திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில்
திருவெறும்பூர் என்று தற்போது அழைக்கப்பெறும் திருஎறும்பியூர் தமிழ் நாட்டின் பெரும் நகரங்களுள் ஒன்றான திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சை செல்லும் பாதையில் 13 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ஒரு சிவத்தலமாகும். திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில்அமைந்துள்ளது. இக்கோவில் ஒரு சிறு குன்றின் மீது உள்ளது. இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவங் கொண்டு வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஏழாவது சிவத்தலமாகும்.
தேவாரம் பாடல் பெற்ற திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் | |
---|---|
![]() | |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருவெறும்பியூர், திருவெறும்பூர், மணிக்கூடம், இரத்தினக் கூடம், பிப்பிலீசுவரம், திருவெறும்பிரம், பிரம்மபுரம், இலக்குமிபுரம், மதுவனபுரம்,குமாரபுரம், தென் கயிலாயம், எறும்பீசம் |
அமைவிடம் | |
ஊர்: | திருவெறும்பூர் |
மாவட்டம்: | திருச்சிராப்பள்ளி |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | எறும்பீஸ்வரர், மதுவனேசுவரர், மாணிக்க நாதர் மணிகூடாசலதேஸ்வரர் திருவெறும்பியூர் ஆழ்வார், திருமலைமேல்,மகாதேவர் |
உற்சவர்: | சோமாஸ்கந்தர் |
தாயார்: | நறுங்குழல் நாயகி, சௌந்திர நாயகி, இரத்தினம்மாள், மதுவனவிஸ்வதி, நறுங்குழல் நாயகி |
தல விருட்சம்: | வில்வம் |
தீர்த்தம்: | பிரம்ம தீர்த்தம், குமார தீர்த்தம் |
ஆகமம்: | காமீகம் |
சிறப்பு திருவிழாக்கள்: | பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருநாவுக்கரசர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | தமிழர் கட்டிடக்கலை |
கல்வெட்டுகள்: | உண்டு |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
திருத்தல வரலாறு
தாரகாசுரன் என்னும் கொடிய அரக்கன் இழைத்த கொடுமைகளினால் தாங்கொணாத் துயருற்ற தேவர்களும் முனிவர்களும், நாரத முனிவரின் அறிவுரையின்படி திருச்சியை அடுத்துள்ள இம்மலையில் எழுந்தருளிய ஈசனைத் தொழச் செல்கையில், அவ்வரக்கன் அறியாத வண்ணம் எறும்பின் வடிவினை மேற்கொண்டு வழிபட்டனராம். மலைமீது அமைந்துள்ள இக்கோயிலை அடைந்து அதில் சிவ லிங்கத்தைத் தொழ எறும்புகள் மிகவும் சிரமப்பட்டதால், ஈசன் தனது உறைவிடத்தையே ஒரு எறும்புப் புற்றாக மாற்றிக் கொண்டார். இதன் காரணமாகவே எறும்பீஸ்வரர் என இத்தல நாதர் அழைக்கப்படலானார்.
பெயர்ச் சிறப்பு
எறும்புகளுக்கும் அருள் ஈந்த ஈஸ்வரன் எழுந்தருளிய இடமாதலால், இத்தலம் எறும்பியூர் எனப்பட்டது.
திருத்தலச் சிறப்புகள்
- முற்றிலும் கற்களால் அமைக்கப்பட்ட கருவறை கொண்டது இத்தலம்.
- மூலவர் லிங்கம் மண்புற்று வடிவில் அமைந்துள்ளது எனவே நேரடியாக அபிசேகம் செய்யாமல், நீர்புகாதவாறு கவசம் பொருத்திய பின் அபிசேகம் செய்யப்படுகின்றது.
- வடபுறம் சாய்மானமாக உள்ள ஈசன் திருமேனி (எறும்புகள் ஊற இயலும் வண்ணம்) மேற்புறம் சொரசொரப்பாகவும் உள்ளது. சிவலிங்கத்தின் மீது எறும்புகள் ஊர்ந்த அடையாளங்களைக் காணலாம்.
- இத்தலம், மும்மூர்த்திகளில் சிவன் தவிர்த்த இருவரான திருமால் மற்றும் பிரம்மா வழிபட்ட சிறப்புடைய தலம்.
- இந்திரன் முதலான தேவர்களும் அகத்தியர் நைமிச முனிவர் ஆகிய முனிவர்களும் இத்தலத்தின் சிறப்பறிந்து இங்கு வழிபட்டனர்.
- இது ஒரு பாடல் பெற்ற தலம். சிறப்பு மிக்க சிவனடியாரான திருநாவுக்கரசர், இப்பெருமானின் சிறப்புக்களை ஐந்தாம் திருமுறையில் பாடியருளியுள்ளார்.
- இக்கோயிலில் சூரியானரின் திருவுரு நவக்கிரக சந்நிதியில் தமது இரு மனைவியரோடும் காட்சி தருவதாக அமைந்துள்ளது.
