வெண்கலக் காலம்

வெண்கலக் காலம் (Bronze Age) மனித நாகரிக வளர்ச்சியின் ஒரு காலகட்டமாகும். இக்காலத்தில் முன்னரிலும் மேம்பட்ட உலோகவேலைத் தொழில்நுட்பம், செப்பு, தகரம் என்பவற்றை, நிலத்துக்கு மேல் இயற்கையாகக் கிடைக்கும் அவற்றின் தாதுப் பொருட்களில் இருந்து பிரித்து எடுத்து உருக்குதல், வெண்கலம் ஆக்குவதற்காக அவ்விரு உலோகங்களையும் கலத்தல் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தது. வெண்கலக் காலம், வரலாற்றுக்கு முந்திய சமூகங்களுக்கான முக்கால முறையில் இரண்டாவது காலகட்டம் ஆகும். இம் முக்காலங்களில் முதலாவது கற்காலமும், மூன்றாவது இரும்புக் காலமும் ஆகும். இந்த முறையின் கீழ், சில பகுதிகளில், வெண்கலக் காலம், புதிய கற்காலத்தை அடுத்து வருகிறது. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் தென் இந்தியாவிலும் வேறு சில பகுதிகளிலும், வெண்கலக் காலம் இல்லாமலேயே புதிய கற்காலத்தை அடுத்து இரும்புக் காலம் உள்ளது.

வரலாறு

தொல்லியலின் முக்கால முறைமையின் படி கற்காலத்தை அடுத்து வெண்கலக் காலம் வருகிறது. தொன்மவியல் கதைகளின் படி இதற்கு முன் தங்கக்காலமும் வெள்ளிக்காலமும் இருப்பதாகக் கருதப்பட்டாலும் அவை வரலாற்று ஆய்வாளர்களால் நிறுவப்பட்ட வரலாறாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆனால் கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக்காலம் போன்றவை வரலாற்று ஆய்வாளர்களால் பொதுவாகவே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்த வெண்கலக் காலம் புவியின் ஒவ்வொரு பகுதியிலும் தொடங்கிய காலம் வேறுபடுகிறது. தகரக்கனிமத்தில் இருந்து தகரத்தை பிரித்தெடுத்து அதை செப்புக்கூழோடு சேர்ப்பர்.

சிந்து சமவெளி

சிந்துவெளி நாகரிகத்தில் வெண்கலத்தின் பயன்பாடு கி.மு. முப்பத்தி மூன்றாம் நூற்றாண்டில் இருந்தே தொடங்குகிறது. அரப்பன் மக்கள் உலோகவியலில் செம்பு, வெண்கலம், ஈயம் மற்றும் தகரம் போன்றவற்றை பற்றிய புதிய நுட்பங்களை உருவாக்கினர். இப்பகுதியில் வெண்கலக் காலம் முடிந்தவுடன் இரும்புக் காலம் எழுந்தது. வெண்கல-இரும்புக் கால குழப்ப காலம் கி.மு. பதினேழாம் நூற்றாண்டில் இருந்து கி.மு. பதிமூன்றாம் நூற்றாண்டு வரை இருந்ததாக கணிக்கப்படுகிறது. இப்பகுதியின் வெண்கலக் காலம் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது.

ஆண்டுகள் (கி. மு. வில்) கட்டம் காலம்
3300-2600 முந்தைய அரப்பன் (முந்தைய வெண்கலக் காலம்)
3300-2800 இரவி கட்டம்
2800-2600 கோட் திசி கட்டம் (முதலாம் நௌசாரா, ஏழாம் மெகர்கார்)
2600-1900 முதிர்ச்சி பெற்ற அரப்பன் சிந்துவெளி நாகரிகம் ஓரிடமாக்கல் காலம்
2600-2450 மூன்றாம் அரப்பனின் சடைப்பகுதி, இரண்டாம் நௌசாரா
2450-2200 மூன்றாம் அரப்பனின் இடைப்பகுதி
2200-1900 மூன்றாம் அரப்பனின் கடைப்பகுதி
1900-1300 பிந்தைய அரப்பன் செமட்ரி எனப்படும் காவி வண்ணப் பானைகள் செய்யப்பட்ட காலம் ஓரிடப்படுத்தல் காலம்
1900-1700 நாலாம் அரப்பன்
1700-1300 ஐந்தாம் அரப்பன்

