காஞ்சிபுரம் சாந்தாலீசுவரர் கோயில்

காஞ்சிபுரம் சாந்தாலீசுவரர் கோயில் (சார்ந்தாசயம்) என்று அறியப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். மேலும் வியாசர் பிரதிட்டை செய்து வழிபட்ட சிவலிங்கமாக கருதப்படுவதும், வேகவதி ஆற்றின் கரையில் உள்ளதுமான இக்கோயில் பற்றிய குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[1]

காஞ்சிபுரம் சார்ந்தாசயம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் சார்ந்தாசயம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வியாச சாந்தாலீசுவரர்.

இறைவர், வழிபட்டோர்

  • இறைவர்: சாந்தாலீசுவரர்.
  • வழிபட்டோர்: வியாசர்

தல வரலாறு

வியாசர் கலியுகம் வருகையை உணர்ந்து அச்சங்கொண்டு, காசி சென்று விசுவநாதரை வழிபட்டிருந்தார். அவ்வேளையில் அங்குள்ள முனிவர்களின் வேண்டுகோளின்படி, வேதம் முதலியவற்றின் பொருளை அவர்களுக்கு உபதேசித்தார். உபதேசத்தை கேட்டுக்கொண்டிருந்த முனிவர்கள், வேதத்தின் முடிந்த பொருளை ஒரு வார்த்தையில் எடுத்துரைக்குமாறு வேண்டினர். இப்போது வியாசர் தான் முன்பு கூறியதற்கு மாறாக "நாராயணனே பரபிரம்மம்" என்றார். மாறான விளக்கத்தைக் கேட்ட முனிவர்கள் திகைப்புற்றனர். மேலும் அவர்கள், அவர் கூறியதை அவர் கூறியதை விசுவநாதர் கோயிலில் வந்து சொல்லுமாறு கூற, வியாசரும் அதன்படியே விசுவநாதர் கோயிலில் வந்து நின்று இருகைகளையும் உயர்த்தியவாறே "நாராயணனே பரப்பிரம்மம்" என்றார். இதைக்கேட்டு கோபங்கொண்ட நந்தியம்பெருமான், வியாசரை அப்படியே சபித்தார். சாபத்தால் வியாசருடைய உயர்த்திய இரு கைகளும் அப்படியே மேலேயே நின்று போயின. வியாசர் திருமாலை வேண்ட, திருமாலும் அவர்முன் தோன்றி, அவரின் தவறான உபதேசத்திற்கு வருந்தி வியாசரைப்பார்த்து சிவபெருமானை சரணடையச் சொன்னார். மனம் நொந்த வியாசர், காஞ்சி வந்து, ஏகம்பநாதரைப் பணிந்து போற்றி சார்ந்தாசயப் பெருமானைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுப் பேறு பெற்றார் என்பது இத்தல வரலாறாகும். வியாசர் பிரதிஷ்டை செய்து வழிபட்டமையால் சார்ந்தசயம் எனப்படுகிறது.[2]

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தில் விஷ்ணுகாஞ்சி என்றழைக்கப்படும், சிறிய காஞ்சிபுரத்தின் தெற்குப் பகுதியில் பச்சையப்பன் மகளிர் கல்லூரியை கடந்து சென்றால் வேகவதி ஆற்றங்கரையில் வசிட்டேசுவரர் கோயிலின் முற்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் பிரதான சாலையின் 3-வது கிலோமீட்டர் தொலைவிலுள்ள டிகே நம்பி தெருவிலிருந்து தென்திசையில் இத்தலமுள்ளது.[3]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.