காஞ்சிபுரம் பணாதரேசர் கோயில்

காஞ்சிபுரம் பணாதரேசர், பணாமுடீசர் கோயில் (பணாதரேசம்) என வழங்கப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். மேலும் "பன்னகாபரணன்" என்ற மற்றொரு பெயரும் இவ்விறைவனுக்கு வழங்குவதாக அறியப்பட்ட இக்கோயில் பற்றிய குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[1]

காஞ்சிபுரம் பணாதரேசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் பணாதரேசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பணாதரேசர்.

இறைவர், வழிபட்டோர்

  • இறைவர்: பணாதரேசர், பணாமுடீசர்
  • வழிபட்டோர்: பாம்புகள்

தல வரலாறு

சிவ பெருமானிடம் வரம் பெற்ற கருடன், உலகில் உள்ள அனைத்து பாம்புகளையும் அழிக்க திட்டமிட்டு அதன் படி செயல் படவும் தொடங்கினார். தம் குலம் அழிவதைக் கண்ட பாம்புகள், காஞ்சிக்கு வந்து பணாதரேசரை பிரதிஷ்டை செய்து, வழிபாடாற்றி வந்தன. பாம்புகளின் வழிபாட்டிற்கு மகிழ்ந்த சிவனார் கருணை செய்து, அப்பாம்புகளை தம் உடம்பிலே ஆபரணமாக அணிந்துகொண்டார் என்பது தல வரலாறாக உள்ளது.[2]

தல விளக்கம்

பணாதரேசமென்பது யாதெனில், கருடன் சிவபிரானை வணங்கிப் பெற்ற பேற்றினால் தம் குலத்தை அழிக்கக் கண்ட பாம்புகள் வேகவதி ஆற்றின் வடகரையில் ஆதீபி தேசத்திற்குத் தெற்கில் பணாதரேசப் பெருமானைத் தாபித்துப் பூசித்துத் தம் குறை தீர வேண்ட, பெருமானார் தமது திருமேனியில் அவற்றை அணிகலமாகத் தரித்துக் கொண்டனர். திருமாலுடன் வந்த கருடனை இறைவன் திருமேனியிலுள்ள பாம்புகள் ‘ஏன் கருடா சுகமோ’ என வினவின. இது உலகிற் பழமொழியாகவும் விளங்கும். சிறியர் சார்பினை விடுத்துப் பெரியோரைச் சார்தல் வன்மை தரும் என்பது பெறப்படும். இத்தலம் ஆலடிப் பிள்ளையார் கோயிலுக்கு அணித்தாக வடக்கில் உள்ளது.[3]

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் தெற்குப் பகுதியில் ஆலடிப் பிள்ளையார் கோவில் தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் பிரதான சாலையில் (கீழ் ரோடு) 2-வது கிலோமீட்டர் தொலைவில் கீரை மண்டபம் அருகில் இத்தலமுள்ளது.[4]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.