காஞ்சிபுரம் அக்னீசுவரர் கோயில்

காஞ்சிபுரம் மாண்டகன்னீசுவர கோயில் (வன்னீசம்) என்றழைக்கப்படும் இது, காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். மேலும், இவ்விறைவரை வன்னீசர் எனும் மற்றொரு பெயருடனும் வழங்கப்படுகிறது. இது, ஒக்கப்பிறந்தான் குளத்திற்கு தெங்கரையில் கிழக்கு பார்த்த சன்னதியாக அறியப்பட்ட இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

காஞ்சிபுரம் வன்னீசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் வன்னீசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அக்னீஸ்வரர், வன்னீசர்.
தீர்த்தம்:சகோதர தீர்த்தம்.

இறைவர், வழிபட்டோர்

  • இறைவர்: அக்னீஸ்வரர், வன்னீசர்.
  • தீர்த்தம்: சகோதர தீர்த்தம்
  • வழிபட்டோர்: அக்னி.

தல வரலாறு

அக்னி தேவன் தன்னுடைய மூன்று சகோதரரும் தேவர்கட்கும் ஆவிகளைத் தாங்கும் வன்மையற்று இறந்துபோகத் தானும் பயந்து சிலநாள் சகோர தீர்த்தத்தில் ஒளிந்திருந்து தேவர்களால் வெளிப்பட்டு அவர்கள் வேண்டிக்கொண்ட வண்ணம் ஆவியைத் தாங்கும் வல்லமையைப் பெற பூஜித்தனன். அக்னிப் (வன்னி, நெருப்பு) பகவான் இப்பெருமானை வழிபட்டு - முனிவர்கள், தேவர்களால் தரப்படும் அவியுணவுகளைச் சுமக்கும் வல்லமையை பெற்றார் என்பது வரலாறாகும்.[2]

தல விளக்கம்

வன்னீசம் (வன்னி-அக்கினி.) எனும் இது, அக்கினிதேவன் தமையன்மார் மூவர் வேள்வி அவியைச் சுமக்கலாற்றாது இறந்தனர். அது கண்டஞ்சிய அக்கினி ஐயரம்பையர்த்தீர்த்தத்தைப் புகலடைந்து சகோதரனாக ஏற்றுக் காக்கவேண்டி அதனுள் மறைந்து கரந்தனன். தேவர் எங்கும் தேடி முடிவில் (ஒக்கப்பிறந்தான் குளம்) சகோதர தீர்த்தக்கரையை அடைந்து அதன்கண் வாழும் மீன்கள் காட்டிக்கொடுக்கக் கண்டு கூவி அழைக்கும் தேவர்களை முன் போகவிட்டுப் பின்பு மீன்களைத் தூண்டிலிற் படுகெனச் சாபமிட்ட அக்கினி அக்குளக்கரையில் வன்னீசரைத் தாபித்துப் பூசித்து அவிசுமக்கும் ஆற்றலைப் பெற்றேகினன். இவ்விரு தலங்கள் மாண்டகன்னீசர் தெருவில் உள்ள ஒக்கப்பிறந்தான் குளக்கரையில் உள்ளன.[3]

