காஞ்சிபுரம் சுவரகரேசுவரர் கோயில்

காஞ்சிபுரம் சுவரகரேசுவரர் அல்லது வெப்புஎறி நாதர் கோயில் (சுரகரேசம்) என்று அறியப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். மேலும், சிற்ப வேலைபாடுகள் நிறைந்த. இக்கோயில் பற்றிய குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[1]

காஞ்சிபுரம் சுரகரேசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் சுரகரேசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சுவரகரேசுவரர், வெப்புஎறி நாதர்.
தீர்த்தம்:சுரகர தீர்த்தம், (வெப்புஎறி குளம்).

இறைவர், வழிபட்டோர்

  • இறைவர்: சுவரகரேசுவரர், வெப்புஎறி நாதர்.

தல வரலாறு

இம்மூர்த்தி - ஜ்வரஹரேசுவரர்; இது சிவமூர்த்தங்கள் அறுபத்து நான்கனுள் ஒன்றாகும். இம்மூர்த்தி மூன்றுத் திருவடிகளைக் கொண்டவர்; ஆனால் இக்கோயிலில் இவர் சிவலிங்க வடிவமாக உள்ளார். இக்கோயில் மூன்று கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை முறையே - இக்கோயில் "சுரவட்டாரமுடைய நாயனார் கோயில்" என்றும், "தறிகளுக்கு வரி தானமாகத் தரப்பட்ட" செய்தியையும், "விஷார் என்னும் ஊரைச் சேர்ந்த சுந்தரவேலர் என்பர் கோயிலுக்கு நிலதானம்" செய்ததையும், "இக்கோயிலை மேற்பார்வையிடும் உரிமையை அழகிய திருச்சிற்றம்பலமுடையார் என்பவருக்கு" தந்ததையும் குறிக்கின்றது.[2]

தல சிறப்பு

  • கஜப்பிரஷ்ட (தூங்கானை மாடம்) வடிவமானது இக்கோயிலமைப்பு.
  • சுராக்கன் என்னும் அரக்கனை அழித்த இடம் இதுவேயாகும்.
  • உரநோய், உடல்வெப்பம் முதலிய நோய்கள் நீங்கவல்ல சிறப்பு தலமாக உள்ளது.
  • தேவர்களுக்கு உண்டான வெப்பு - சுரநோயை தீர்த்தருளியமையினால் இறைவன் சுவரகரேஸ்வரர் (ஜ்வரஹரேஸ்வரர்) என திருநாமம் பெற்றார்.

தல விளக்கம்

சுரகரேசம் தல விளக்கத்தால் அறியப்படுவது, இக்கோயில் வெப்பு நோயைக் கண்களால் பிறர்க்கு ஆக்குதலால் சுராக்கன் என்னும் பெயருடைய அசுரனை அழிக்கச் சிவபிரான் ஆக்கிய தலமும், சுரநோயைப் போக்குதலின் ‘சுரகரம்’ என்னும் தீர்த்தமும் உடைய அவ்விடத்தே சிவவீரியத்தைத் தேவர்கள் பொருட்டு அக்கினி உட்கொண்டு கருப்பத்தால் வெப்பமுற்ற தேவர்கள் அனைவரும் இறைவன் ஆணைப்படி இத்தீர்த்தத்தில் மூழ்கிச் சுரகரேசரை அருச்சித்துச் சுரம் நீங்கப்பெற்றுப் போய்க் கங்கையில் விடுத்த வீரியம் சரவணப் பொய்கையில் தங்கி வளர்ந்து ஆறுமுகப்பெருமான் ஆக அருள விளங்கும் தலம் இது. இத்திருக்கோயில் திருவேகம்பர் சந்நிதி வீதியில் உள்ளது.[3]

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் வடமேற்கு பகுதியான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவ காஞ்சியின் ஏகாம்பரநாதர் சந்நிதி தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து வடமேற்கில் ½ கிலோமீட்டர் தொலைவில் வேலூர் செல்லும் சாலையில் காஞ்சி சங்கர மடம் அருகில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.