கருவூர்த் தேவர்

கருவூர்த் தேவர் ஒன்பதாம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள திருவிசைப்பா பாடிய புலவர். இவர் கி.பி.10ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியிலும், 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர் ஆவார்.[1]

தஞ்சைப் பெரியகோயிலில் கருவூர்த் தேவருடன் ராஜராஜசோழன் இருக்கும் ஒரு ஓவியம்

திருவிடைமருதூரில் இறைவனிடம் திருவடிதீட்சை பெற்றார். இவரின் உருவச்சிலை கருவூர் பசுபதீஸ்வரர் கோயிலிலும், தஞ்சைப் பெரிய கோயிலிலும் இருக்கிறது.[2]

கருவூர்த் தேவர் கருவூரில் தோன்றியவராவார். இவர் ஒரு சித்தர் ஆவார். தஞ்சைத் சோழமன்னன் முதலாம் ராஜராஜனின் குருவாகவும் விளங்கினார். தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்தை ஆவுடையாருடன் சேர்ந்து பிரதிஷ்டை செய்யக் கருவூரார் உதவினார் எனப்படுகிறது. பன்னிரு திருமுறைகளில் திருவிசைப்பா என்னும் ஒன்பதாம் திருமுறையில் ஒரு பகுதியைக் கருவூரார் இயற்றினார்.[3][4]

  1. தில்லை
  2. திருக்களந்தை
  3. திருக்கீழ்கோட்டூர்
  4. திருமுகத்தலை
  5. திரைலோக்கிய சுந்தரம்
  6. கங்கைகொண்ட சோளேச்சரம்
  7. திருப்பூவனம்
  8. திருச்சாட்டியக்குடி
  9. தஞ்சை இராசராசேச்சுரம்
  10. திருவிடை மருதூர்

ஆகிய 10 ஊர்களுக்குச் சென்று 10 பதிகங்கள் பாடியுள்ளார். இவற்றில் 103 பாடல்கள் உள்ளன.

இவரது பாடல்களில் இரண்டு.

கலைகள்தம் பொருளும் அறிவுமாய் என்னைக்
கற்பினிற் பெற்றெடுத்(து) எனக்கே
முலைகள்தந்(து) அருளும் தாயினும் நல்ல
முக்கணான் உறைவிடம் போலும்
மலைகுடைந் தனைய நெடுநிலை மாட
மருங்கெலாம் மறையவர் முறையோத்(து)
அலைகடல் முழங்கும் அந்தணீர்க் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

அம்பளிங்கு பகலோன்போல் அடைப்பற்றாய் இவள்மனத்தில்
முன்பளிந்த காதலும்நின் முகத்தோன்ற விளங்கிற்றால்
வம்பளிந்த கனியே !என் மருந்தே ! நல் வளர்முக்கண்
செம்பளிங்கே ! பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே

கருவிநூல்

அடிக்குறிப்பு

  1. உரையாசிரியர் வித்வான் எம்.நாராயண வேலுப்பிள்ளை, பன்னிரு திருமுறைகள், தொகுதி 13, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை
  2. ஒன்பதாம் திருமுறை பாடியவர்கள் | திருவிசைப்பா
  3. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 11 ஆம் நூற்றாண்டு பதிப்பு 2005, பக்கம் 200
  4. ஆசனங்கள் ஏழின் மேல் அமரர்க்கு அதிபதி!- ஒளி வழிபாடு - திருப்புகழ் அமுதனின் கட்டுரை, தினமணி செப்டம்பர் 17, 2010
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.