இராமானுசரின் மூன்று திருமேனிகள்

வைணவப் புரட்சித் துறவி இராமானுசரின் மூன்று திருமேனிகள் புகழ் பெற்றவை ஆகும். அவை:

  1. தமர் உகந்த திருமேனி (மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம், மைசூர்)
  2. தானுகந்த திருமேனி (ஸ்ரீபெரும்புதூர்)
  3. தானான திருமேனி (ஸ்ரீரங்கம்)
வைணவப் புரட்சித் துறவி இராமானுசர் (1017-1137)

வரலாற்று சுருக்கம்

பிறப்பு

இராமானுசர் (1017-1137) கி.பி. 1017 ஆம் ஆண்டு சித்திரை மாதம், வளர்பிறை பஞ்சமி திதி, திருவாதிரை நாளில், வியாழக்கிழமை (04-04-1017) அன்று ஸ்ரீபெரும்புதூரில் கேசவ சோமையாஜி, காந்திமதி தம்பதியருக்கு மகனாக அவதரித்தார். இராமனுசருக்கு யதிராசர் என்ற பெயருமுண்டு. யதி என்ற சொல் துறவி என்று பொருளுடையது. ராசர் எனில் அரசன் யதிராசர் எனில் துறவிகளில் தலைமைப் பண்புடையவர் என்பது பொருள். ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் தாயாருக்கு யதிராசவல்லித் தாயார் என்ற பெயர் வைணவ மகானான இராமனுசரின் பெயரை ஒட்டி அமைந்துள்ளது வியப்பானது. விசிட்டாத்துவைதம் என்ற தத்துவ இயலை உலகம் முழுதும் பரப்பிய வைணவ புரட்சித் துறவி இவர். இவரை பாஷ்யக்காரர் என்றழைக்கிறார்கள். ஏனெனில் இவர் பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற ஓர் புகழ் பெற்ற உரையை இயற்றினார்.

வைணவத்தில் புரட்சி

இராமானுசர் வைணவத்தின் அருமை பெருமைகளை இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றியலைந்து பரவச்செய்தார். மாற்று மதத்தாருடன் எதிர்வாதம் புரிந்து அவர்களை வைணவத்தில் வழிப்படுத்தினார். பல வைணவ மடங்களை நிறுவி பாதுகாத்தார். பல வைணவ ஆன்மீக பிடிப்புள்ள இல்லறத்தாரையும் மடத்தலைவர்களாக நியமித்தார். சாதி பேதம் பாராமல், வைணவம் சார்ந்த ஆண், பெண் ஆகிய இருபாலரையும் தமிழ் பாசுரங்களை ஓதவும், வைணவ மதச்சின்னங்களை அணியவும் வைணவத்தில் இடமளித்தார். பெருமாள் மேல் அன்பும், பக்தியும் கொண்டு, அவன் தாள் பற்றி பூரண சரணாகதி அடையும் அடியவர் அனைவரும் வைணவரே என்பதில் மிக்க நம்பிக்கை கொண்டவர் இராமானுசர்.

மேல்கோட்டை திருநாரணன் கோவில் கைங்கர்யம்

இராமானுசர் சோழ மன்னனின் கோபத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள கர்நாடக மாநிலத்தில், மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்றழைக்கப்படும் திருநாராயணபுரம் என்ற ஊரில் அமைந்த திருநாராயணன் கோவிலுக்குச் சென்று அங்கு 12 ஆண்டுகள் தங்கி கைங்கர்யங்கள் செய்தார். இது இராமனுசரின் அபிமான தலம் ஆகும். வடநாட்டில் ஒரு பத்ரிகாஸ்ரமம் இருப்பது போல் இத்தலம் தென் பத்ரிகாஸ்ரமம் என்றே அழைக்கப்படுகிறது.

