மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்

மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள சிவத்தலமாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):சூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம், தென்மயிலை
பெயர்:மயிலாடுதுறை மயூரநாதசுவாமி திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:மயிலாடுதுறை
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மயூரநாதர்
தாயார்:அபயாம்பிகை
தல விருட்சம்:மாமரம், வன்னி
தீர்த்தம்:பிரம, ரிஷப தீர்த்தங்கள், காவிரியாறு
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்

அமைவிடம்

இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறையில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில்தான் திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த முதலாம் திருமுறையின் 38வது திருப்பதிகம் 404 முதல் 414 வரையிலான திருப்பதிக பாடல்கள், மூன்றாம் திருமுறையின் 748 முதல் 758 வரையிலான பாடல்கள் மற்றும் ஐந்தாம் திருமுறையின் 387 முதல் 397 வரையிலான பாடல்கள் பாடப்பெற்றது. இத்தலத்தில் அம்பாள் மயில் வடிவில் வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை.காசிக்கு சமமான ஆறு திருத்தலங்களில் ஒன்று.

இறைவன், இறைவி

இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள இறைவன் மயூரநாதர், இறைவி அபயாம்பிகை.

அமைப்பு

ஒன்பது நிலையுள்ள ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் இடது புறம் குளம் உள்ளது. அடுத்துள்ள கோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. அடுத்து காணப்படும் மண்டபத்தில் இடப்புறம் கணபதி சன்னதி உள்ளது. அச்சன்னதியின் முன்பாக மூஞ்சுறு, பலிபீடம் உள்ளன. இடப்புறம் சுப்பிரமணியர் சன்னதி உள்ளது. இந்த மண்டபத்தில் பலிபீடம், நந்தி, இரு கொடி மரங்கள் உள்ளன. அடுத்துள்ள நுழைவாயிலைக் கடந்ததும் வலப்புறம் அதிகார நந்தி உள்ளது. திருச்சுற்றில் பதஞ்சலி, வியாக்ரபாதர், சேக்கிழார், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், விநாயகர், சப்தமாதர், 63 நாயன்மார்களின் செப்புத்திருமேனிகள், 63 நாயன்மார்கள், சகஸ்ரலிங்கம், நாயகர், இந்திரலிங்கம், அக்கினிலிங்கம், எமலிங்கம், நிருதிலிங்கம், விஷ்ணுலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், பிரம்மலிங்கம், மகாலட்சுமி, அஷ்டலட்சுமி ஆகியோர் உள்ளனர். மூலவராக மயூரநாதர் உள்ளார். கருவறையின் இடப்புறம் திருமுறைக்கோயில் உள்ளது, தொடர்ந்து நடராஜர் சன்னதி காணப்படுகிறது. கருவறை கோஷ்டத்தில் விநாயகர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். திருச்சுற்றில் விநாயகர் சன்னதி, சுப்ரமணியர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. வெளிச்சுற்றில் இடப்புறம் நாதசர்மா சன்னதி உள்ளது. அச்சன்னதிக்கு முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன. அடுத்து அனவியதாம்பிகை சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியின் திருச்சுற்றில் வாகனங்கள்,விநாயகர், லிங்கோத்பவர், வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், வரசித்தி விநாயகர், ஆடிப்பூர அம்மன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. அம்மன் சன்னதிக்கு எதிர் புறமாக ஆதிமயூரநாதர் சன்னதி உள்ளது. அச்சன்னதிக்கு முன்பாக பலிபீடமும், நந்தியும் உள்ளன. வலப்புறம் கணபதியும், இடப்புறம் சுப்ரமணியரும் உள்ளனர்.

மயிலாடுதுறை சப்தஸ்தானம்

மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் நடைபெறும் சப்தஸ்தான திருவிழாவில் பங்கேற்கும் ஏழு சிவன் கோயில்களுள் இக்கோயிலும் ஒன்றாகும்.

பங்கேற்கும் பிற கோயில்கள்

இவ்வேழு திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) இந்த மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் மயிலாடுதுறையில் நடைபெறுகிறது. [1]. துலா ஸ்நானம், துலாகட்டம் படித்துறையில் ஒவ்வொரு வருடமும் தீர்த்தவாரி நடைபெறும். ஐப்பசி மாதம் முதல் நாள் ஆரம்பித்து, கடை முழுக்கு ஐப்பசியின் கடைசி நாளன்று நிறைவடைகிறது. [2].

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

படத்தொகுப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.