கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில்

கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரிக்கு வடக்கே அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்திலும் சூரியனார் கோயிலில் இருந்து 2 கி.மீ.தொலைவிலும் மயிலாடுதுறையில் (மாயவரம்) இருந்து 20 கி.மீ. தொலைவிலும் இத் தலம் அமைந்துள்ளது.கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதி உள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 36வது தலம் ஆகும். இக்கோயில் மதுரை ஆதினதிற்குட்பட்ட கோயிலாகும்.

தேவாரம்,பெரிய புராணம் பாடல் பெற்ற
ஸ்ரீகற்பகாம்பிகை சமேத ஸ்ரீ கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில்[1]
பெயர்
புராண பெயர்(கள்):கம்ஸபுரம், கம்சனூர்,பராசரபுரம்,அக்னிபுரம், முக்திபுரம், பலாசவனம்,அக்கினித்தலம்,பிரம்மபுரி[1]
பெயர்:ஸ்ரீகற்பகாம்பிகை சமேத ஸ்ரீ கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில்[1]
அமைவிடம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அக்னீஸ்வரர்
தாயார்:கற்பகாம்பிகை
தல விருட்சம்:புரச மரம்
தீர்த்தம்:அக்னி தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்,பெரிய புராணம்
பாடியவர்கள்:திருநாவுக்கரசர், சுந்தரர், சேக்கிழார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தமிழர் கட்டிடக்கலை
வரலாறு
தொன்மை:சோழர் கால கோயில்
அமைத்தவர்:சோழர்கள்
கோயில் அறக்கட்டளை:மதுரை ஆதீனம்

கஞ்சமாற நாயனார் அவதரித்த தலமெனப்படுகிறது. பிரமனுக்குத் திருமணக் காட்சியளித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).பலாச வனம் என்றும்,அக்கினித்தலம் என்றும் பிரம்மபுரி என்றும் அழைக்கப் படுகிறது. தேவாரம், பெரிய புராணம், சோழ மண்டல சதகம் ஆகிய நூல்களில் இத்தலம் கஞ்சனூர் என்றே வழங்கப்பட்டுள்ளது.[1]

இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [2]

சிவபெருமானே சுக்கிரனாகக் காட்சி அளிக்கிறார் என்பதால் சுக்கிரனுக்காக தனி சன்னிதி இல்லை.

  • இறைவன்: அக்னீச்வரர்
  • அம்பாள் : கற்பகாம்பாள்
  • விருட்சம்: புரச மரம்
  • தீர்த்தம்: அக்னி தீர்த்தம்
  • பதிகம்: அப்பர்
  • நவக் கிரகத் தலம்: சுக்ரன்

இக்கோயிலில் இருக்கும் முக்தி மண்டபம் என்றழைக்கப் படும் நடராஜ சபையில் நடராஜர் மற்றும் சிவகாமி ஆகிய தெய்வங்களின் திரு உருவச் சிலைகள் அமைந்துள்ளன.சிவபெருமான், பராசர முனிவருக்கு முக்தி தாண்டவம் ஆடிக் காட்சி அளித்த திருத்தலம் இது. நவக்கிரகத் தலங்களில் ,இது சுக்கிரனுடைய தலமாகும்.

  • சுக்கிரனின் நிறம் வெண்மை.
  • வாகனம்: முதலை
  • தான்யம்: மொச்சை
  • உணவு; மொச்சைப் பொடி கலந்த சாதம்
  • வச்திரம் (துணி) : வெள்ளைத் துணி
  • மலர்: வெண்தாமரை
  • இரத்தினம்: வைரம்

தலவரலாறு

  • அமுதம் பெறுவதில் தேவர்கள் செய்த செயல் கண்டு கோபமடைந்த அசுரர்கள் தங்கள் குலகுரு சுக்கிராச்சாரியாரிடம் முறையிட, அவர் தேவர்களை நாடு நகரம் இழந்து பூலோகம் சென்று துன்புற சாபம் தந்தார்.சாபம் பெற்ற தேவர்கள் வியாச முனிவரிடம் முறையிட, அவர் உத்திரவாஹினி என வழிபடப்படும் வடகாவிரியில் நீராடி ஸ்ரீகற்பகாம்பிகை சமேத ஸ்ரீ அக்னீஸ்வரரை வழிபட சுக்கிரன் சாபம் நீங்கும் என்று வழிகாட்டினார்.தேவர்களும் அவ்வாறே வழிபட்டு சாபவிமோசனமும், சிவபெருமான் தரிசனமும் பெற்றனர்.
  • மதுராபுரி மன்னர் கம்சராஜன் என்ற மன்னனும் இங்கு தனது பாவம் நீங்க வழிபட்டார்.
  • அக்னீஸ்வரன் ஒருமுறை பிரம்மதேவர் செய்த யாகத்தில் சேர்க்கப்பட்ட ஆகுதிகளைத் தேவர்களிடம் தராமல், தானே எடுத்துக்கொண்டதால் பெற்ற சாபத்தால் ’பாண்டு ரோகம்’ நோய் அவரைப் பற்றியது. அதிலிருந்து விடுபட அக்னிபகவான் பிரம்மதேவன் ஆலோசனைப்படி இங்கு வந்து தீர்த்தம் உருவாக்கி, இத்தல இறைவனை வழிபட்டு நோய் தீர்ந்தார். இதனால் இத்தல இறைவனுக்கு அக்னீஸ்வரர் என்ற திருப்பெயரும், அவர் உருவாக்கிய தீர்த்தத்திற்கு அக்னி தீர்த்தம் என்ற பெயரும் ஏற்பட்டது.
  • அக்னிதேவனின் நோயால் ஆரம்பித்த யாகம் தடைபட்டதால், படைப்புத் தொழிலைத் தொடங்க முடியாத பிரம்மதேவரும் இங்கு வந்து சிவபெருமானை நோக்கித் தவமிருந்து அவர் அருளால் படைப்புத் தொழிலைத் தொடங்கினார். இதனால் இத்தலத்தில் ஓடும் காவிரி நதிக்கு ’பிரம்ம தீர்த்தம்’ என்ற பெயர் ஏற்பட்டது.[1]
  • மாண்டவ்ய மகரிஷியின் புத்திரர்களின் ’மாத்ருஹத்தி’ தோஷத்தை போக்கிய தலம்

தலவிருட்ச பெருமை

இத்தலத்து தலவிருட்சத்தை ஒரு மண்டல காலம் பதினாறு முறை சுற்றி வந்து வழிபட கடன் தொல்லை தீரும் என்பது தொன்நம்பிக்கையாகும்.

நாயனார்கள் வாழ்வில்

  • மானக்கஞ்சார நாயனார் அவதரித்த தலம்
  • கலிக்காம நாயனார் திருமணம் நடைபெற்ற தலம்

திருக்கஞ்சனூர் சப்தஸ்தானம்

திருக்கஞ்சனூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழூர்த்தலங்கள் கஞ்சனூர், திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை, ஆடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை (தென்கரை மாந்துறை) ஆகிய தலங்களாகும்.[3]

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்பு

மேற்கோள்கள்

  1. குமுதம் ஜோதிடம்; 29.04.2011; பக்கம் 4-8
  2. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  3. ஏழூர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.