ஸ்ரீரங்கத்தில் இறுதிக்காலம்

ஸ்ரீரங்கத்தில் அரங்கன் கோவில் நிர்வாகத்தை நெறிப்படுத்திய பெருமை இராமனுசரையே சேரும். தினசரி கோவில் நடைமுறைகள் சீரானதும் வைஷ்ணவ மட நிர்வாகம் சிறப்புற்றதும் இவரால் தான். அவர் இயற்றிய பல நூல்களில் முக்கியமானவையாகக் கருதப்படுபவை:

  1. கீதா பாஷ்யம்
  2. ஸ்ரீ பாஷ்யம்
  3. வேதாந்த சங்க்ரஹம்
  4. வேதாந்த சாரம்
  5. வேதாந்த தீபம்
  6. கத்யத்ரயம்
  7. நித்ய க்ரந்தம்

இராமானுசர் தமது 120 ஆவது வயதில் (கி.பி. 1137), தாம் பிறந்த அதே பிங்கள வருடம் மாசி மாதம் வளர்பிறை தசமிதிதியில், திருவாதிரை நட்சத்திரத்தில், சனிக்கிழமை நண்பகலில், ஜீயர் மடத்தில் மரணம் (பகவத் சாயுஜ்யம்) அடைந்தார்.

தமர் உகந்த திருமேனி (மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம், மைசூர்)

தமர் உகந்த திருமேனி முதல் திருமேனி (இராமானுசர் சிலை) கர்னாடகா மாநிலத்தில், மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்ற திருநாராயணபுரத்தில் நிறுவப்பட்டது. இவர் இங்கு 12 ஆண்டுகள் தங்கி கைங்கர்யங்கள் செய்தார். இது இராமனுசரின் அபிமான தலம் ஆகும். தாழ்த்தப்பட்டவர்களைக் (பஞ்சமர்களைக்) கோவிலுக்குள் அழைத்துச் சென்று புரட்சி செய்ததும் இத்திருத்தலத்தில்தான். இராமானுசர் தன் 80 ஆவது வயதில் திருநாராயணபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்வதற்காக அங்கிருந்த சீடர்களிடம் விடைபெற முயன்றார். அவரது சீடர்கள் அவரைப் பிரிந்து வாழ வேண்டுமே எனத் தவித்தார்கள். இது கண்டு துயருற்ற இராமானுசர் ஒரு சிற்பியைக் கொண்டு தன் உருவத்தை சிலையாக வடித்தார். இந்தச் சிலை இராமானுசர் கைகூப்பி வணங்கி விடைபெறும் கோலத்தில் அமைந்துள்ளது. இந்தச் சிலையில் தம் தெய்வீக சக்திகளைப் பாயச்செய்தார். பின்பு சக்தியூட்டிய சிலையை தன் சீடர்களிடம் ஒப்படைத்தார். விடைபெறும்போது ‘நான் உங்களுடனேயே தங்கி இருப்பதாக எண்ணி இந்தச் சிலையை கண்டு மகிழ்ந்து அமைதி பெறுங்கள்.’ என்று அவர்களை அமைதிப்படுத்தினார். இந்தச்சிலை தமர் உகந்த திருமேனி என்றழைக்கப்படுகிறது. இன்றும் மேல்கோட்டையில் இச்சிலை வழிபடப்படுகிறது.

தானுகந்த திருமேனி (ஸ்ரீ பெரும்புதூர்)

தானுகந்த திருமேனி இரண்டம் திருமேனி (இராமானுசர் சிலை) ஸ்ரீபெருபுதூரில் நிறுவப்பட்டது. இராமானுசர் தம் 120 ஆவது வயதில் ஸ்ரீரங்கத்தில் தங்கி கோவில் நிர்வாகத்தை நெறிப்படுத்துதலிலும், வைஷ்ணவ மட நிர்வாகங்களைச் சீரமைப்பதிலும் ஈடுபட்டிருந்தார். அப்போது இராமானுசரின் பிறந்த இடமான ஸ்ரீபெரும்புதூரில் வாழ்ந்த சில சீடர்கள் இம்மகானுக்கு ஒரு சன்னதி அமைத்து அங்கே அவரின் திருஉருவம் தாங்கிய கற்சிலை ஒன்றை நிறுவ முனைந்து கொண்டிருந்தார்கள். சிலைக்கு கண் திறக்கும் சடங்கு மிக முக்கியமானது. இவ்வாறு சிற்பி கண் திறக்க முனைந்த போது உளி பட்டு சிலையின் கண்களில் இரத்தம் வழிந்தது. இந்த சமயம் இராமானுசர் தம் சீடர்களுக்கு வேதத்தின் உட்பொருளை விளக்கி அருளியவாரிருந்தார். திடீரென்று அவர் தியானத்தில் ஆழ்ந்துவிடவே சீடர்கள் குழம்பிப் போனார்கள். இதன் காரணம் பற்றிக் கேட்டபோது ஸ்ரீபெரும்புதூரில் என் சீடர்கள் தங்கள் பக்தியால் என்னைக் கட்டிப் போட்டுள்ளார்கள் என்றார்.

