திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் கோயில்

திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் கோயில், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள, திருவாடானை வட்டத்தில், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில், தொண்டி கடற்கரை அருகே திருவெற்றியூர் எனும் கிராமத்தில் அமைந்த சிவத்தலமாகும். சுற்று வட்டாரப் பகுதிகளில் இக்கோயிலை பாகம்பிரியாள் கோயில் என்றே அழைக்கிறார்கள். [1][2] இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [3]

சிறப்புகள்

இக்கோயிலில் வியாழக்கிழமை இரவு தங்கி, வெள்ளிக்கிழமை காலையில், கோயில் முன் உள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடி, பாகம்பிரியாள் உடனுறை பழம்புற்றுநாதர் எனும் வன்மீகநாதரை வழிபடுவதால் தோல் நோய்கள், விஷக்கடிகள் நீங்கும் என்பது தொன்ம நம்பிக்கையாகும்.

திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் திருக்கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்ய உகந்தது. திருமணம், குழந்தை பாக்கியம், ஆரோக்கியத்திற்கு இத்தலக்கோயிலுக்கு வேண்டிக் கொள்கின்றனர். பக்தர்கள் வியாழனன்று மாலையில் அம்பிகையை வணங்கி, அன்றிரவில் கோயிலிலேயே தங்கி மறுநாள் வாசுகி தீர்த்தத்தில் நீராடி திரும்புகின்றனர்.

திருமணதோஷம் உள்ளவர்கள் வில்வ மரத்தடியில் உள்ள புற்றடி விநாயகரை பாலபிசேகம் செய்தும், அருகிலுள்ள நாகருக்கு மாங்கல்யம் அணிவித்தும் வணங்குகின்றனர். தீராத நோய்களையும் தீர்ப்பவளாக அம்பாள் பாகம்பிரியாள் விளங்குவதால் இறைவிக்கு மருத்துவச்சி அம்மன் என்ற பெயரும் உண்டு. புற்றுநோய் தீர அம்பிகையை வணங்கி நம்பிக்கையுடன் தீர்த்தம் வாங்கி குடித்துச் செல்லலாம். அம்பிகையின் விபூதியையும் வேப்பிலையையும் விஷம் தீண்டப்பட்டவர் பெற்று உண்டால் குணமாகித் திரும்புவார் என்பது நம்பிக்கை.

சிவபெருமானின் கழுத்தை அலங்கரிக்கும் வாசுகியின் வழி வந்த நாகங்கள் இத்திருத்தலப்பகுதியில் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே கோயிலுக்குள் இருக்கும் புற்றுக்குக் கோழி முட்டையைக் காணிக்கையாகக் கொடுக்கும் வழக்கம் தொடர்கிறது. இது விஷம் முறிக்கும் திருத்தலமாகக் கருத்தப்படுவதால் விஷக்கடிகள், தீராத நோய்களுக்கு வாரக் கணக்கில் இங்கே தங்கி இருந்து வழிபாடு நடத்துகிறார்கள்.

கோயில் அமைப்பு

கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. கோயிலின் முன்புறம் வாசுகி தீர்த்தம் உள்ளது. கோயில் மண்டபத்தில் உள்ள பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்தியைக் கடந்து சென்றால் அர்த்த மண்டபம் உள்ளது. மண்டபத்துடன் கூடிய கருவறையில் மூலவர் பழம்புற்றுநாதர் என்ற வன்மீகநாதர் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார். இறைவன் சந்நிதிக்கு முன்னால் வலதுபுறம் தெற்கு தோக்கி அம்பாள் பாகம்பிரியாள் சந்நிதி அமைந்துள்ளது.

சுற்றுப் பிராகாரத்தில் தலவிருட்சம் வில்வ மரமும், மரத்தடியில் விநாயகர், நாகர், கன்னி மூலையில் விநாயகர், அதையடுத்து வள்ளி தெய்வானையுடன் முருகர், சண்டேஸ்வரர், பைரவர், நவக்கிரக சந்நிதிகள் உள்ளது. இத்தல விநாயகர் நினைத்தது முடிக்கும் விநாயகர் என்ற பெயருடன் விளங்குகிறார்.

இத்தலத்திலுள்ள கோஷ்ட தட்சிணாமூர்த்தி வித்தியாசமானவர். கல்லாலான மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்வதைப் போன்று அமையாமல், தானே தவநிலையில் உபதேசம் செய்வது போன்று தட்சிணாமூர்த்தி திருவுருவின் கீழ் பிரகதீஸ்வரர் என்ற சிவபெருமானே உபதேசம் கேட்பதாக அமைந்துள்ளது ஓர் அரிய காட்சியாகும்.

சிறப்பு நாட்கள்

  • வியாழன் மாலை முதல் வெள்ளி மாலை வரை.

திருவிழா

  • ஆடி மாதத்தில் பாகம்பிரியாள் அம்மனுக்குப் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெறுகிறது.

அமைவிடம்

திருவாடானை - தொண்டி மாநில நெடுஞ்சாலையில் ஐந்து கிமீ தொலைவில் உள்ள, காடாகுடி விலக்கிலிருந்து வலப்புறம் செல்லும் சாலையில், ஆறு கிமீ தொலைவில் திருவெற்றியூர் தலத்தை அடையலாம். இத்தலத்தின் அஞ்சல் சுட்டு எண்: 623407 ஆகும்.

மேற்கோள்கள்

  1. திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் கோயில்
  2. [வன்மீகநாதர் திருக்கோவில், வெற்றியூர்
  3. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

வெளி இணைப்ப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.