மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில்

மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் புஷ்பவனேஸ்வரர். இவர் ஆதிபுராணர், பொய்யிலியர் என்றும் அறியப்படுகிறார். அம்மன் சௌந்தரநாயகி, அழகாலமர்ந்த நாயகி என்ற பெயர்களில் அறியப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருப்பூந்துருத்தி
பெயர்:மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:மேலைத்திருப்பூந்துருத்தி
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர்
தாயார்:சௌந்தரநாயகி, அழகாலமர்ந்த நாயகி
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:சூரியதீர்த்தம், காசிபதீர்த்தம், கங்கை, காவிரி, அக்னி தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:அப்பர், (திருநாவுக்கரசர்), அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்
நந்தி விலகிய நிலையில்

இத்தலம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேலத்திருப்பந்துருத்தி என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்தலத்தினை அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள் ஆகியோரும் பாடியுள்ளனர்.

தல வரலாறு

அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலம் என்று எண்ணி காலால் மிதிக்க அஞ்சி வெளியில் நின்ற சம்பந்தருக்கு நந்தியை விலகி நிற்குமாறு இறைவன் அருளிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). அப்பர் சம்பந்தரின் பல்லக்கைச் சுமந்த தலமெனப்படுகிறது.

பட்டீஸ்வரம், திருப்புன்கூர், திருப்பூந்துருத்தி ஆகிய தலங்களில் நந்தி சந்நதிக்கு எதிரே நிற்காமல் சற்று விலகியிருக்கிறாரே தவிர திரும்பியிருக்கவில்லை.[1]

தல சிறப்புக்கள்

  • சப்தஸ்தானத் தலங்களுள் இதுவும் ஒன்று.
  • இத்தலம் "பூந்துருத்தி காடவநம்பி "யின் அவதாரத் தலம்.
  • இத்தலத்திலும் நந்தி விலகியுள்ளது. (தலபுராணம் தொடர்புடையது.)
  • ஞானசம்பந்தரின் பல்லக்கை அப்பர் பெருமான் தன் தோளிற் சுமந்தத் தலம். இந்த இடத்தை சம்பந்தர் மேடு என்று சொல்லப்படுகிறது. (திருவாம்பொழிலுக்குப் பக்கத்தில் வெள்ளாம்பரப்பூரையடுத்து இம் மேடு உள்ளது. இங்கு இருவருக்கும் கோயில் உள்ளது, விழா நடைபெறுகிறது.)
  • அப்பர் அமைத்த - "திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம்" என்று புகழப்படும் திருமடம் உள்ள தலம். இங்கு இருந்து தான் அப்பர் பெருமான் திரு அங்கமாலை உள்ளிட்ட பல தாண்டகங்களையும் பல பதிகங்களையும் பாடியருளினார்.
  • கருவறையின் தென்பால் தென்கயிலையும், வடபால் வடகயிலையுமாகிய கோயில்கள் விளங்குகின்றன.
  • மகிடனையழித்த பாவத்தைப் போக்க ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் துர்க்கையும், அமர்ந்த கோலத்தில் அப்பர் பெருமானும், பூந்துருத்தி காடவ நம்பியின் திருவுருவமும் தரிசிக்கச் சிறப்புடையன.

திருவையாறு சப்தஸ்தானம்

திருவையாறு சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும்[2].

திறக்கும் நேரம்

காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

திருத்தலப் பாடல்கள்

இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:

திருநாவுக்கரசர் பாடிய பதிகம்

கொடிகொள் செல்வ விழாக்குண லையறாக்
கடிகொள் பூம்பொழிற் கச்சிஏ கம்பனார்
பொடிகள் பூசிய பூந்துருத் திந்நகர்
அடிகள் சேவடிக் கீழ்நா மிருப்பதே
தோலுந்தம்மரை யாடைசுடர்விடு

மாலினை மாலுற நின்றான்
மலைமகள் தன்னுடைய
பாலனைப் பான்மதி சூடியைப்
பண்புண ரார்மதின்மேற்
போலனைப் போர்விடை யேறியைப்
பூந்துருத் திமகிழும்
ஆலனை ஆதிபு ராணனை
நானடி போற்றுவதே.

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

திருப்பூந்துருத்தி பல்லக்கு, திருவையாறு சப்தஸ்தான விழா, ஏப்ரல் 2008
  1. திருவைகாவூர் அருள்மிகு வில்வவனேச்வரர் கோயில் மான்மியம், ஏ.எஸ்.ரங்காச்சாரி, பிப்ரவரி 2001
  2. திருவையாறில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி, தினமணி, மே 16, 2014
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.