சிக்கிம்

சிக்கிம் இமய மலைத்தொடரில் அமைந்த இந்திய மாநிலமாகும். இது இந்தியாவின் வடகிழக்கு மாநிலம்.[1] தனி நாடாக விளங்கிய சிக்கிம், பாதுகாப்பு காரணங்களால் 1975ஆம் ஆண்டில் இந்தியாவுடன் இணைந்தது. சிக்கிமின் தலைநகர் கேங்டாக் ஆகும். நேபாள மொழி அதிகாரப்பூர்வ மொழி. இந்து மதமும், வஜ்ராயன புத்த மதமும் இம்மாநில மக்களால் கடைபிடிக்கப் பட்டு வருகிறது. இந்திய மாநிலங்களிலேயே கோவா மாநிலம் மட்டும் தான் சிக்கிமை விட சிறிய மாநிலம். சிக்கிமின் மேற்கில் நேபாளமும், வடக்கில் சீனாவும், கிழக்கில் பூட்டானும், கிழக்கில மேற்கு வங்காளமும் உள்ளன. உலகின் மூன்றாவது உயர்ந்த சிகரமான கஞ்சன்சங்கா சிக்கிமில் உள்ளது.

འབྲས་མོ་ལྗོངས་
सिक्किम
  மாநிலம்  

முத்திரை
இந்தியாவில் சிக்கிமின் அமைவிடம்
அமைவிடம் 27°20′N 88°37′E
நாடு  இந்தியா
மாநிலம் சிக்கிம்
மாவட்டங்கள் 4
நிறுவப்பட்ட நாள் மே 16, 1975
தலைநகரம் கேங்டாக்
மிகப்பெரிய நகரம் கேங்டாக்
ஆளுநர் சீனிவாச பாட்டீல்
முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங்
ஆளுநர் சீனிவாஸ் தாதா சாகேப் பாடீல்
முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங்
உயர்நீதிமன்ற நீதிபதி
சட்டமன்றம் (தொகுதிகள்) ஓரவை (32)
மக்களவைத் தொகுதி འབྲས་མོ་ལྗོངས་
सिक्किम
மக்கள் தொகை 6,10,577 (28வது) (2011)
ம. வ. சு (2005) 0.684 (medium) 
கல்வியறிவு 81.42 %% (7வது)
மொழிகள் நேபாளி, பூட்டியா மொழி, லெப்கா மொழி (1977 இருந்து), லிம்பு (1981லிருந்து), நேவாரி, ராய் மொழி, குருங் மொழி, மங்கார் மொழி, செர்பா மொழி, தமங் மொழி (1995லிருந்து) மற்றும் சுன்வார் மொழி (1996லிருந்து)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு
ஐ. எசு. ஓ.3166-2 IN-SK
இணையதளம் [http://sikkim.gov.in sikkim.gov.in]

இந்தியாவுடன் இணைப்பு

1947ல் இந்தியா விடுதலையடைந்த போது, சிக்கிமும் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று முடியாட்சியாக தொடர்ந்தது. அதன் விடுதலைக்கு இந்தியா பாதுகாப்பு கொடுத்தது. இந்தியாவுடன் இணைவதற்கான வாக்கு வெற்றி பெறாததால் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு சிக்கிமிற்கு சிறப்பு அந்தஸ்து (SPECIAL PROTECTORATE STATUS) கொடுத்தார். சிக்கிம் இந்தியாவின் மேலாண்மையை ஏற்ற நாடாக விளங்கியது. அதன்படி சிக்கிமின் பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு போன்றவை இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன; மற்ற அனைத்து துறைகளிலும் தன்னாட்சி பெற்றிருந்தது. நேப்பாளிகளின் ஊடுருவல் அதிகமாகத் தொடங்கவே, 1975-ல் சிக்கிமின் பிரதமராகப் பொறுப்பேற்ற காஜி என்பவர் சிக்கிமை இந்தியாவின் ஒரு மாநிலமாகவே இணைத்துக் கொள்ள இந்திய அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி எடுக்கப்பட்ட பொது வாக்கெடுப்பில் 97.5% சிக்கிம் மக்கள் இந்தியாவுடன் இணைவதை ஆதரிக்க, 16.05.1975-ல் சிக்கிம் இந்தியாவின் 22-ஆவது மாநிலமாக இணைந்தது.

வித்தியாசமான மாநிலம்

சிக்கிம், 7096 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட சிறிய மாநிலம். தெற்கு வடக்காக 115 கிலோமீட்டரும், கிழக்கு மேற்காக 65 கிலோமீட்டரும் விஸ்தீரணம் கொண்டுள்ளது. நான்கே மாவட்டங்கள். ]]கிழக்கு சிக்கிம் மாவட்டம்]] (தலைநகரம் காங்டாக்), மேற்கு சிக்கிம் மாவட்டம் (தலைநகரம் கைஷிங்), வடக்கு சிக்கிம் மாவட்டம் (தலைநகரம் மங்கன்), தெற்கு சிக்கிம் மாவட்டம் (தலைநகரம் நாம்ச்சி) என்பவை தான் மாவட்டங்களின் பெயர்கள். சிக்கிம் மாநிலத்தின் தலைநகரம் காங்டாக்.

இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தில் எவ்வளவோ அரசியல் குழப்பங்கள், தீவிரவாத துர்நிகழ்வுகள், போதைப் பொருள் புழக்கங்கள், சமூக பொருளாதாரக் கோணங்களில் பின்தங்கிய நிலை என்று இருந்தாலும் இயற்கை அன்னையின் பூரண அரவணைப்பு இருக்கிறது. வடகிழக்கின் ஏழு மாநிலங்களில் அடிதடிப் பிரச்னை, அரசியல் குழப்பம், தீவிரவாத நடவடிக்கைகள் என்று ஏதும் ஒரு சிறிதும் இல்லாத அமைதியான ஒரே மாநிலம் சிக்கிம்.

அரசியல் என்று பார்த்தால் சிக்கிம் டெமாக்ரடிக் ஃப்ரண்ட்(குடியரசுத் தோழன்) என்கிற ஒரே கட்சி தான் பிரதானம். எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. 2009 மே மாதம் பாராளுமன்றத்துடன் சேர்ந்து நடந்த மாநில சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 23 தொகுதிகளையும் பாராளுமன்றத் தொகுதியையும் கைப்பற்றி இருக்கிறது சிக்கிம் டெமாக்ரடிக் ஃப்ரண்ட்.

சுற்றுச்சூழல் பராமரிப்பிலும், பொது சுகாதாரம், தூய்மை ஆகியவற்றிற்கு மிகவும் முக்கியத்துவம் தந்து நிர்வகிக்கப்படும் பகுதியாகத் திகழ்கிறது இந்தச் சிறிய மாநிலம். ஒட்டுமொத்த சிக்கிமிலும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை உள்ளது. கடைகளில் துணிப்பையில் தான் பொருட்கள் தருகிறார்கள். பயண வழியெங்கும், குறிப்பாக மலைப்பகுதிகளில் அவ்வளவு பயணிகள் வந்து செல்லும் இடத்திலும் பிளாஸ்டிக் குப்பைகள் கண்களில் படுவதில்லை.

ஏழெட்டு மாதங்கள் சுற்றுலாப் பயணிகளின் வரவு நிறைய பணப்புழக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. டாக்சி வாடகையாகட்டும், அறைகளின் வாடகையாகட்டும், உணவுப் பொருட்களின் விலையாகட்டும் எல்லாமே மாநிலம் இருக்கும் உயரத்துக்குப் பொருத்தமாகவே. மூவாயிரம் அடியிலிருந்து 28208 அடி உயரம் (உலகின் மூன்றாவது உயரமான சிகரம் கஞ்சன் ஜங்கா இந்த மாநிலத்தின் தான் உள்ளது) வரை மாநிலத்தின் உயரம் வேறுபடுகிறது.

மொத்த மாநிலத்திலும் எங்கும் தொடர்ந்து ஐந்நூறடி தூரம் ஏற்ற இறக்கம் இல்லாமல் இல்லை. அதனாலேயே ஆண்களுக்கும் பெண்களுக்கும் குறிப்பாக காவலர்க்கும் தொப்பை என்பது அரிதாகவே உள்ளது.

போக்குவரத்து

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பக்தோக்ரா விமான நிலையம் 114 கிலோமீட்டர் தூரத்திலும், NJP என்று சொல்லப்படும் நியூ ஜல்பாய்குரி (இதுவும் மேற்கு வங்காளமே) என்கிற ஊரின் புது ஜல்பாய்குரி தொடருந்து நிலையம் 125 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன. சாலை வழியாக டார்ஜிலிங் 94 கிலோமீட்டர் தொலைவிலும், சிலிகுரி என்கிற ஊர் 114 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன. சிக்கிமில் புகைவண்டித் தடமோ, விமான நிலையமோ கிடையாது. பாக்யாங் விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

நிர்வாகம்

சிக்கிம் மாநிலம் நான்கு வருவாய் மாவட்டங்களைக் கொண்டுள்ளது. அவைகள்: கிழக்கு சிக்கிம், வடக்கு சிக்கிம், தெற்கு சிக்கிம் மற்றும் மேற்கு சிக்கிம் ஆகும். இம்மாநிலத்தின் பெரிய முக்கிய நகரங்கள் கேங்டாக், கெய்சிங், மங்கன் மற்றும் நாம்ச்சி ஆகும்.

