திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30ஆவது சிவத்தலமாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.[3]கருவூர்த் தேவர், மாணிக்கவாசகர், பட்டினத்தார் ஆகியோரும் இத்தலத்தை பாடியுள்ளனர். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தேவாரம் பாடல் பெற்ற
திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோவில்[1]
பெயர்
புராண பெயர்(கள்):மத்தியார்ச்சுனம்
பெயர்:திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோவில்[1]
அமைவிடம்
ஊர்:திருவிடைமருதூர்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மகாலிங்கேசுவரர், மருதவனேசுவரர், மருதவாணர்[2]
தாயார்:பிரகத் சுந்தரகுஜாம்பிகை, பெருநலமாமுலையம்மை
தல விருட்சம்:மருத மரம் (அர்ஜூனம்)
தீர்த்தம்:காருண்ய அமிர்த தீர்த்தம், காவிரி
சிறப்பு திருவிழாக்கள்:தைப்பூசத் திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். வைகாசி விசாகத் திருவிழா 10 நாள் நடைபெறும். ஆடிப்புர திருவிழா
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:அப்பர், சுந்தரர்,சம்பந்தர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தமிழர் கட்டிடக்கலை
வரலாறு
தொன்மை:புராதனக் கோயில்
அமைத்தவர்:சோழர்கள்

தலத்தின் சிறப்பு

மருத மரத்தைத் தல மரமாகக் (ஸ்தல விருட்சம்) கொண்டு சிறப்புற விளங்குகின்ற சிவன் கோயில்கள் இந்தியாவில் மூன்று. முதலாவது ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே உள்ள மல்லிகார்ஜுனம் எனும் திருக்கோயில். இரண்டாவது மத்தியார்ஜுனம் எனப்படுகின்ற தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர். மூன்றாவது புடார்சுனம் எனப்படுகின்ற தமிழ்நாடு திருநெல்வேலிக்கு அருகே அம்பாசமுத்திரம் அருகில் உள்ள திருப்புடைமருதூர். இவை முறையே மல்லிகார்ஜுனம், மத்தியார்ஜுனம், புடார்சுனம் (தலைமருது, இடைமருது, கடைமருது) எனப் புகழப்பெறுகின்றன.[4]

திருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும். ஒருமுறை வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது. சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான். இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

இத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாகும். இறைவன் மகாலிங்கேஸ்வரர் தன்னைத்தானே அர்ச்சித்துக் கொண்டு பூஜா விதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக்கு போதித்து அருளிய தலம் திருவிடைமருதூர். மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார்.

மூகாம்பிகை சன்னதி

இவ்வாலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் மட்டும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

வரகுண பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய தலமென்பதால் " பிரம்மஹத்தி " தோஷ நிவாரண தலம் இது. அருள்மிகு மகாலிங்கஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாழிக்கிறார். மகாலிங்கேஸ்வரர் திருத்தலத்தை சுற்றி நான்கு வீதிகளிலும் சிவ ஸ்தலங்கள் உள்ளதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலம் என்றும் அழைக்கப்படுகிறது.[1] இத்தலத்தின் தலவிநாயகர் ஆண்ட விநாயகர். இத்தலத்தில் சுவாமி, அம்பாள் இருவரது சந்நிதிகளும் கிழக்கு நோக்கியவை.27 நட்சத்திர லிங்கங்கள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டிலே மகாலிங்கேஸ்வரர் திருத்தேர் மூன்றாவது பெரியத் தேர். பட்டினத்தார் மற்றும் பத்திரகிரியார் ஆகியோர்க்கு கிழக்கு மற்றும் மேற்கு கோபுர வாசல்களில் சன்னதி உள்ளது.

சப்தஸ்தானம்

திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழுர்த்தலங்கள் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடி ஆகிய தலங்களாகும்.[5]

காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள்

காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும். திருவிடைமருதூரில் உள்ள சிவாலயம் சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு ஆலயமாகும். மருத மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட மூன்று கோயில்கள் உள்ளன. வடக்கே ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படும் தலத்தை வடமருதூர் என்றும், தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் புடார்ச்சுனம் என்றழைக்கப்படும் திருப்புடைமருதூரும் உள்ளது. இவ்விரண்டிற்கும் நடுவே கும்பகோணம் மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் உள்ளது திருவிடைமருதூர். நெடிதுயர்ந்த கோபுரங்களும் நீண்ட பிரகாரங்களும் உடைய திருவிடைமருதூர் ஆலயம் மத்யார்ஜுனம் என்று வழங்குகிறது. மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் ஆகிய மூன்றின் சிறப்புக்களாலேயே ஒரு கோயில் பெருமை பெறுகின்றது. அந்த வகையில் இந்தத் திருவிடைமருதூர் இறைவன் அருள்மிகு மஹாலிங்க சுவாமியின் சிறப்புக்கள் கணக்கில் அடங்கா. தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மஹாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது. மேலும் மேற்கே அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்திற்குத் தனிப் பெருமை ஒன்றுண்டு. மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பாகப் பூசை வழி பாடுகளைச் செய்து, மேகராகக் குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களைப் பாராயணஞ் செய்வதால் மழை பொழிவது இன்றளவும் நடைபெற்று வரும் அதிசயமாகும்.

பஞ்சகுரோசத்தலங்கள்

திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் (கருப்பூர்) ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன. கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் செல்லவேண்டும். வேதங்களுக்கு அங்கமாக பல நூல்கள் அமைந்ததுபோல கும்பகோணத்திற்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்தன.[6]

வழிபட்டோர்

உமா தேவியார், விநாயகர், முருகன், திருமால், இலட்சுமி, காளி, சரஸ்வதி, வேதங்கள், வசிட்டர், உரோமச முனிவர், ஐராவணம், அகத்தியர், சிவவாக்கியர், கபிலர், வரகுண பாண்டியன் ஆகியோர் வழிபட்ட தலம்.[2]

மூகாம்பிகை அம்மன் சந்நிதி

மூகாம்பிகை அம்மனுக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது.[2] இந்தியாவிலேயே கொல்லூரிலும், திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகை அம்மனுக்கு சந்நிதியுள்ளது.[1] கும்பகோணத்தின் கும்பேஸ்வரர் கோயில் மேல வீதியில் மூகாம்பிகை கோயில் உள்ளது.

நட்சத்திர இலிங்க சந்நிதி

இங்கு 27 நட்சத்திரங்களுக்கும் 27 இலிங்கங்கள் உள்ளன

நவக்கிரக சந்நிதி

இங்குள்ள நவக்கிரக விக்கிரகங்கள் பிற கோயிகளிலும் வேறுபட்டதாக இடம் மாறி அமைந்துள்ளது

அமைவிடம்

மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 9 கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது. .[2]

பஞ்சரத தேரோட்டம்

இக்கோயிலில் சுமார் 180 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சரத் தேரோட்டம் 23 ஜனவரி 2016இல் நடைபெற்றது. விநாயகர், வள்ளி தெய்வானையுடன் வடிய முருகன், மகாலிங்கசுவாமி, தேவி, சண்டிகேஸ்வரர் இந்த ஐந்து தேர்களில் எழுந்தருளினர்.[7]

நூல்

திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோயில் என்ற நூலில் மருதவன வரலாறு, கோயில் செய்திகள், ஆண்டவிநாயகர், அகத்தியர் தரிசனம், தவக்கோலம், மகாலிங்கப்பெருமான், பிரணவப்பிரகாரம், ஆயர்பாடி கிருஷ்ணன், நட்சத்திரலிங்க வழிபாடு, பட்டினத்தார், பத்ரகிரியார், பிரம்மஹத்தி தோஷ பரிகாரம், கங்கையும் காருண்யாமிர்தமும், சக்ர மகாமேரு வழிபாடு, அசுவமேதப் பிரகாரம் உள்ளிட்ட பல தலைப்புகளில் திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலைப் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளன.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. http://temple.dinamalar.com/New.php?id=396
  2. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 157,158
  3. வீ.ஜெயபால், திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாதசுவாமிகள் அருளிச்செய்தி திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்ய தேசங்கள், அம்மையப்பா பதிப்பகம், சைவ சித்தாந்த ஆய்வு மையம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, மே 2016
  4. கு.ச.மகாலிங்கம், திருமணப்பேறு நல்கும் திருவிடைமருதூர், பாலாஜி பிரிண்டர்ஸ் & பதிப்பகம், கும்பகோணம், 2004
  5. முனைவர் ஆ.சண்முகம், ஏழுர்த் திருவிழாக்கள், அகரம், தஞ்சாவூர், 2002
  6. திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு)
  7. 180 ஆண்டுகளுக்குப் பிறகு திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் பஞ்சரதத் தேரோட்டம், தினமணி, 24 ஜனவரி 2016

வெளி இணைப்புகள்

படத்தொகுப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.