விளத்தொட்டி பிரம்மபுரீசுவரர் கோயில்

விளத்தொட்டி பிரம்மபுரீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்

இக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் திருச்சிற்றம்பலம் அருகில் விளத்தொட்டி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் அப்பரால் பாடப்பெற்ற வைப்புத்தலமாகும்.[2]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக பிரம்மபுரீசுவரர் உள்ளார். இங்குள்ள இறைவி இட்சுரச நாயகி என்று அழைக்கப்படுகிறார். இட்சு என்றால் கரும்பு, ரசம் என்றால் சாறு என்ற வகையில் கரும்புச் சாறு போல பக்தர்களுக்கு நல்ல அருளையும், இனிய வாழ்வினையும் அளிப்பதால் இறைவி அவ்வாறு அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் தல மரம் வில்வம் ஆகும்.[2]

அமைப்பு

ஆலயத்தின் நுழைவாயிலைக் கடந்ததும் இரு மண்டபங்கள் தொடர்ந்து காணப்படுகின்றன. மகாமண்டப வாயிலின் இடது புறத்தில் விநாயகர் உள்ளார். ஆபத்து காத்த விநாயகர் என்றழைக்கப்படும் அவ்விநாயகர் சற்று பெரிய அளவில் உள்ளார். அருகே பிரம்மா சிவனை பூசிக்கும் சிற்பம் காணப்படுகிறது. தேவகோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் விநாயகர், பாலமுருகன், கஜலட்சுமி ஆகியோர் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு நேர் பின்புறம் பால முருகன் தனிச் சன்னதியில் உள்ளார். பாலமுருகன் தொட்டியில் தவழ்ந்து உறங்கிய தலம் என்ற பெருமையுடையது இக்கோயில். திருச்சுற்றின் வட புறத்தில் சண்டிகேசுவரர் சன்னதி உள்ளது. மகாமண்டபத்தின் இடது புறம் பெருமாள் சன்னதி தனியாக உள்ளது. அச்சன்னதியில் வேணுகோபாலப் பெருமாள், ருக்மணி, சத்யபாமா, கருடாழ்வார் ஆகியோர் உள்ளனர். வலது புறம் நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர் உள்ளனர்.[2]

திருவிழாக்கள்

கார்த்திகை, மகாசிவராத்திரி போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.