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சிக்கிம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 610,577 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 74.85% மக்களும், நகரப்புறங்களில் 25.15% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 12.89% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 323,070 ஆண்களும் மற்றும் 287,507 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 890 பெண்கள் வீதம் உள்ளனர். 7,096 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 86 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 81.42 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 86.55 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 75.61 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 64,111 ஆக உள்ளது. [2]

சமயம்

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 352,662 (57.76 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 9,867 (1.62 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 60,522 (9.91 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,868 (0.31 %) ஆகவும் சமண சமய மக்கள் தொகை 314 (0.05 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 167,216 (27.39 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 16,300 (2.67 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,828 (0.30 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்

இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான ஆங்கிலத்துடன், நேபாள மொழி மற்றும் சுமார் 10 வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.

அரசியல்

இம்மாநிலத்தில் முப்பத்து இரண்டு சட்டமன்ற தொகுதிகளும், ஒரு நாடாளுமன்ற மக்களவை தொகுதியும், ஒரு நாடாளுமன்ற இராச்சிய சபை தொகுதியும் உள்ளது.

இந்திய இராணுவம்

நாதுலா

இந்திய சீன எல்லைப் பகுதியான நாதூ லா கணவாய்க்குச் செல்ல முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். வாகன சோதனை முதலான பல சோதனைகளுக்குப் பின்னரே இப்பகுதிக்குச் செல்ல முடியும். எல்லைக்கு அப்பால் சீன இராணுவ வீரர்கள் நடமாடுவதையும் இங்கிருந்து பார்க்க முடியும். சுமார் 14400 அடி உயரத்தில் உள்ள இப்பகுதி கடுங்குளிர் கொண்டது.[1]

பாபா மந்திர்

சிக்கிமில் உள்ள பாபா மந்திர் புகழ் பெற்றது. பஞ்சாப் ரெஜிமெண்டைச் சேர்ந்த ஹர்பஜன் சிங் எனும் இராணுவ வீரர் ஞாபகார்த்தமாக ஏற்படுத்தப்பட்ட பாபா மந்திர் வித்தியாசமானது. ஆச்சர்யமான விதத்தில் இந்திய ராணுவம் அவர் தனது பணியைத் தொடர்வதாகக் கருதுகிறது. அங்கு பணிபுரியும் இந்திய இராணுவ வீரர்களுக்கு உற்சாகமூட்டி அவர்கள் மனவலிமையை அவர் திடப்படுத்துவதாக நம்பப்படுகின்றது. வருட விடுமுறையில் அவரது பெயரில் பஞ்சாபில் உள்ள அவரது வீட்டிற்கு அவர் செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது. அவரது இராணுவ சீருடையுடன் ஓர் ராணுவ வீரர் பயணம் செய்து ஹர்பஜன்சிங் வீட்டில் அவரது சீருடையை சேர்த்து விட்டு திரும்புகிறார்.[1]

சுற்றுலா

சுற்றுலாத் துறை இம்மாநிலத்தின் ஒரு முக்கியமான வருவாய் ஈட்டும் துறை ஆகும். இம்மாநிலம் முழுவதும் மலைப்பாங்கான பகுதியில் இருப்பதால் சுற்றுலாவுக்கு ஏற்றதாக உள்ளது. மேலும் பௌத்தர்களுக்கு ஒரு முக்கியமான சமய மையமாகவும் அமைந்துள்ளது. இங்கு சாங்கு ஏரி, குருதோங்மார் ஏரி, யும்தாங் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களும் ரும்டெக் மடம் போன்ற பௌத்தத் தலங்களும், நாதுலா எனும் இந்திய சீன எல்லைப் பகுதியும் குறிப்பிடத்தக்க இடங்களாகும்.

கேங்டாக்

அண்மைக் காலத்தில் கேங்டாக் நகரம் இந்திய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

ருஸ்தம்ஜி பூங்கா

ருஸ்தம்ஜி பூங்கா தலைநகர் கேங்டாக்கில் அரசுத் தலைமைத் செயலகத்திற்கு அருகிலுள்ளது. அரிய வகை மான்களும் சிவப்பு பாண்டாக் கரடிகளும் இங்கு வாழ்கின்றன.[1]

கஞ்சன் ஜங்கா மலை

கஞ்சன் ஜங்கா மலை மலையேற்ற வீரர்களுக்கும், பொதுமக்களுக்கும் சிறந்த சுற்றுலா இடமாக விளங்குகிறது.

மின் உற்பத்தி

இந்தியாவில், தன் மாநிலத்தின் தேவைக்கதிகமான மின் உற்பத்தி உள்ள மாநிலங்களில் முதலாவதாக சிக்கிம் உள்ளது.[3]

மேற்கோள்கள்

  1. கலைமகள்; நவம்பர் 2014; பக்கம் 10-12
  2. Sikkim Population Census data 2011
  3. http://timesofindia.indiatimes.com/india/Tripura-to-supply-100MW-power-to-Bangladesh/articleshow/44588026.cms
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.