வேத வியாச பட்டர்

வைணவ ஆச்சாரியர்களில் முதன்மையான ஸ்ரீராமானுசரின் மாணாக்கருள் கூரத்தாழ்வரின் இளைய மகனே வேதவியாச பட்டர் எனப்படும் வியாசபட்டர் ஆவார்.

வேதவியாச பட்டர்
பிறப்புவியாசப்பட்டர்
திருவரங்கம், திருச்சி, தமிழ்நாடு
இறப்புதிருவரங்கம், தமிழ்நாடு

பெயர் காரணம்

சுபகிருத் என்ற தமிழ் ஆண்டில் வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரம் கூடிய நாளில், இராமானுசரின் முதன்மை சீடரான கூரத்தாழ்வாரின் இளையமகனாக பிறந்தார். இவர் புகழ்மிக்க பராசர பட்டரின் இளையவர் ஆவார். இரட்டைப்பிறவிகளான இவர்களின் பிறப்பின் வரலாறு வெகு சுவையானது. ஸ்ரீரங்கத்தில் தன் வழக்கப்படி பிட்சைக்காக செல்லவேண்டிய கூரத்தாழ்வான் கொடு மழையால் வெளியில் போகமுடியாமல் இருந்தார். அவரும் அவருடைய மனைவியார் ஆண்டாளும் அன்று பட்டினி. ஆனால் அவர்கள் பக்தியுடன் போற்றி வந்த அரங்கநாதப் பெருமாள் (ஸ்ரீரங்கம் கோயிலின் மூலத்தெய்வம்) அவர்கள் பட்டினி கிடப்பதைப் பொறுக்காமல் அசரீரியாக கோயிலின் பட்டர் உத்தமநம்பி என்பவர் மூலம் அவர்களுக்கு உணவு அனுப்பி வைத்தார். அதில் மூன்றில் ஒரு பங்கை தான் உண்டு மீதி இரண்டு பங்கை தன் மனைவியான ஆண்டாளை உண்ணச் செய்தார் ஆழ்வார். காலக்கிரமத்தில் ஆண்டாள் இரு மகவை ஈன்றெடுத்தாள். இராமானுசர் தன் குருவான ஆளவந்தாருக்கு செய்துக்கொடுத்த இரண்டாம் வாக்கின்படி விஷ்ணுப்புராணம் பாடிய பராசர முனிவரின் பெயரும், பாகவதம் பாடிய வேதவியாசரின் பெயரும் விளங்குவண்ணம் கூரத்தாழ்வரின் மக்களுக்குள் முதலாமவருக்கு "பராசர பட்டர்" என்றும், இளையவருக்கு "வியாசப்பட்டர்" என்றும் பெயரிட்டார்.

பிற பெயர்கள்

  • ஸ்ரீ ராமப்பிள்ளை
  • ஸ்ரீ ராமசூரி

கல்வியும் தேர்ச்சியும்

வடமறையான எல்லா சாஸ்திரங்களையும், தென்மறையான திவ்யபிரபந்தத்தையும் தந்தையிடமிருந்தும் மற்றும் தன்னுடைய குருவான எம்பார் இடமிருந்தும் கசடறக் கற்றார். எம்பார் என்பவர் இராமானுசராலேயே துறவறம் கொடுக்கப் பெற்று, 'மந்நாதர்' என்று வடமொழியிலும் அதற்குரிய தமிழ்ச்சொல்லான 'எம்பெருமானார்' என்று தமிழிலும் பெயர் சூட்டப்பட்டவர். அத்தமிழ்ப் பெயரின் சுருக்கம் தான் 'எம்பார். ஜகந்நாத தலத்திலுள்ள புகழ்பெற்ற வைணவ மடம் இன்றும் அவர் பெயரைத் தாங்கி நிற்கின்றது.

முதிர்ச்சி

தன் உடன்பிறப்பான பராசர பட்டர் மறைவுக்குப்பின் வேதவியாச பட்டர் தன் தமையனின் பணிகளைத் தொடர்ந்தார். ஸ்ரீபாஷ்யத்திற்கு உரை எழுதிய சுதர்சன சூரி என்றும் சுரதபிரகாசிக பட்டர் என்றும் அழைக்கப்படும் வைணவப் பெரியவர் வேதவியாச பட்டரின் மகனாவார்.

தனியன்

பின்வரும் வடமொழி தனியன் இவரின் புகழை பகற்கிறது

பௌத்ரம் ஸ்ரீராமமிச்ரஸ்ய ஸ்ரீவத்ஸாங்கஸ்ய நந்தநம்
ராமஸூரிம் பஜே பட்டபராஸாரவராநுஜம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.