பின்பு இராமானுசர் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளிய போது அவரின் சீடர்கள் தங்கள் குருவின் ஆலோசனைப்படி அவர் உருவம் தாங்கிய செப்புச்சிலை ஒன்றை செதுக்கினார்கள். இராமானுசர் அச்சிலையைத் தழுவி தன் சக்தியை அச்சிலையின் உள்ளே செலுத்தினார். இச்சிலை தானுகந்த திருமேனி என்று பெயர் பெற்றது. இதன் பொருள் இராமானுசரே உகந்து (விரும்பி) அணைத்ததால் இந்தப் பெயர் பெற்றது. இச்சிலை இன்றும் ஸ்ரீ பெரும்புதூர் கோவிலில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று இச்சிலைக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இச்சிலை விலா எலும்பு, காது மடல் உள்ளிட்ட இராமானுசரின் 120 வயது தோற்றத்தினை மிகவும் தெளிவாகக் காட்டுகிறது.

தானான திருமேனி (ஸ்ரீரங்கம்)

தானான திருமேனி மூன்றாவது திருமேனி (இராமனுசர் பூதஉடல்) இராமானுசர் ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தவுடன், அரங்கனுடைய வசந்த மண்டபத்திலேயே அவருடைய திருமேனியை (பூத உடலை) பிரதிஷ்டை செய்தார்கள்.

இராமானுசர் தமது 120 ஆவது வயதில் (கி.பி. 1137), தாம் பிறந்த அதே பிங்கள வருடம் மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில், சனிக்கிழமை நண்பகலில், ஜீயர் மடத்தில் மரணம் (பகவத் சாயுஜ்யம்) அடைந்தார். அவருடைய சீடர்களான கந்தாடையாண்டான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், எம்பார், வடுகநம்பி முதலானோர் வேரறுந்த மரம் போல் விழுந்து கிடந்து துடித்தனர். உயிர் பிரிந்த உடனே:

தர்மோ நஷ்ட (தர்மத்திற்கே பெருத்த நஷ்டம்) என்று அசரீரி ஒலித்ததாம். அப்போது நடந்த நிகழ்வுகள் எல்லாம் அதிசயத்திலும் அதிசயமானது என்கிறார்கள்.

நம்பெருமாள் என்னும் அரங்கன் தான் உடுத்திக் களைந்த பீதகவாடையையும், சூடிக்களைந்த துழாய் மலரினையும், எண்ணெய்க் கிண்ணத்தையும் தம் இறுதி மரியாதையாக ஒரு பொற்கிண்ணத்தில் இட்டு உத்தம நம்பி என்ற சீடர் மூலம் ஜீயர் மடத்திற்கு அனுப்பினாராம். உத்தம நம்பிகள் ஜீயர் மடத்தில் இருந்த சீடர்களுக்கு ஆறுதல் சொல்லி அதன் பிறகு எண்ணெயை இராமானுசரின் திருமுடியில் தேய்த்துப் பின் அவர் திருவுடலை நீராட்டி, அரங்கன் உடுத்திக் களைந்த பீதகவாடையையும் சூடிக்களைந்த தொடுத்த துழாய் மலரினையும் திருமேனியில் சாற்றினாராம். பின்பு எண்ணெய் மற்றும் ஸ்ரீ சூர்ணங்களும் பிரசாதமாக அங்கிருந்தோருக்கு வழங்கப்பட்டதாம். இதை வைணவ மொழியில் பிரம்மமேத ஸம்ஸ்காரம் என்கிறார்கள்.