தல பதிகம்

  • பாடல்: (1) (வன்னீச வரலாறு)
மூதழற் கடவுள் தன்னுடன் பிறந்த முன்னவர் மும்மையர்
உள்ளார், பேதுறா மதுகை மூவரும் விண்ணோர் பெறும்அவி
சுமக்கலாற்றாது, மேதகும் ஆவி இறந்தனர் அதனை விரிதழற்
பண்ணவன் நோக்கி, யாதினிப் புரிவல் எனக்கும்இவ் விடும்பை
எய்துமே என்றுள மழுங்கி.
  • பொழிப்புரை: (1)
பெரிய அக்கினி தேவனின் தமையன்மார் மூவர் மயங்காத
வலிமையுடையர். தேவர் வேள்விவழிப்பெறும் அவியைச் சுமக்கும்
வலியிலராய் மேன்மை பொருந்திய அம்மூவரும் உயிரை இழந்தனர்.
அதனை உணர்ந்த அக்கினி தேவன் ‘இனி யாது செய்வேன்; எனக்கும்
மரணத் துன்பம் நேருமே’ என்றெழுச்சி குன்றி,
  • பாடல்: (2)
மகோததி யனைய ஐயரம் பையர்தம் வாவியி னுள்ளுறக் கரந்து,
சகோதரர் தம்மை இழந்தஎன் றனக்குச் சகோதரம் நீதடம் புனலே,
உகாதெனைப் புரத்தி என்றுரைத் தங்கண் உறைந்தனன்
அன்றுதொட்டளிகள், முகேரெனப் பாயும் மலர்த்தடம் அதற்கு
மொழிபெயர் சகோதர தீர்த்தம்.
  • பொழிப்புரை: (2)
பெரிய கடலை ஒத்த ஐயரம்பையர்தம் தீர்த்தத்தினுள் புகுந்து மறைந்த
‘உடன் பிறந்தோரை இழந்த எனக்குப் பெருந்தீர்த்தமே! உடன் பிறந்தோய்
நீயே ஆகலின் புறத்தில் தள்ளாது தழீஇ என்னைக்காத்தி’ என்றிரந்துகூறி
அதனிடைக் காலங்கழித்தனன். அந்நாள் முதல் முகேரென்னும்வண்டுகள்
ஒலியெழச் சுழலும் மலர்களையுடைய அத்தீர்த்தம் சகோதர தீர்த்தம் எனப்
பெயர் வழங்கும்.
  • பாடல்: (3)
எரிதழற் புத்தேள் அன்னணம் உறைய இமையவர் எங்கணுந்
துருவிப், பெரிதிளைப் பெய்தி ஆண்டுவந் துறலும் பெருந்தடத்
துறையுமீன் அவர்க்குத், தெரிதர இயம்பிற் றாகவெங் கனலோன்
செயிர்த்தடைக் கலம்புகுந் தேனைப், பரிவுறக் காட்டிக் கொடுத்த
நீர் தூண்டிற் படுகொலை யுறுகெனச் சபித்து.
  • பொழிப்புரை: (3)
அக்கினிதேவன் அங்ஙனம் மறைந்து வாழத் தேவர் எவ்விடத்தும்
தேடிப் பெறாது பெரிதும் இளைத்து அங்கு வந்து சேர்தலும் அத்தீர்த்தத்தில்
உள்ள மீன்கள் அத்தேவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் உணர்த்த
அக்கினி சினங்கொண்டு ‘அடைக்கலம் புக்க என்னை வருந்துறக் காட்டிக்
கொடுத்த நீவிர் தூண்டிலிற் பட்டுக் கொலையுறுக எனச் சாபம் தந்து,
  • பாடல்: (4)
மின்னென வெளிக்கொண் டிரந்துநின் றழைக்கும் விண்ணவர்
தங்களை நோக்கி, முன்னுறப் போமின் வருவல்என் றியம்பி
முளரிநீர்த் தடமதன் கரையின், மன்னுவன் னீச வள்ளலை இருத்தி
மரபுளி அருச்சனையாற்றி, அன்னவன் அருளாற் பெற்றனன்
இமையோர் அவியெலாஞ் சுமந்திடும் ஆற்றல்.
  • பொழிப்புரை: (4)
விரைய வெளிப்பட்டுக் குறையிரந்துவேண்டி நிற்கும் தேவர் தங்களைப்
பார்த்து ‘முன்னே செல்லுமின்! பின்னே வருவேன்’ என்று கூறித் தாமரைப்
பொய்கையின் கரையில் நிலைபெறும் வன்னீச வள்ளற் பிரானை நிறுவி
விதி வழிப் பூசனை புரிந்து அப்பிரான் திருவருளைப் பெற்றுத் தேவர்க்கு
வேள்வியில் தரப்படும் அவியை முற்றும் சுமக்கும் ஆற்றலைப் பெற்றனன்.
  • பாடல்: (5)
தமையன்மார் மூவர் சுமக்கலாற் றாது தளர்வுறும் அவியெலாந்
தானே, கமையுறப் பொறுக்கும் மதுகைபெற் றிமையோர் குழாத்தினுட்
கலந்தனன் கனலோன், இமையவில் வாங்கிப் புரிசைமூன் றிறுத்த
எந்தைவன் னீசனை அண்மி, அமைவரும் அன்பால் வழிபடப்
பெற்றோர் அருந்திறல் எய்திவீ டடைவார்.
  • பொழிப்புரை: (5)
தமையன்மார் மூவர் சுமக்க இயலாது தளரும் அவியை முற்றும்
தானொருவனே பொறுமையோடும் பொறுக்கும் வலிமையை எய்தித் தேவர்
குழுவினுள் சென்று சேர்ந்தனன் அக்கினி தேவன். மேருவை வில்லாக
வளைத்து மும்மதிலை அழித்த எமது தந்தையாகிய வன்னீசப் பெருமானைச்
சார்ந்து பொருந்துதல் வரும் பேரன்பால் வழிபடும் வாய்ப்பினர் பேராற்றல்
பெற்று வாழ்ந்து முத்தியையும் பெறுவர்.[4]

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் மாண்டுகண்ணீஸ்வரர் கோவில் தெருவிலுள்ள ஒக்கப்பிறந்தான்குளம் - (சகோதரதீர்த்தம்) இக்குளத்தின் முன்புள்ள கன்னியம்மன் கோயிலுக்குப் பின்னால், இக்கோவில் தாபிக்கப்பட்டள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் மேற்கு திசையில், கச்சபேசுவரர் கோயிலின் வடமேற்கு திசையில் கிழக்கு பார்த்த சன்னதியாக இக்கோவில் அமைந்துள்ளது.[5]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.