பண்டைய எகிப்து

பண்டைய எகிப்தில் வெண்கலத்தின் பயன்பாடு கி.மு. முப்பத்து இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே தொடங்குகிறது. எகிப்தின் முந்தைய வெண்கல அரசுகள் கி.மு. மூன்றாம் ஆயிரவாண்டுக்கு முன் தொடங்கி கி.மு. இரண்டாம் ஆயிரவாண்டில் முடிவடைகிறது. மத்திய வெண்கல அரசுகள் கி.மு. இரண்டாம் ஆயிராவாண்டுக்கு முன் தொடங்கி கி.மு. பதினேழாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் முடிவடைகிறது. பிந்தைய வெண்கல அரசுகள் கி.மு. கி.மு. பதினேழாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் தொடங்கி கி.மு. முதலாம் ஆயிராவாண்டில் முடிவடைகிறது. இந்த பிந்தைய வெண்கல அரசுகளின் இறுதிக்காலத்திலேயே வெண்கல-இரும்புக் கால குழப்ப காலமும் எகிப்தில் தொடங்கிவிட்டது.

பண்டைய சீனமும் கொரியாவும்

பண்டைய சீனத்தில் மாசியயோ சமூக (கி.மு. முப்பத்து முதலாம் நூற்றாண்டு முதல் இருபத்து ஏழாம் நூற்றாண்டு வரை) வெண்கலக் காலம் அறிமுகமானது. எனினும் கி.மு. இரண்டாம் ஆயிரவாண்டின் ஆரம்பம் தொடங்கி கி.மு. எட்டாம் நூற்றாண்டு வரையில் வெண்கலத்தின் பயன்பாடு இப்பகுதியில் பரவலாகக் காணப்பட்டது. கொரியா தீபகற்பத்தில் வெண்கலக்காலம் கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டு ஆரம்பமானது.

பண்டைய பிரிட்டன்

பண்டைய பிரிட்டனில் முந்தைய வெண்கலக் காலம் கி. மு. இருபத்து ஐந்தாம் நூற்றாண்டு தொடங்கி கி. மு. பதினைந்தாம் நூற்றாண்டு வரை வழக்கில் இருந்தது. பிரிட்டனில் வெண்கலத்தில் தோற்றக் காலம் குறித்து தெளிவான வரையறை இல்லாவிட்டாலும் அதன் பிறகு வந்த மத்திய வெண்கலக் காலமும் புதிய வெண்கலக் காலமும் பின்வருமாறு கணிக்கப்படுகின்றன

முந்தைய வெண்கலக் காலம் (கி. மு. 2500-1500)
  • கி. மு. 2500 - 2000: மவுன்ட் பிளசன்ட் பகுதி, முந்தைய பீக்கர் சமூகம் (செம்பும் தகரமும்)
  • கி. மு. 2100-1900: பிந்தைய பீக்கர் சமூகம், கத்திகளும் வேல்களும் அறிமுகப்படுத்தப்பட்ட காலம்
  • கி. மு. 1900-1500: பெட் பிரான்வென் காலம் (செம்பும் தகரமும்)
மத்திய வெண்கலக் காலம் (கி. மு. 1500-1000)
  • கி. மு. 1500-1300: ஆக்டன் பார்கு பகுதி, பிணைக்கப்பட்ட ஈட்டிகள் (செம்பும் தகரமும் அல்லது செம்பும் ஈயமும்)
  • கி. மு. 1300-1200: நைட்டன் ஹெத் காலம்
  • கி. மு. 1200-1000: முந்தைய அர்ன்பீல்ட் பகுதி
பிந்தைய வெண்கலக் காலம் (கி. மு. 1000-700)
  • கி. மு. 1000-900 BC: பிந்தைய அர்ன்பீல்ட்
  • கி. மு. 800-700 BC: எவர்ட் பார்க் பகுதி, வாள்கள் உருவாக்கம் பெற்ற காலம்

வெண்கலக் காலம் இல்லாத பகுதிகள்

ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் தென் இந்தியாவிலும் வேறு சில பகுதிகளிலும், வெண்கலக் காலம் இல்லாமலேயே புதிய கற்காலத்தை அடுத்து இரும்புக் காலம் உள்ளது. அதனால் இதை வெண்கலக் காலம் இல்லாத பகுதிகள் எனக் கூறலாம்.

