காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்
அமைவிடம்காஞ்சிபுரம், தமிழ்நாடு, India
ஆள்கூற்றுகள்12.833°N 79.717°E / 12.833; 79.717
கட்டப்பட்டது685-705AD
கட்டிடக்கலைஞர்unknown, but commissioned by இராஜசிம்மன்
கட்டிட முறைதமிழர் சிற்பக்கலை (பல்லவர்)
வகைCultural
State Party இந்தியா
Location in Tamil Nadu, India

அமைவிடம்

பல்லவ நாட்டின் பண்டைய தலைநகரம் என்ற சிறப்பைப் பெற்ற, சென்னையில் இருந்து சுமார் 45 மைல்கள் தூரத்தில் அமைந்துள்ள, காஞ்சிபுரத்தில், நகர மத்தியிலிருந்து ஏறத்தாழ ஒரு மைல் தூரத்தில் அமைந்துள்ளது.

சிறப்பு

இங்கே அமைந்துள்ள பல காலகட்டங்களையும் சேர்ந்த கோயில்களில் இதுவும் ஒன்றாகும். தென்திசைக் கைலாயம் என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோயில் தமிழ் கட்டிடக்கலையின் ஆரம்ப காலகட்டத்துக்குரிய திருப்பு முனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.இது காஞ்சிபுரத்திலுள்ள மிக்க பழைமைமிக்க சிவன் கோவிலாகும். இதைக் கல்வெட்டுக்கள் ’இராஜசிம்மேச்சரம்’ எனக் கூறுகின்றன. இக்கோவிலில் சுமார் 1300 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாடு நடந்து வருகிறது. இக்கோவில் முழுவதும் கல்லினால் கட்டப்பட்டதாகும்.

வரலாற்றுப் பின்னணி

இராஜசிம்மனால் கட்டுவிக்கப்பட்ட காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலின், அழகிய சிற்பங்களோடுகூடிய உட்சுற்றின் தோற்றம்

தமிழ் நாட்டின் கட்டிடக்கலை வரலாற்றில், நீடித்திருக்கக் கூடிய கட்டிடங்களாகக் கற் கோயில்களை அமைத்துத் திராவிடக் கட்டிடக்கலை வளர்ச்சிக்கு உத்வேகம் கொடுத்தது பல்லவர்கள் ஆவர். தொடக்கத்தில் குடைவரைகளையும், பின்னர் ஒற்றைக் கற்றளிகளையும் அமைத்த இவர்கள் தொடர்ந்து கட்டுமானக் கோயில்களை அமைப்பதிலும் முன்னோடிகளாக அமைந்தார்கள். இவற்றில் இறுதியாகக் குறிப்பிடப்பட்ட கட்டுமானக் கோயில்கள் கட்டும் தொழில் நுட்பம், தமிழ் நாட்டில், பல்லவ மன்னனான இராஜசிம்மனால் கட்டப்பட்ட மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கட்டப்பட்டது தான் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்.

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் கி.பி 700 ஆம் ஆண்டளவில் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப் பட்டதெனினும் இவனது மகனான மூன்றாம் மகேந்திரவர்மனே கட்டிடப் பணிகளை நிறைவேற்றி வைத்ததாகத் தெரிகிறது. பின்னரும் 14 ஆம் நூற்றாண்டளவில், விஜயநகரக் காலத்தில், சில பகுதிகள் சேர்க்கப்பட்டதுடன், திருத்த வேலைகளும் செய்யப் பட்டிருப்பதாக அறியக் கூடியதாக உள்ளது.

இரண்டாம் விக்ரமாதித்தன் என்ற சாளுக்கிய மன்னன் பல்லவர்களை வென்று காஞ்சியைப் பிடித்தபொழுது (கி.பி.740) காஞ்சி நகரின் சிறந்த கலைஞர்களைப் பட்டகடலுக்குக் (கர்நாடகா) கொண்டு சென்றார். அங்கு அரசி லோகமாதேவியின் கட்டளைப்படி விருப்பாஷா என்ற கோவில் நிறுவப்பட்டது. இக்கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவிலைப் பல அம்சங்களில் ஒத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

கட்டிட அமைப்பு

தொடக்கத்தில் இக் கோயில் விமானத்துடன் கூடிய கருவறையையும், அதற்கு முன்பக்கம் தூண்களுடன் கூடிய ஒரு மண்டபத்தையும் கொண்டிருந்தது. இவ்விரு கட்டிடங்களும் உயர்ந்த சுற்று மதிலால் சூழப்பட்டிருந்தன. பல்லவர்களுடைய கட்டடக் கோயில்களிலேயே மிகவும் உன்னதச் சிறப்பும் எழிலும் வாய்ந்தது கைலாசநாதர் ஆலயம் ஆகும்.