- திருச்சி மலைக் கோட்டையில் திரிசிரன் வழிபட்டதைப் போன்று, அவனது சகோதரனான கரன் இங்கு எறும்பு உருக்கொண்டு வழிபட்டதாகக் கூறுவதுமுண்டு.
வரலாற்றுச் சிறப்புகள்
- இத்தலம் சோழ மன்னர்களின் பெரும் ஆதரவைப் பெற்று விளங்கியது. முதலாம் ஆதித்த சோழன் கண்டாராதித்தன், சுந்தரசோழன், முதலாம் இராஜராஜன் ஆகியோர் திருப்பணிகளை விளக்கும் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றில் இறைவனார் திருவெறும்பியூர் ஆழ்வார், திருமலை மேல் மகாதேவர் என்னும் பெயர்கள் கொண்டு குறிப்பிடப்படுகிறார்.
- கல்வெட்டுத் துறையாளரால் முதலாம் ஆதித்தன் கல்வெட்டு என்று கருதப்படும். கோவிராஜகேசரிபன்மற்கு யாண்டு நாலாவது என்று தொடங்கும் கல்வெட்டில் இறைவர் ஷ்ரீகண்ட சதுர்வேதி மங்கலத்து தென் கயிலாயத்து மகாதேவர் என்று குறிக்கப் பெற்றுள்ளனர்.
- கி. பி. 1752ஆம் ஆண்டு ஆங்கிலேயர் மற்றும் ஃபிரெஞ்சுப் படையினருக்கு இடையில் நிகழ்ந்த போரில் இம்மலை போர் வீரர்களின் தளமாகப் பயன்பட்டது.
திருத்தலப் பாடல்கள்
63 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் ஐந்தாம் திருமுறையில் இக்கோயில் நாதரைப் பற்றி அருளிய பாடல்கள்:
5.074 திருஎறும்பியூர் - திருக்குறுந்தொகை (741 -750)
திருச்சிற்றம்பலம்
விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே
கரும்பி னூறல்கண் டாய்கலந் தார்க்கவன்
இரும்பி னூறல றாததோர் வெண்டலை
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.
பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுசீர்க்
கறங்கு பூத கணமுடைக் கண்ணுதல்
நறுங்கு ழல்மட வாளொடு நாடொறும்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.
மருந்து வானவர் தானவர்க் கின்சுவை
புரிந்த புன்சடைப் புண்ணியன் கண்ணுதல்
பொருந்து பூண்முலை மங்கைநல் லாளொடும்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.
நிறங்கொள் கண்டத்து நின்மலன் எம்மிறை
மறங்கொள் வேற்கண்ணி வாணுதல் பாகமா
அறம்பு ரிந்தருள் செய்தவெம் அங்கணன்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.
நறும்பொன் நாண்மலர்க் கொன்றையு நாகமுந்
துறும்பு செஞ்சடைத் தூமதி வைத்துவான்
உறும்பொன் மால்வரைப் பேதையோ டூர்தொறும்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.
கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில்
திறம்பி யூர்வன மற்றும் பலவுள
குறும்பி யூர்வதோர் கூட்டகத் திட்டெனை
எறும்பி யூரரன் செய்த இயற்கையே.
மறந்து மற்றிது பேரிடர் நாடொறுந்
திறம்பி நீநினை யேல்மட நெஞ்சமே
புறஞ்செய் கோலக் குரம்பையி லிட்டெனை
எறும்பி யூரரன் செய்த இயற்கையே.
இன்ப மும்பிறப் பும்மிறப் பின்னொடு
துன்ப மும்முட னேவைத்த சோதியான்
அன்ப னேயர னேயென் றரற்றுவார்க்
கின்ப னாகும் எறும்பியூ ரீசனே.
கண்ணி றைந்த கனபவ ளத்திரள்
விண்ணி றைந்த விரிசுடர்ச் சோதியான்
உண்ணி றைந்துரு வாயுயி ராயவன்
எண்ணி றைந்த எறும்பியூ ரீசனே.
நிறங்கொள் மால்வரை ஊன்றி யெடுத்தலும்
நறுங்கு ழல்மட வாள்நடுக் கெய்திட
மறங்கொள் வாளரக் கன்வலி வாட்டினான்
எறும்பி யூர்மலை எம்மிறை காண்மினே.
