திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்

திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 61ஆவது சிவத்தலமாகும். மேலும், மேலும் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும். [3] இச்சிவாலயத்தின் மூலவர் வீழிநாதேஸ்வரர். தாயார் சுந்தரகுசாம்பிகை.

தேவாரம் பாடல் பெற்ற
திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):பூகைலாசம், கல்யாணபுரம், பஞ்சாக்கரபுரம், தட்சிணகாசி, சண்மங்களத் தலம், சுவேத கானனம், ஆகாச நகரம், பனசாரண்யம், நேத்திரார்ப்பணபுரம், தேஜிநீவனம்,திருவீழிமிழலை[1]
அமைவிடம்
ஊர்:திருவீழிமிழலை
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வீழிநாதேஸ்வரர்,விழியழகர், நேத்திரார்ப்பணேசுவரர்
உற்சவர்:கல்யாணசுந்தரர்
தாயார்:சுந்தரகுசாம்பிகை
தல விருட்சம்:வீழிச்செடி
தீர்த்தம்:வீஷ்ணுதீர்த்தம் (முதலான 25 தீர்த்தங்கள்)
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:சிறப்பானது
தொலைபேசி எண்:9443973629, 9443924825[2]

இச்சிவாலயம் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலை எனும் ஊரில் அமைந்துள்ளது.

கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இறங்கி ஒரு கிமீ சென்று இத்தலத்தை அடையலாம். இத்தலத்தில் திருமால் சக்கரம் வேண்டிப் பூசிக்கும்போது ஒரு மலர் குறையத் தன் கண்ணையே மலராக இட்டு அர்ச்சித்தார் என்பது தொன்நம்பிக்கை. சம்பந்தருக்கும் அப்பருக்கும் இறைவன் படிக்காசு வழங்கிய தலம் என்ற தொன்நம்பிக்கையும் உள்ளது.

பெருமிழலைக் குறும்பர் என்னும் பரமயோகி மிழலை நாட்டுக் குறும்பூரில் வாழ்ந்தவர். குறும்பூர் இக்காலத்தில் திருக்குறுக்கைப் பள்ளி என்னும் பெயருடன் விளங்குகிறது. நாற்பெருங்குரவர் என்று போற்றப்படுபவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரையே தெய்வமாகக் கொண்டு வாழ்ந்தவர். அப்பூதி அடிகள் அப்பர் பெருமானையே தெய்வமாகக் கருதியது போன்றது இது.

விழி என்னும் தமிழ்ப்பெயர் நேத்ரம் என்று வடமொழி ஆக்கம் பெற்று இங்குள்ள இறைவன் பெயர் அமைந்துள்ளது. திருவிழிமிழலை என்பது திருவீழிமிழலை ஆயிற்று.

தொழில்நுட்பம்

திருவலஞ்சுழி பலகணி, திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு. இதன்மூலமாக இத்திருக்கோயிலின் கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் வௌவால்களால் தொங்க முடியாது. ஆவுடையார்கோயில் கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்கும்.

சங்ககாலம்

சங்ககாலத்தில் இதனைச் சூழ்ந்திருந்த நாடு மிழலை நாடு என்னும் பெயருடன் திகழ்ந்தது. நீடூரைத் தலைநகராகக் கொண்டு எவ்வி என்னும் வள்ளல் இதனை ஆண்டுவந்தான்.

மிழலை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர். இது இக்காலத்தில் திருவீழிமிழலை என்னும் பெயருடன் விளங்குகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுத் தேவாரம் இவ்வூரின் சிவனைப் போற்றுகிறது. இவ்வூரில் பஞ்சம் நிலவிய காலத்தில் அப்பரும், சம்பந்தரும் இவ்வூர்க் கோயிலில் படிக்காசு பெற்று மக்களின் பசியைப் போக்கிவந்ததாகப் பெரியபுராணம் குறிப்பிடுகிறது.

சங்ககாலத்தில் இவ்வூர் சூழ்ந்த நாட்டை ஆண்ட குறுநிலத் தலைவன் எவ்வி. இவன் சிறந்த வள்ளல்.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இந்த நாட்டை வென்று தனதாக்கிக் கொண்டபின் அப்பகுதியில் இருந்த முத்தூறு பகுதியையும் தனதாக்கிக்கொண்டான் என்கிறார் அவனது அவைக்களத் தலைமைப் புலவர் மாங்குடி மருதனார் (=மாங்குடி கிழார்).[4]

வழிபட்டோர்

திருமால் (சக்கராயுதம் பெற), சுவேதகேது எனும் மன்னன் (எமபயம் நீங்க), வசிட்டர், காமதேனு, ரதிதேவி, மனு

மகா கும்பாபிஷேகம் 2013

2013 ஆம் ஆண்டு 11.09.2013 (ஆவணி 26) அன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.[2]

ஐயன்பேட்டை சிவன் கோயில்

அப்பரும், சுந்தரரும் இறைவனாரிடமிருந்து பெற்ற படிக்காசுகளை மாற்றிப் பொருள் பெற்ற கடைத்தெரு ஐயன்பேட்டை என்று இக்காலத்தில் வழங்கப்படுகிறது. இங்கே படியளந்த நாயகி உடனாய செட்டியப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இவற்றையும் பார்க்க

கோயில் படத்தொகுப்பு

புகழ் பெற்ற வவ்வால் நத்தி மண்டபம் படத்தொகுப்பு

மேற்கோள்கள் மற்றும் அடிக்குறிப்புகள்

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 213,214
  2. குமுதம் ஜோதிடம்; 6.9.2013;
  3. வீ.ஜெயபால், திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாதசுவாமிகள் அருளிச்செய்தி திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்ய தேசங்கள், அம்மையப்பா பதிப்பகம், சைவ சித்தாந்த ஆய்வு மையம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, மே 2016
  4. ஓம்பா ஈகை மாவேள் எவ்வி புனல் அம் புதவின் மிழலையொடு கழனிக் கயலார் நாரை போர்வில் சேக்கும் பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர் குப்பை நெல்லின் முத்தூறு தந்த கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய - புற.நானூறு 24
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.