காஞ்சிபுரம் கச்சி மயானேசுவரர் கோயில்

காஞ்சிபுரம் கச்சி மயானேசுவரர் கோயில் (கச்சி மயானம்) என அறியப்பட்ட இது, தேவார வைப்புத்தலமாகும். [1] மற்றும், காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாக உள்ள இவ்விறைவரை மயான லிங்கேசர் எனும் பெயராலும் அழைக்கப்படுகிறது. மேலும், பண்டாசுரனை அழிக்க வேள்வி செய்த அத்தீக்குண்டமே தற்போது கோயிலுள் இருக்கும் சிவகங்கைத் தீர்த்தமாக உள்ள. இக்கோவில் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டுள்ளது.[2]

தேவாரம் பாடல் பெற்ற
காஞ்சிபுரம் கச்சி மயானம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் கச்சி மயானம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கச்சி மயானேஸ்வரர், மயான லிங்கேசர்.
தாயார்:காமாட்சி அம்மையார்.
தீர்த்தம்:சிவகங்கை தீர்த்தம்.
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருநாவுக்கரசர்.
தொலைபேசி எண்:+91 (044) 2722 2084

இறைவர், வழிபட்டோர்

  • இறைவர்: கச்சி மயானேஸ்வரர், மயான லிங்கேசர்.
  • இறைவியார்: காமாட்சி அம்மையார்.
  • வழிபடும் நேரம்: தினமும், காலை 06:00 முதல் - பிற்பகல் 12:30 வரை, மாலை 04:00 முதல் - இரவு 08:30 வரை திறந்திருக்கும்.

தல பெருமை

இக்கோயில் மூலத்தானத்தின் மூலவராக, கச்சி மயானேசுவரர் எழுந்தருளி அருள் புரிகின்றார். இவருக்கு மயான லிங்கேசுவரர் எனும் மற்றொரு பெயருமுண்டு. கோட்ட (கோஷ்ட) மூர்த்தங்களான பிரமன், துர்க்கை, லிங்கோத்பவர் ஆகிய மூர்த்தங்களும் விநாயகரும் அழகாக உள்ளனர். மேலும், இத்தலத்தில் சிவபெருமான் நெருப்பாக வடிவங்கொண்டு பண்டகன் என்னும் அசுரனை வதம் செய்ததாக தொன்மைத்தகவல் (ஐதீகம்) உள்ளது.

இக்கோயிலின் மேற்கு திசையிலுள்ள 16 கால் மண்டபத்தில் சிவபெருமானின் அடிமுடி தேடிய விசுணு, பிரமன் ஆகியோரின் தோற்றங்களை வராகம் அன்னப்பறவையுடன் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. அதோடு, பஞ்ச (ஐந்து) மயானங்களுள் ஒன்றான இங்கு, தேவர்களை சமிதையாகக் கொண்டு, சிவபெருமான் யாகம் செய்ததாக தொன்மைத்தகவல் (ஐதீகம்).

பஞ்ச (ஐந்து) மயானங்கள்

  1. கச்சி மயானம் காஞ்சிபுரம்.
  2. காழி மயானம் சீர்காழி.
  3. வீழி மயானம் திருவீழிமிழலை.
  4. நாலூர் மயானம் நாலூர்). (கும்பகோணம்)
  5. கடவூர் மயானம் திருக்கடவூர்.[3]

தல வரலாறு

முன்பொருமுறை பண்டாசுரன் பிரமன், திருமால் மற்றுமுள்ள தேவர்கள் அனைவருடைய உடலுள் புகுந்துகொண்டு, அவர்களுடைய வீரியத்தைக் கவர்ந்து கொண்டு அவர்களை வலிமையிழக்கச் செய்தான். இதனால் பண்டாசுரனை ஒடுக்க எண்ணிய இறைவன் காஞ்சியில் சோதிபிழம்பாய்த் தோன்றி, குண்டமமைத்து நெய்யை நிரப்பி, தத்துவங்களைத் தருப்பையாகவும், முக்குணங்களை வேதிகைகளாகவும் கொண்டு அம்பிகையோடு வேள்வி செய்தார். இவ்வேள்வியில் பிரமன் முதலான அனைத்து உயிர்களையும் இட்டார்; அனைத்து உயிர்களும் தீயில் ஒடுங்கின. அப்போது பண்டாசுரன் எதிரே வந்து நிற்க, அவனையும் தீயிலிட்டார். பின் அத்தீயானது இலிங்க வடிவமாகி 'மயானலிங்கம்' என வழங்களாயிற்று. என்பது இத்தல வரலாறு.[4]

தல பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ஆம் திருமுறையில் 97-வது பதிகத்தின் 10-வது பாடலில் இவ்வைப்புத் தலத்தை பற்றிய குறிப்புள்ளது. இப்பதிகம் அப்பர் திருப்புகலூரில் தங்கியிருந்த போது அருளிச்செய்ததாகும்.

  • பாடல்:
மைப் படிந்த கண்ணாளும் தானும் கச்சி
மயானத்தான் வார்சடையான் என்னின் அல்லான்
ஒப்புடையன் அல்லன் ஒருவன் அல்லன்
ஓரி ஊரன் அல்லன் ஓர் உவமன் இலி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவன் அருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந் நிறத்தன் இவ் வண்ணத்தன்
இவன் இறைவன் எனன் எழுதிக் காட்ட ஒணாதே.
  • பொழிப்புரை:

இறைவன் மைபூசிய கண்ணளாம் உமையம்மையும் தானுமாகிக் கச்சி மயானத்து வாழ்பவனும் நீண்ட சடையினனும் ஆவான் அவ்வளவே ஆம் தனையன் அல்லன், அவன் எப்பொருளையும் தன்பொருட்டு ஏற்க இசைதலை உடையான் அல்லன், உலக பொருள்களில் ஒருவன் அல்லன், ஒரூர்க்கே உரியனல்லன், யாதொரு பொருளும் தனக்கு உவமையாதல் இல்லாதவன், அதனால் அவனுடைய அத்தன்மையையும் அந்நிறத்தையும் அவ்வடிவதையும் அவன் திருவருளையே கண்ணாகப் பெற்றுக் காணலாமேயல்லாமல் மற்றப் பொருள்கள் போலப் பிறரொருவர் இன்னவகையுட்பட்டவன், இன்ன நிறத்தையுடையவன், இன்ன வடிவத்தையுடையவன் என்றிவனைச் சொல்லோவியமாகவோ, எழுத்தோவியமாகவோ எழுதிக் காட்டல் இயலாது.[5]

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் தென்மேற்கு பகுதியில் (பெரிய காஞ்சிபுரம் (சிவகாஞ்சி) திருக்கச்சியேகம்பம் - எனப் பழைய சமய நூல்களில் குறிக்கப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உட்புறத்தில் கொடிமரத்திற்கு வலப்புறம் மேற்கு நோக்கி தனி சந்நிதியாக இச்சந்நிதி உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சி சங்கர மடம் வழியாக கடந்து சற்று சென்றால் (கச்சிமயானம், திருவேகம்ப உட்புறம்) இக்கோவில் அமைந்துள்ளது.[6]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.