ஆறாம் திருமுறை
பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்
எண்ணோடு பண்ணிறைந்த கலைக ளாய
தன்னையுந்தன் திறத்தறியாப் பொறியி லேனைத்
தன்திறமும் அறிவித்து நெறியுங் காட்டி
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்
அடைந்தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட
தென்எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே
பளிங்கின்நிழ லுட்பதித்த சோதி யானைப்
பசுபதியைப் பாசுபத வேடத் தானை
விளிந்தெழுந்த சலந்தரனை வீட்டி னானை
வேதியனை விண்ணவனை மேவி வையம்
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும்
அருமருந்தை ஆமா றறிந்தென் உள்ளந்
தெளிந்தெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
கருவையென்றன் மனத்திருந்த கருத்தை ஞானக்
கடுஞ்சுடரைப் படிந்துகிடந் தமரர் ஏத்தும்
உருவையண்டத் தொருமுதலை யோத வேலி
யுலகினிறை தொழிலிறுதி நடுவாய் நின்ற
மருவைவென்ற குழல்மடவாள் பாகம் வைத்த
மயானத்து மாசிலா மணியை வாசத்
திருவெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
பகழிபொழிந் தடலரக்கர் புரங்கள் மூன்றும்
பாழ்படுத்த பரஞ்சுடரைப் பரிந்து தன்னைப்
புகழுமன்பர்க் கின்பமரும் அமுதைத் தேனைப்
புண்ணியனைப் புவனியது முழுதும் போத
உமிழும்அம் பொற்குன்றத்தை முத்தின் தூணை
உமையவள்தம் பெருமானை இமையோ ரேத்தும்
திகழெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
பாரிடங்க ளுடன்பாடப் பயின்று நட்டம்
பயில்வானை அயில்வாய சூல மேந்தி
நேரிடும்போர் மிகவல்ல நிமலன் தன்னை
நின்மலனை அம்மலர்கொண் டயனும் மாலும்
பாரிடந்தும் மேலுயர்ந்துங் காணா வண்ணம்
பரந்தானை நிமிர்ந்துமுனி கணங்க ளேத்துஞ்
சீரெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே
கார்முகிலாய்ப் பொழிவானைப் பொழிந்த முன்னீர்
கரப்பானைக் கடியநடை விடையொன் றேறி
ஊர்பலவுந் திரிவானை ஊர தாக
ஒற்றியூ ருடையனாய் முற்றும் ஆண்டு
பேரெழுத்தொன் றுடையானைப் பிரம னோடு
மாலவனும் இந்திரன்மந் திரத்தா லேத்துஞ்
சீரெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
நீணிலவும் அந்தீயும் நீரும் மற்றை
நெறியிலங்கு மிகுகாலும் ஆகா சம்மும்
வாணிலவு தாரகையும் மண்ணும் விண்ணும்
மன்னுயிரும் என்னுயிருந் தானாய் செம்பொன்
ஆணியென்றும் மஞ்சனமா மலையே யென்றும்
அம்பவளத் திரளென்றும் அறிந்தோ ரேத்துஞ்
சேணெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
அறந்தெரியா ஊத்தைவாய் அறிவில் சிந்தை
யாரம்பக் குண்டரோ டயர்த்து நாளும்
மறந்துமரன் திருவடிகள் நினைய மாட்டா
மதியிலியேன் வாழ்வெலாம் வாளா மண்மேற்
பிறந்தநாள் நாளல்ல வாளா ஈசன்
பேர்பிதற்றிச் சீரடிமைத் திறத்து ளன்பு
செறிந்தெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
அறிவிலங்கு மனத்தானை அறிவார்க் கன்றி
அறியாதார் தந்திறத்தொன் றறியா தானைப்
பொறியிலங்கு வாளரவம் புனைந்து பூண்ட
புண்ணியனைப் பொருதிரைவாய் நஞ்ச முண்ட
குறியிலங்கு மிடற்றானை மடற்றேன் கொன்றைச்
சடையானை மடைதோறுங் கமல மென்பூச்
செறியெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே
அருந்தவத்தின் பெருவலியா லறிவ தின்றி
அடலரக்கன் தடவரையை யெடுத்தான் திண்டோள்
முரிந்துநெரிந் தழிந்துபா தாள முற்று
முன்கைநரம் பினையெடுத்துக் கீதம் பாட
இருந்தவனை யேழுலகு மாக்கி னானை
யெம்மானைக் கைம்மாவி னுரிவை போர்த்த
திருந்தெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே
படத்தொகுப்பு
- மலைக்கோவில் முன்தோற்றம்
- இராஜகோபுரம்
- நறுங்குழல் நாயகி அம்மன் கோபுரம்
- தெப்பக்குளம்
- கல்வெட்டு
- கோயில் பிரகாரம்
- சேதமடைந்த கோயில்
இவற்றையும் பார்க்க
குறிப்புதவிகள்
http://www.tamilkalanjiyam.com/literatures/panniru_thirumurai/thevaaram/thevaaram_5_74.html
வெளி இணைப்புகள்
- தல வரலாறு தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்
- அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்
- இத்தலம் பற்றிய குறிப்புகளும் ஒலி ஒளிக்காட்சிகளும் கொண்ட ஒரு வலைத்தளம்
- பன்னிரு திருமுறைக் கோயில்கள்
- எறும்பீஸ்வரர் கோவில், திருவெறும்பூர்