சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீசுவரர் கோயில்

சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீசுவரர் கோயில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1] இக்கோயில் தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அமைவிடம்

இவ்வூர் சர்க்கார் பெரிய பாளையம் என்றும் பெரிய பாளையம் என்றும் வழங்கப்படுகிறது. சுருக்கமாக எஸ். பெரியபாளையம் என்றும் அழைக்கப்படுகிறது. இ்வூர் திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் திருப்பூரிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது.

கோயில் பற்றிய தொன்மங்கள்

சுக்ரீஸ்வரர் திருக்கோவில். உள்ள லிங்கமானது, இராமாயண காலத்தில் இராமபிரானுக்கு உதவி புரிந்த சுக்ரீவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டவர் என்றும், இதன் காரணமாகவே மூலவர் சுக்ரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் எனப்படுகிறது. இதனை மெய்ப்பிக்கும் விதமாக ஆலயத்தின் அர்த்த மண்டபத்தில் சுக்ரீவன், சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. கருவறையில் உள்ள மூலவர் சுக்ரீசுவரர் என்ற பெயரிலும் இறைவி ஆவுடைநாயகி என்றும் அழைக்கப்படுகிறார். [1]

கோயில் குறித்து நிலவும் இன்னொரு கதையின்படி, முன்னொரு காலத்தில் ஒரு வணிகர், இந்த கோயிலிலின் வழியாக மாடுகள் மீது மிளகு மூட்டைகளை ஏற்றி சென்றார். அங்கு வந்த ஒருவர், ‘மூட்டையில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டுள்ளார். மிளகுக்கு இருந்த விலைமதிப்பு காரணமாக, வணிகர் பாசிப்பயிறு இருப்பதாக பொய்யுரைத்தார். பின்னர் அங்கிருந்து சந்தைக்குச் சென்று, மூட்டைகளைத் திறந்து பார்த்தபோது, அதில் பாசிப்பயிறுதான் இருந்துள்ளன. கோயிலின் முன்பாக வைத்து பொய்யுரைத்ததற்கு இறைவன் அளித்த தண்டனையை எண்ணி, வருந்திய அந்த வணிகர், இறைவனை மனமுருக வேண்டினார். அப்போது அவருக்கு ஒரு அசரீரி ஒலி கேட்டது. ‘உன் மாடுகள் எங்கு வந்து நிற்கிறதோ, அங்கு வந்து என்னை வணங்கு, உன் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்’ என்றது குரல்.

வியாபாரியும் மாட்டை ஓட்டி வந்து மாடு நின்ற இடத்தில் சுக்ரீஸ்வரரை வணங்கினார். இதையடுத்து பாசிப்பயிராக இருந்த மூட்டைகள், மிளகு மூட்டைகளாக மாறின. இப்பகுதி மக்கள், இத்தல இறைவனை ‘மிளகு ஈஸ்வரர்’ என்றே அழைக்கிறார்கள். அதனால் இங்கு வந்து மிளகு பூஜை செய்தால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை நிலவுகிறது.

கோயில் அமைப்பு

இத்தல மூலவர் சுக்ரீஸ்வரர் என்னும், குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவனின் கருவறைக்கு வலது புறம் ஆவுடைநாயகி என்ற பெயரில் அம்மன், தனிச் சன்னிதியில் உள்ளார். கோயிலில் மூலவரின் கருவறைக்கு நேர் எதிரில் பத்ரகாளி அம்மன் சன்னிதி இடம்பெற்றுள்ளது. திருச்சுற்றில் விநாயகர், மயில்வாகனம், மூன்று லிங்கத்திருமேனிகள், பைரவர், துர்க்கை, சூரியன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. [1] மேலும் கோயியில் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களைக் குறிக்கும், பஞ்ச லிங்கங்கள் இருக்கின்றன. மூலவரே அக்னி லிங்கமாக பார்க்கப்படுகிறார். வில்வ மரத்தின் கீழ், ஆகாச லிங்கம் அமைந்துள்ளது. மற்ற மூன்று லிங்கங்களும் கோவிலைச் சுற்றி அமைந்திருக்கின்றன.

மேற்கோள்கள்

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.