காஞ்சிபுரம் மங்களேசுவரர் கோயில்

காஞ்சிபுரம் மங்களேசுவரர் கோயில் (மங்களேசம்) எனப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். மேலும், காமாட்சி தேவியின் தோழியான 'மங்களை' என்பவள் வழிபட்ட தலமாக அறியப்படும் இக்கோயில் குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

காஞ்சிபுரம் மங்களேசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் மங்களேசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மங்களேஸ்வரர்.
தாயார்:மங்களாம்பிகா.
தீர்த்தம்:மங்கள தீர்த்தம்.
சிறப்பு திருவிழாக்கள்:பிரதோசம், சிவராத்திரி, பவுர்ணமி.
வரலாறு
தொன்மை:500 ஆண்டுகளுக்குள்.
தொலைபேசி எண்:+91 (044) 2722 4149, 94430 66540.

சிறப்பு நாட்கள்

தல சிறப்பு

திருமணத் தடையுள்ளவர்கள், இத்தல இறைவரான மங்களேஸ்வரரை வழிப்பட்டால் தக்க வாழ்க்கைத்துணை அமையுமென்பது தொன்னம்பிக்கை (ஐதீகம்).

நேர்த்திக்கடன்

இக்கோயில் இறைவர்க்கும், இறைவிக்கும் திருமுழுக்கு வழிபாடு (அபிசேகம்) செய்து, புத்தாடையுடுத்தி நேர்த்திக்கடன் செலுத்துவதாக அறியப்படுகிறது.

தல பெருமை

சிநேகிதி சிவன்: திருமணத்தின்போது, மணமகள் பார்வதிக்கு பணிவிடை செய்ய தேவலோகத்திலிருந்து வந்தவள்தான் மங்களாம்பிகா. தேவிக்கு தோழியாக இருந்து சகல உதவிகளையும் செய்து வந்தாள். திருமணம் முடிந்தபின், சிவபூசை செய்ய விரும்பினால் மங்களாம்பிகா. அதற்காகவே சிவலிங்கம் ஒன்றையும், தீர்த்தம் ஒன்றையும் உருவாக்கினாள். அதன்படி தினமும் சிவனுக்கு அபிசேகம் செய்து வழிப்பட்டாள். சிவன் அவளின் பூசையை ஏற்று மோட்ச சக்தியை அருளினார். மங்களாம்பிகா வழிபட்டமையால் இச்சுவாமிக்கு மங்களேஸ்வரர் எனும் திருநாமம் விளங்கிற்று. இக்கோயில் தீர்த்தத்தை மங்கள தீர்த்தம் என பெயர்பெற்றது.

தவம் செய்த வேம்பு: மங்களேஸ்வரர் கோயிலின் பின்புறமுள்ள வேப்பமரத்தடியில், செவ்வாய்க்கிழமைதோறும் காஞ்சிப் பெரியவர் தவம் செய்வது வழக்கம். இக்கோயிலின் மங்கள தீர்த்தத்தில் நீராடி மகிழ்வதுமுண்டு என்று உள்ளூர் வாசிகள் மூலம் அறியப்பட்டது.

தல வரலாறு

சிவலோகத்தில் ஒருமுறை சிவனின் கண்களை பார்வதி தேவி விளையாட்டாக பொத்தினாள். அண்டசராசரமும் இருளில் மூழ்க சினங்கொண்ட சிவபெருமான், நீ பூலோகத்தில் பிறப்பாயாக என பார்வதி தேவிக்கு சாபமிட்டார். பார்வதிதேவி தன் தவறையுனர்ந்து வருந்தி இறைவனாகிய தாங்களை மீண்டுமடைவது எவ்வாறேனக் கேட்க; நீ காஞ்சியில் தவமிருந்து கயிலையை அடைவாயாக! என சிவன் அருள்புரிய, அவ்வாறே பார்வதியும் பூலோகத்தில் பிறந்து, காஞ்சி கம்பா நதிக்கரையை (தற்போது மஞ்சநீர் கால்வாய்) அடைந்து மணலால் லிங்கம் அமைத்து பூசை செய்தாள், அந்நாள் ஆற்றில் வெள்ளம் வரவே சிவலிங்கத்தை காப்பாற்ற எண்ணிய பார்வதி தேவி, தன்னிரு கைகாளாலும் அணைத்துக்கொண்டாள். வெள்ளத்திலிருந்து தன்னை காக்க அன்புள்ளங்கொண்ட தேவியின் முன் சிவனார் தோன்றி அருள்பாலித்தார், அவ்விடத்திலேயே தங்கும்படி தேவி கேட்க ஏகாம்பரநாதர் பெயரில் தங்கி பார்வதி தேவியை திருமணம் முடித்துக் கொண்டார்.[2]

தல பதிகம்

  • பாடல்: (மங்களேச்சரம்) எழுசீரடி யாசிரிய விருத்தம்.
மற்றதன் வடபால் மலைமகள் இகுளை மங்களை மண்டபம்
இழைத்து, வெற்றிமண் டபத்தின் பிறங்குற மங்க ளேசனை விதியுளி
நிறுவி, அற்றமில் சிறப்பின் மங்கள தீர்த்தம் அகழ்ந்துநீ ராட்டுபு
தொழுதாள், பற்றுமங் களநாள் அத்தடம் படிந்து பணிபவர்
இருமையும் பெறுவார்.
  • பொழிப்புரை:
மகாசாத்தேசத்திற்கு வடக்கில் உமா தேவியாரது தோழி மங்களை
என்பவர் மண்டபம் ஒன்று சிருட்டித்து அதன்கண் விளங்குற மங்கள
நாயகனை விதிப்படி நிறுவிப் போற்றிக் குற்றமற்ற சிறப்பினை
யுடைய மங்கள தீர்த்தம் வகுத்து நீராட்டித் தொழுதனர். விருப்புடைய
செவ்வாய்க்கிழமை அந்நீரில் மூழ்கி வணங்குவோர் இம்மை மறுமை
நன்மைகளைப் பெறுவார்.[3]

அமைவிடம்

இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியில் உள்ள கங்கைகொண்டான் மண்டபம் - நகரப் பேருந்து நிறுத்தத்தருகே காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலின் தென்கிழக்கில் மங்களேசுவரர் கோயில் அமைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் ½ மைல் தூரமுள்ள காஞ்சி சங்கர மடத்தின் எதிரில் மங்கள தீர்த்த குளத்தோடு இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[4]

போக்குவரத்து

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.