ஜப்பான்

ஜப்பான் பகுதிகளில் சோமான் காலம் வழக்கிழந்த பிறகு கி. மு. ஐந்தாம் நூற்றாண்டு அளவில் வெண்கலமும் இரும்பும் ஒன்றாகவே அறிமுகமானது. இந்த இரண்டு உலோகமும் கொரிய தீபகற்பத்திலிருந்து இங்கு சென்றதால் ஜப்பானுக்கு வெண்கலக் காலம் என்று தனியாக இல்லை. ஜப்பானின் முந்தைய குடிகளை விரட்டிய சோமான்களின் வழியாக பரவிய உலோகக் காலத்தில் இரும்பே வேளாண்மைக்கும் மற்ற கருவிகள் உருவாக்கத்துக்கும் பயன்படுத்தப்பட்டது. வெண்கலம் கலைப்பொருள்களுக்கும் மதச்சடங்குகளில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள்களை வைத்துக் கொள்வதற்கே பயன்படுத்தப்பட்டன.

ஆப்பிரிக்கா

மற்ற இடங்களில் வெண்கலக் காலம் வழக்கில் இருந்த போது ஆப்பிரிக்காவில் எகிப்தியப் பகுதிகளைத் தவிர்த்த இடங்களில் புதிய கற்காலமே வழக்கில் இருந்தது. வெண்கலம் ஆப்ரிக்கப் பகுதிகளில் அதிகம் காணப்படாவிட்டாலும் செப்பை மட்டும் தாதுப் பொருட்களில் இருந்து பிரித்தெடுக்க ஆப்ரிக்கர்கள் அறிந்தே இருந்தனர். எனினும் இந்த செப்பை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தில் இப்பகுதி முதிர்ச்சி அடைந்து காணப்படவில்லை.

தென் இந்தியாவும் இலங்கையும்

தென் இந்தியாவில் வெண்கலப் பொருள்கள் வட இந்தியாவில் இருந்தே அக்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்டன. இதற்கு உதாரணமாக கொடுமணல் அகழாய்வில் கிடைத்த கி. மு. ஐந்தாம் நூற்றாண்டு அளவு பழமை என்று கருதத்தக்க வட இந்தியாவின் வெண்கலப் பொருள்களை எடுத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டின் வட பகுதிகள் புதிய கற்காலத்தில் இருந்து நேரடியாக இரும்புக்காலத்துக்கும் தென் தமிழகம் இடைக்கற்காலத்தில் இருந்து நேரடியாக இரும்புக்காலத்துக்கும் மாறின.

இலங்கையிலும் வெண்கலக் காலம் என்று தனிச்சிறப்பாக ஏதுமில்லாவிடினும் அங்கு செம்பு மட்டும் தாதுப்பொருளில் இருந்து பிரிக்கப்பட்டு சிறிதளவு பயன்பாடில் இருந்துள்ளன.

வெண்கல விண் தட்டு

வானவியல் ஆராய்ச்சியாளர்கள் 1999 ஆம் ஆண்டில் அகழ்வாராய்ச்சி மூலமாகப் பூமியிலிருந்து எடுக்கப்பட்ட வெண்கலத் தட்டை கொண்டு சோதனையில் ஈடுபட்டு முடிவுகளை அறிவித்தனர். இந்த நெப்ரா ஸ்கை டிஸ்க் எனப்படுவது, தோராயமாக கி.மு.1600 இல் மத்திய வெண்கல காலத்தில் வாழ்ந்த மக்களால் உருவாக்கப்பட்டிருக்கக் கூடுமென கருதப்படுகிறது. மேலும், இது முதன் முதலாக உருவாக்கப்பட்ட ஸ்கை மேப் என்றும் புவியியலாளர்கள் கூறுகின்றனர். இந்த வெண்கலத் தட்டு, சுமார் 32 செ.மீ. விட்டம் கொண்டதாக உள்ளது. சந்திரன், சூரியன் மற்றும் சில நட்சத்திரங்கள் போன்றவற்றைத் தெளிவாகக் காட்டும் வகையில் தங்கத் திரவம் கொண்டு பூசி அழகுபடுத்தப்பட்டுள்ளது. [1] வெண்கலக் காலத்தில் வாழ்ந்த மக்கள், வசந்த காலம் மற்றும் இலையுதிர் காலம் ஆகியவற்றில் விவசாயம் சார்ந்த விதைத்தல் மற்றும் அறுவடை செய்தல் போன்றவற்றினைச் சிறந்த முறையில் கணிக்க உதவும் காலக் கணிப்பானாக இந்தக் விண் தட்டு (Sky Disc) பயன்பட்டிருக்க வேண்டுமென்பது இக்கண்டுபிடிப்பாளர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.