இறைவனது கருவறை மீதுள்ள விமானம் இக்கோவிலின் தனிச்சிறப்பு ஆகும். இவ்விமானம் அதிட்டானம் முதல் உச்சிப் பகுதிவரை கல்லாலானது. அழகுமிக்க தோற்றத்தைக் கொண்டுள்ளது. பிற்காலத்தில் தமிழகத்தில் எழுந்த விமானங்களுக்கு ஒரு சிறந்த ’முன்மாதிரி’யாக இது விளங்கிற்று. மாமல்லபுரத்திலுள்ள தர்மராஜ ரதத்தைப் போன்ற உச்சிப் பகுதியை இவ்விமானம் கொண்டுள்ளது.

பிரதான ஆலயத்தைச் சுற்றிப் பல சிறு துணை ஆலயங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அழகிய சிறு விமானத்தைக் கொண்டுள்ளன. சிறு ஆலயங்கள் இராஜசிம்மனுடைய பட்டத்தரசி இரங்க பதாகை என்பவரால் கட்டப்பட்டதாகும். ஆலயத்தின் வெளி மதில்களில் சிவபெருமானின் பல்வகை வடிவங்களைக் காட்டும் அழகிய சிற்பங்கள் உள்ளன. அவை தக்ஶிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ஊர்த்துவ தாண்டவர், ஹரிகரர் முதலிய திருவுருவங்கள் ஆகும். உமையன்னை, முருகப்பிரான், திருமால் ஆகிய தெய்வங்களின் எழில் சிற்பங்களும் இங்கு உள்ளன. துணை ஆலயங்களிலும் பல அழகிய தெய்வத்திருவுருவங்கள் உள்ளன. இக்கோவிலின் முகப்பில் இராஜசிம்மனின் மகன் மூன்றாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட சிறு கோவில் உள்ளது. இங்குக் காணப்படும் சிவபெருமானது திருவுருவங்கள் சமயச் சிறப்பும் கலைச் சிறப்பும் மிக்கவையாகும். கைலாசநாதர் ஆலயத்தில் புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூறப்பட்டுள்ள சிவபெருமானது பல்வேறு வடிவங்களை அழகிய சிற்பங்களாகப் பல்லவ சிற்பிகளின் உளிகள் வடித்துள்ளதைக் காணலாம்.

பிறப்பு முதல் இறப்பு வரை

பிறப்பு முதல் இறப்பு வரை என்பது கோவிலின் கருவறையை சுற்றியுள்ள பிரகாரத்தை சுற்றிவரும் செயலாகும். மற்ற கோவில்களைப் போல் அல்லாமல் இக்கோவிலில் பிரகாரத்தை சுற்றும் வழிக்கு சிறிய சதுர துவாரம் மட்டுமே விடப்பட்டுள்ளது. அது போல் பிரகாரத்தை விட்டு வெளிவரவும் சிறு சதுர துவாரம் மட்டுமே உள்ளது. இது அன்னையின் கருவறையில் இருந்து குழந்தை வருவது போன்ற செயலைக் குறிப்பதாகும். மேலும் வெளி வரும் துவாரம் மிகச்சிறியதாக இருப்பதால், வெளியே வர அதற்கு மேலே படிக்கட்டுடன் கூடிய பெரிய துவாரம் அமைக்கப்பட்டுள்ளது.

பல்லவர் கால ஓவியங்கள்

பிரதான ஆலயத்திலும் அதைச் சுற்றிலும் உள்ள துணை ஆலயங்களிலும் சுமார் 1300 வருடங்களுக்கு மேற்பட்ட பல்லவர் கால ஓவியங்கள் உள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று சிவனுக்கும் பார்வதிக்கும் நடுவில் கந்தர் உள்ள காட்சியாகும். கி.பி.14 ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர் குமார கம்பணர் காலத்தில், பல்லவர் ஓவியங்கள் மீது புதிய ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவை ’இரு அடுக்கு ஓவியங்கள்’ எனப்படுகின்றன. பல்லவர் ஓவியங்களை அறிஞர் தூப்ராய் என்பவர் கி.பி.1931 இல் கண்டுபிடித்தார்.

மேற்கோள்கள்

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

உசாத்துணைகள்

  • சந்திரமூர்த்தி. மா., தமிழ்நாட்டுச் சிவாலயங்கள் தொகுதி-1, மணிவாசகர் பதிப்பகம், 2003
  • Percy Brown, Indian Architecture (Buddhist and Hindu), D.B.Taraporevala & co. Private Ltd.,Bombay, 1971
  • தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்‌களும் - v.கந்தசாமி, எம்.ஏ, எம்.எட். - இரண்டாம் பதிப்பு 2006

இவற்றையும் பார்க்கவும்

தமிழ் நாட்டு ஓவியக் கலை

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.