காஞ்சிபுரம் கற்கீசுவரர் கோயில்

காஞ்சிபுரம் கற்கீசுவரர் கோயில் (கற்கீசம் இலட்சுமீசம்) என அறியப்படும் இது, காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். மேலும், இவ்விறைவரை கல்கீசர் எனும் மற்றொரு பெயருடனும் அழைக்கப்படுகிறது. இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

காஞ்சிபுரம் கற்கீசம், இலட்சுமீசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் கற்கீசம், இலட்சுமீசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கற்கீசுவரர்.

இறைவர், வழிபட்டோர்

தல வரலாறு

கொடியவர்களை அழிப்பதற்காக யுகாந்திர காலத்தில் திருமால் கற்கியாகத் தோன்றி, காஞ்சிக்கு வந்து சிவலிங்கப் பிரதிட்டை செய்து வழிபட்டு எண்ணற்ற வரங்களைப் பெற்றார் என்பது வரலாறு.[2]

தல விளக்கம்

கற்கீசம் எனும் இது, ஊழி முடிவில் கொடியவர்களை அழித்தற் பொருட்டுத் திருமால் கற்கி (குதிரை) ஆக இருந்து வீரராக வேசத்திற்குத் தெற்கில் மண்ணி தீர்த்தக் கரையில் வணங்கி வரம்பெற்ற தலம் ஆகும். வீரராகவேசத்திற்கும் ஐயனார் கோயிலுக்கும் அடுத்துள்ள இச்சிவலிங்கத்தை வணங்கினோர் போக மோட்சங்களை பெறுவார்.[3]

தல பதிகம்

  • பாடல்: (கற்கீச வரலாறு) (எண்சீரடி யாசிரிய விருத்தம்)
தகைபெறும்இக் கடிவரைப்பின் தென்பால் மண்ணித்
தடங்கரையில் கற்கீசத் தலமாம் அங்கண், உகமுடிவில் கயவர்தமை
அழிப்ப மாயோன் உயர்பிருகு சாபத்தால் கற்கியாகி, இகழருஞ் சீர்க்
காஞ்சியில்வந் திலிங்கந் தாபித் தினிதேத்தி எண்ணிலரும் வரங்கள்
பெற்றான், புகழுறும்அவ் விலிங்கத்தைத் தொழுது மண்ணிப் புனலாடும்
அவர்பெறுவார் போகம் வீடு.
  • பொழிப்புரை:
தகுதியமையும் இவ்வொளியுடைய சூழலின் தென் திசையில் மண்ணி
என்னும் தீர்த்தக்கரையில் கற்கீசத்தலம் உள்ளது ஆகும். அவ்விடத்தில்
யுகத்திறுதியில் கீழ் மக்கள் தம்மை அழிப்பதற்குத் திருமால் உயர்ந்த பிருகு
முனிவர் சாபத்தால் கற்கியாகத் தோன்றி அரிய புகழ்படைத்த காஞ்சியை
அடைந்து சிவலிங்கம் தாபித்தினிது துதித்து அளவிடலரிய வரங்களைப்
பெற்றனர். மண்ணியில் மூழ்கிப் புகழ்மிக்கும் அவ்விலிங்கத்தைத்
தொழுவோர் போகமோட்சங்களைப் பெறுவர்..[4]

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணராயர் தெருவில் சென்று வயல்வெளியில் இக்கோவில் தாபிக்கப்பட்டள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் மேற்கு திசையில், கச்சபேசுவரர் கோயிலின் மேற்கு திசையில் இக்கோவில் அமைந்துள்ளது.[5]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.