இதன் பின்பு இராமானுசரின் திருமேனி ஒரு வாகனத்தில் (திவ்ய விமானத்தில்) அமர்த்தப்பட்டு இதன் முன்னின்று அவருடைய முக்கிய சீடர்களும் ஜீயர்களும் பரஹ்மவல்லி, ப்ருகுவல்லி, நாராயணானுவாகம் போன்ற மந்திரங்களை ஓதினராம். பல்லாயிரக்கணக்கான வைணவ சீடர்கள், வைணவப் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் புடை சூழ இராமானுசர் திருமேனி தாங்கிய வாகனம் இறுதிப்பயண ஊர்வலத்தைத் தொடங்கியது. திருவரங்கப் பெருமாளரையர் தலைமை தாங்கி திருவாய்மொழியரையர், ஆப்பான், திருவழுந்தூரரையர், திருநறையூரரையர், அழகிய மணவாரரையர் முதலிய எழுநூறு திருவாய்மொழி ஓதும் அரையர்கள் திருவாய்மொழியினை ஓதியபடி பின் தொடர்ந்தனர். தொடர்ந்து இராமானுஜ நூற்றந்தாதி ஓதியபடி திருவரங்கத்து அமுதனார், பெரியகோவில் வள்ளலார் முதலியவர்கள் வாகனத்தின் பின் வந்தனர்.

ஸ்ரீரங்கத்தில் ஜீயர் மடத்திலிருந்து நகரின் நான்கு உத்திர வீதி, சித்திரை வீதிகளிலும் வாகனம் ஊர்ந்தது. மக்கள் கூட்டம் வீதியெங்கும் நிரம்பி வழிந்தது. பெண்கள் தங்கள் வீதிகளில் நீர் தெளித்துக் கோலமிட்டுக் கூடி நின்றனர். மக்கள் பூவும் பொரியும் கலந்து தூவினார்களாம். அரங்கன் கோவில் திருநடை மூடி, கரும்பும் குடமும் ஏந்தினராம். அடியார்கள் சாமரம் வீச, வானில் கருடன் வட்டமிட இராமானுசர் இறுதி ஊர்வலம் திரும்ப கோவில் வாயிலை அடைந்தபோது:

தர்ஸனத்தில் எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்று அசரீரி மீண்டும் ஒலித்ததாம்.

தொடர்ந்து அரங்கன்:

இராமானுசன் என்தன் மாநிதி

என்றும்

இராமனுசன் என்தன் சேமவைப்பு

என்றும் திருவாய் மலர்ந்தருளினாராம். எனவே இராமனுசரின் பூத உடல் என்ற அந்த நிதி வெளியே எங்கும் போகலாகாது என்று அரங்கன் தன் திருக்கோவில் வளாகத்திலேயே (ஆவரணத்துக்குள்ளேயே) எவ்வாறு ஒரு அரசன் தன் பெண்டிரை தன் அந்தபுரத்திலே அடக்கி வைப்பானோ அதுபோல தன்னுடைய சன்னதிக்குள்ளேயே, (யதி ஸம்ஸ்காரவிதியின் படி), பள்ளிப்படுத்தினர்.

பல வருடங்களுக்கு முன் வைணவ மரபில், துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது. மாறாக அவர்களை திருப்பள்ளிப் படுத்துவார்கள் (புதைத்தல்). இராமானுசரின் பூதவுடலை ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் (முன்னாள் வசந்த மண்டபம் என்றழைக்கப்பட்ட இடத்தில்) திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி. இன்றும் நாம் இவருடைய பூத உடலை தரிசிக்கலாம் இவரின் திருமேனியில் தலைமுடி கைநகம் போன்றவற்றைக் கூட எளிதாகக் காண இயலும். ஸ்ரீரங்கத்தில் இராமானுசரின் சன்னதியில் எழுந்தருளியுள்ள திருமேனிக்கு தானான திருமேனி.என்று பெயர்.

வெளி இணைப்புக்கள்

  1. தாமான திருமேனியர்
  2. Pesum Arangan -83
  3. ஸ்ரீபெரும்புதூர்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.