காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில்

காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் (கச்சபேசம்) என்று அறியப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். மேலும், கோயிலின் வெளிப்பிரகாரத்தில் சத்தியமொழிவிநாயகர் உள்ளார். இவரை, பொய்யாமொழிப் பிள்ளையார் என்றும் வழங்கும். இக்கோயில் பற்றிய குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[1] இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [2]

காஞ்சிபுரம் கச்சபேசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் கச்சபேசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கச்சபேஸ்வரர்.
தாயார்:சுந்தராம்பாள் அம்மையார்
தீர்த்தம்:சித்தித் தீர்த்தம்.
வரலாறு
தொன்மை:சுமார் 1600 ஆண்டுகளுக்கு முற்பட்டது ஆகும்.
தொலைபேசி எண்:+(91)044-2746 4325

இறைவர், வழிபட்டோர்

தல வரலாறு

தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடையுங்கால், திருமால் ஆமையாக (கச்சபம்) இருந்து மந்தர மலையைத் தாங்கி உதவினாராகையால், அமுதம் கிடைத்தவுடன் செறுக்குற்று உயிர்கள் அனைத்தும் அஞ்சுமாறு கடல்களைக் கலக்கினார். இதைக் கண்ட சிவபெருமான் ஆமையை அழித்து அதன் ஓட்டை, தான் அணிந்திருக்கும் வெண்டலை (தசைநீங்கி எலும்பு மட்டுமானதலை) மாலையின் இடையில் கோர்த்து அணிந்துகொண்டார். தம் செயலுக்கு வருத்தமுற்ற திருமால், காஞ்சியை அடைந்து இங்கேயுள்ள இச்சிவனை வழிபட்டு நீங்காத பக்தியும், வைகுந்த தலைமைப் பதவியும் திரும்பவும் வரப்பெற்றார். திருமால், கச்சபம் (ஆமை) வடிவில் வழிபட்டதால் இது கச்சபேசம் எனப்பட்டது. சுவாமியும் கச்சபேஸ்வரர் (கச்சபேசர்) என விளங்குகிறார்.[3]

தல விளக்கம்

கச்சாபேசத்தில், சிவபெருமான் ஓர் கற்பகாலத்தில் ஐம்பெரும் பூதங்களையும் அவற்றிடைத் திருமால் முதலாம் தேவர் பிறர் பிறவாம் சராசரங்களையும்அழித்து, அவ்விரவில் இறைவியோடு தனித்திருந்து திருக்கூத்தியற்றி, மீண்டும் உலகைப் படைக்கும் சங்கற்பராயினர்.

உலகமெல்லாம் அழிந்தும் அழியாது தன்காப்பில் விளங்கும் காஞ்சியில் சோதிலிங்கமாக வெளிநின்று தமது சத்தியால் முன்போல விளங்க உலகங்களையும் உலகிடைப் பொருள்களையும் சிருட்டித்தனர். அச்சோதி லிங்கத்தைப் பிரமன் சரசுவதியுடன் வணங்கிப் படைப்புத் தொழிலிற் றலைமை பெற்றான்.

முன்னொரு கற்பத்திற் றேவர்கள் பாற்கடலைக் கடைவுழித் திருமால் ஆமையாய் மந்தர மலையைத் தாங்கி அமுதம் கண்டு உபகரித்தமையால் செருக்குக் கொண்டு உலகம் அழியுமாறு கடலைக் கலக்குகையில் உயிர்களின் அச்சம் கெடவும், திருமால் அகந்தை நீங்கி அறிவுறவும் அவ்வாமையை அழித்து அதன் ஓட்டினை வெண்டலை மாலையிடையே கோத்தணிந்தனர்.

திருமால் குற்றம் நீங்கிச் சோதிலிங்கத்தை வழிபாடு செய்து மெய்யன்பும், வைகுந்த பதவியும் அவர் அருள்செய்யப் பெற்றனர். அச்சிவலிங்கத்திற்குக் ‘கச்சபேசன்’ என்னும் திருப்பெயர் விளங்கவும், என்றும் அதன்கண் விளங்கவும், காசியினும் அவ்விடம் சிறப்புறவும் வரம் வேண்டிய திருமாலுக்குச் சிவபெருமான் அவற்றை வழங்கினர். கச்சபேசப் பெருமானை எண்ணினோரும் சென்று கண்டவரும் இவ்வுலகத்தில் துன்பம் நீங்கி இன்பம் பெற்று முடிவில் முத்தியையும் பெறுவர்.

அக்கச்சபேசப் பெருமானைத் துர்க்கை, ஐயனார், சூரியன், பைரவர், விநாயகர் இவர்களும் வழிபட்டு அத்திருநகரைக் காவல் செய்வாராயினர். கச்சபேசருக்குத் தென்மேற்கில் திருமால் பூசித்த ‘சத்தியமொழி விநாயகர்’ வீற்றிருக்கின்றனர். அப்பெருமானை வணங்கினவர்கள் எப்படிப்பட்ட இடையூறுகளும் தவிர்ந்து விரும்பிய பயனைப் பெறுவார்கள். [4]

கச்சபேச அக சந்நிதிகள்

  1. அருள்மிகு கச்சபேசுவரர் பெருமான் கோயில்.
  2. இட்ட சித்தீசப் பெருமான் கோயில்.
  3. யோக சித்தீசப் பெருமான் கோயில்.
  4. தரும சித்தீசப் பெருமான் கோயில்.
  5. ஞான சித்தீசப் பெருமான் கோயில்.
  6. வேதசித்தீசப் பெருமான் கோயில் (சதுர்முகேசுவரப் பெருமான் கோயில்).
  7. யுக சித்தீசப் பெருமான் கோயில்.
  8. பாதாள ஈசுவரப் பெருமான் கோயில்.
  9. லிங்கபேசர் பெருமான் கோயில்.
  10. குளக்கரை சலகண்டேசுவரப் பெருமான் கோயில் மற்றும் மூலவர்க்கு வடக்கே சுற்றுப் பிராகாரத்தில் 9 லிங்கங்களையும் (108, 1008 லிங்கங்கள்) தரிசித்துப் பேறு பெறலாம்.

கச்சபேச பிற மூர்த்திகள்

  1. விஷ்ணு துர்கைச் சந்நிதி.
  2. பஞ்ச சந்தி விநாயகப் பெருமான் சந்நிதி.
  3. பைரவர் சந்நிதி.
  4. சூரியன் சந்நதி.
  5. சரஸ்வதி தேவி சந்நதி.
  6. ஆதிகேசவப் பெருமான் சந்நதி.
  7. வள்ளி தெய்வானை உடனுறை, ஆறுமுகம் பெருமான் சந்நிதி, ஆகியோர் தனி தனிச் சந்தியில் எழுந்தருளி அருள் புரிகின்றனர்.

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் நடுப்பகுதியான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவ காஞ்சியின் அன்னை இந்திராகாந்தி சாலையில் (நெல்லுக்காரத் தெரு) என்றழைக்கப்படும் இத்தெருவின் மேற்கு கடைக்கோடியில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்தின் அருகில் கச்சப்பேசுவரர் கோயிலின் உட்புற குளக்கரையில் இத்தலம் தனியாக தாபிக்கப்பட்டுள்ளது.[5]

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.