திருவாவடுதுறை ஆதீனம்

திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் தென் இந்தியாவிலுள்ள சைவ ஆதீனங்களில் ஒன்றாகும். இது நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் திருவாலங்காட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

திருவாவடுதுறை ஆதீனம்

திருக்கயிலாய பரம்பரை குருமரபில் தழைத்தோங்கி வருகின்ற இவ்வாதீனம் சித்தர் சிவப்பிரகாசரிடம் ஞானோபதேசம் பெற்ற அருள்திரு நமசிவாய மூர்த்திகள் அவர்களால் கிபி பதினான்காம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பெற்றது. சித்தர் சிவப்பிரகாசர் அருள் நமச்சிவாயரிடம் தீட்சை பெற்றவர். அருள் நமச்சிவாயர், உமாபதி சிவாச்சாரியாரிடம் உபதேசம் பெற்றவர்.[1]

கிளைகள்

திருநெல்வேலி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருநள்ளாறு, இராமேசுவரம், மதுரை, திருச்செந்தூர், மற்றும் காசி, காளஹஸ்தி உட்பட 50 இடங்களில் இதன் கிளை மடங்கள் உள்ளன.

கோயில்கள்

நெல்லையில் உள்ள சந்திப்பிள்ளையார், குறுக்குத்துறை முருகன் கோவில், திருவாவடுதுறை, திருநள்ளாறு, திருவிடைமருதூர் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் திருவாவடுதுறை மடத்திற்குச் சொந்தமான கோயில்கள் உள்ளன. குறிப்பாக திருமங்கலக்குடி, சூரியனார் கோயில், ஆகியன ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன[2].

தமிழ்நூல்கள் மற்றும் நூலகம்

இந்த ஆதீனம் முந்நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நூல்களை வெளியிட்டும், மறுபதிப்புச் செய்தும் வெளியிட்டுள்ளது. திருவாவடுதுறை ஆதீன சரஸ்வதி மகால் நூலகத்தில் சைவம், வைத்தியம்,இலக்கணம், நாடகம், புராணம் என பலதுறை சார்ந்த பழமையான ஓலைச்சுவடிகள், பழைய அச்சுப் பதிப்புக்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. 23 ஆவது குருமகாசந்நிதானத்தின் ஒப்புதலின் பேரில், சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகளின் மறுவடிவ பாதுகாப்பும் புகைப்படம் எடுத்தலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தாரால் மேற்கொள்ளப்பட்டது.[3]

குருமகாசன்னிதானம்

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்தின் முதல் குரு மகா சந்நிதானம் திருவாவடுதுறை ஆதீனத்தைத் தோற்றுவித்த அருள்திரு நமசிவாயமூர்த்திகள் ஆவார்.[1] திருவாவடுதுறை ஆதீனத்தின் 23-வது குருமகாசன்னிதானமாக 25 ஆண்டுகளாய் விளங்கியவர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய ஸ்வாமிகள். 2012 ஆம் ஆண்டு நவம்பர் 21 தேதியன்று அன்று இச்சுவாமிகள் காலமானார். திருவிடைமருதூர் கோவிலைச் சேர்ந்த மீனாட்சிசுந்தர தம்பிரான்,சுவாமிகள் அம்பலவாண தேசிக பண்டார சன்னிதிகள் என்ற பெயருடன் 24 ஆவது குருமகாசன்னிதானமாகப் பட்டமேற்றார்.[4]

(சில சமயங்களில் ஊடகங்களினால் பீடாதிபதி/மடாதிபதி பதவியும், மடமும் ஆதீனம் என்று வேறுபாடின்றி ஒரேபெயரால் அழைக்கப்படுகின்றன.)

திருவாவடுதுறை ஆதீன ஆசிரியர்கள்

ஆதினத்தின் புகழ் பெற்ற மாணவர்கள்

காண்க

மேற்கோள்கள்

  1. குமுதம் ஜோதிடம்; 10.05.2013; திருமூலர் திருமந்திரம் தந்தருளிய திருவாவடுதுறை திருத்தலம்
  2. திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆன்மீகப் புரட்சி!
  3. மின்னணுச் சுவடிகள், பாரதிதாசன் பல்கலைக்கழகம்
  4. திருவாவடுதுறை ஆதீனம் காலமானார் தினமணி நவம்பர் 23, 2012.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.