ஏனையோர் இதனை இரண்டாம் மொழியாகப் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், இதனை மட்டும் கல்வித் துறை, நீதிமன்றம், அரச நிர்வாகம் ஆகியவை தொடர்பில் உத்தியோக மொழி ஆக்கியமை சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்து வருகிறது. 1996-2006 காலப் பகுதியில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் இது ஒரு முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக விளங்கியது.

பிற பெயர்கள்

இம் மொழி வேறு பல பெயர்களாலும் குறிக்கப்படுவது உண்டு. கூர்க்காக்களின் மொழி என்பதால் கூர்க்காலி அல்லது கோர்க்காலி என்றும், மலைப் பகுதி மொழி எனப் பொருள்படும் பர்பாத்தியா என்றும் அழைக்கப்படுவது உண்டு. காஸ்கூரா என்பதே இதன் பழைய பெயராகும். காஸ்கூரா என்பது காஸ் இனத்தவரின் பேச்சு என்று பொருள்படுகின்றது. இவர்கள், வரலாற்றுக்கு முந்திய அல்லது வரலாற்றுக் காலத் தொடக்கத்தில் கர்னாலி-பேரி நீரேந்து பகுதிகளில் அரிசி பயிரிட்டு வாழ்ந்த இந்திய-ஆரியக் குடியேற்றவாசிகளாவர்.

திபேத்திய-பர்மிய மொழிகளின் செல்வாக்கு

நேபாளத்தின் கிழக்குப் பகுதி, இந்திய மாநிலங்களான உத்தர்கண்ட், இமாசலப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் பேசப்பட்டு வரும் பஹாரி மொழிக் குழுவில் கிழக்குக் கோடியில் உள்ள மொழி நேபாளி மொழியேயாகும். இம் மொழி, நேபாளி பாஷா போன்ற பல திபேத்திய-பர்மிய மொழிகளுக்கு அண்மையில் வளர்ந்ததால் இம்மொழியில் அம் மொழிகளின் செல்வாக்கைக் காணமுடிகின்றது.

சமஸ்கிருதமும் ஹிந்தியும்

இது ஹிந்தி மொழிக்கு நெருங்கியது எனினும் இது கூடிய பழமைக் கூறுகளைக் கொண்டது. பெருமளவுக்குப் பாரசீக மற்றும் ஆங்கிலச் சொற்களின் கலப்பின்றி, சமஸ்கிருத மொழிச் சொற்களே இம் மொழியில் அதிகமாக உள்ளன. வேறெந்த மொழியைக் காட்டிலும், சமஸ்கிருதத்துக்கு மிக நெருக்கமானது நேபாளி மொழியே என்று கூறப்படுகின்றது.

எழுத்து முறை

தற்காலத்தில் இம் மொழியை எழுதுவதற்குத் தேவநாகரி எழுத்துக்களே பயன்படுகின்றன. புஜிமோல் எனப்படும் பழைய எழுத்து முறை ஒன்றும் இருந்ததாகத் தெரிகிறது.

பதிலிடு பெயர்கள்

நேபாளி மொழியில், குறிக்கப்படுபவரின் பால், எண், தொலைவு, தகுதி என்பவற்றில் தங்கியுள்ள ஒரு சிக்கலான பதிலிடு பெயர் முறைமை உண்டு. தகுதி மூன்று நிலைகளில் உள்ளது. இவை: கீழ் நிலை, இடை நிலை, உயர் நிலை என்பவை ஆகும். படர்க்கைப் பதிலிடு பெயர்களில், குறிக்கப்படுபவர் அவ்விடத்தில் இல்லாவிட்டால் அல்லது அவர் தகுதி குறைந்தவராக இருந்தால் கீழ் நிலைச் சொல் பயன்படுகின்றது. இடை நிலைச் சொல் சிறப்பாகப் பெண்களைக் குறிக்கும்போது பயன்படுகின்றது. இதன் பன்மைச் சொல் ஒரு குழுவினரைக் குறிக்கவும் பயன்படுவதுண்டு. உயர் நிலைச் சொற்கள், குறிக்கப்படுபவர் நேரில் இருக்கும்போது அல்லது உயர் தகுதி கொண்டவராக இருக்கும்போது பயன்படுகின்றது.

நேபாளியில் படர்க்கை ஒருமைப் பதிலிடு பெயர்கள்
அண்மை சேய்மை
கீழ் நிலை यो யோ त्यो த்யோ
இடை நிலை यिनी யினீ तिनी தினீ उनी உனீ
உயர் நிலை यहाँ யஃகாங் वहाँ வஃகாங்

இவற்றையும் பார்க்கவும்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.