பிளீயட்ஸ் காலமான குளிர்காலத்தில் அமாவாசை (No Moon Day) அன்று இரவுப் பொழுதில் விண்ணில் நட்சத்திரங்கள் நிறைய தோன்றினால் அது வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியென நம்பி விதைகளை எடுத்துக் கொண்டு விளைச்சல் நிலங்களில் விதைக்கத் தொடங்கி விடுவர். அதேபோல், முழு நிலவு தோன்றும் பௌர்ணமிக்குப் (Full Moon Day) பிறகான கால கட்டத்தில் வானில் நட்சத்திரங்கள் நிரம்பக் காணப்பட்டால், அது சாகுபடிப் பணிகள் மேற்கொள்வதற்கான உகந்த காலம் என்றெண்ணி அறுவடையினை மேற்கொள்வர். இவ்வாறாக, வெண்கலக் காலத்தில் வாழ்ந்த மக்கள், காலநிலைக் காட்டும் வான் தட்டைப் பயன்படுத்தி விவசாயத் தொழிலைச் செய்து வந்தனர். 1999 ஆம் ஆண்டு ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண் தட்டில் இரண்டு வெண்கல வாள், இரண்டு சிறிய அச்சுகள், ஒரு உளி மற்றும் சுழல் போன்று வளையங்கள் உடைய பிளவுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ளது. [1]

வெண்கலக் கால அழிவிற்கான காரணங்கள்

ஆதி மனிதன் மொழியைக் கண்டுபிடித்து பயன்படுத்தத் தொடங்கிய கால கட்டமாக வெண்கலக் காலம் அறியப்படுகிறது. மெசபடோமியா, ஈஜிப்ட் ஆகியவற்றில் பேச்சு மொழியும் எழுத்து முறையும் முதன் முதலாகத தொடங்கப்பட்டது. ஐரோப்பாவில் கி.மு. 3200 இலிருந்து கி.மு. 600 வரையிலான காலம் வெண்கலக் காலம் எனப்படுகிறது. இத்தகைய வெண்கலக் காலம் அழிந்ததற்கான காரணத்தைப் பிற்காலத்தில் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இஸ்ரேல் நாட்டிலுள்ள கலிலீ எனும் கடலுக்கடியில் கிடைக்கப்பெற்ற மகரந்தத்தின் தொல்படிவங்களின் காணப்பட்ட கடுமையான வறட்சி என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். டெல் அவிவ் பல்கலைக் கழகத்தின் தொல்பொருள் ஆய்வறிஞரான இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த, ஃபிங்கல்ஸ்டீன் மற்றும் அவருடைய சக ஊழியர்களான டாஃப்னா லங்குட் மற்றும் தாமஸ் லிட் ஆகியோர், கி. மு. 1250 முதல் கி. மு. 1100 வரை காணப்பட்ட நீண்ட தொடர் வறட்சிக் காரணமாக வெண்கலக் காலம் அழிவுற்று முடிவுக்கு வந்ததாகக் குறிப்பிடுகின்றனர். கி.மு. 1250 க்கு பின்னர், மத்தியத் தரைக்கடலைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் அதிகளவில் காணப்படும் கருங்காலி, தேவதாரு, ஆலிவ் மற்றும் காரப் வகை மரங்களின் எண்ணிக்கையானது வெகுவாகக் குறைந்து போனது.அதேசமயம், வறண்ட நிலங்களில் மிகுதியாகக் காணப்படும் செடிகளும் மரங்களும் அங்கு அதிகரித்துக் காணப்படுவதைச சான்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.[2]

மேற்கோள்கள்

  1. "வெண்கலக் காலத்தில் விவசாயிகளுக்கு கால மாற்றங்களை அறிய உதவிய ஸ்கை மேப்". பார்த்த நாள் 19 சூன் 2017.
  2. "மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்த நாகரிகம்: காரணம் கண்டுபிடிப்பு". பார்த்த நாள் 19 சூன் 2017.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.