தமிழர் கட்டிடக்கலை

தமிழர் கட்டிடக்கலை என்பது பண்டைக்காலத் தமிழர்களின் கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியலும் ஆகும்.

கீழடி அகழ்வாய்வில் வெளிக்கொணரப்பட்ட சங்க கால நகர கட்டித் தொகுதிகள்
தமிழர்

தமிழர்கள் மிக நீண்ட காலமாகவே ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நிலையாக வாழ்ந்துவருபவர்கள். தனித்துவம் வாய்ந்த ஒரு பண்பாட்டைக் கொண்டிருப்பவர்கள். மொழி, இலக்கியம், கலை போன்ற துறைகளில் கிறிஸ்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே உயர்நிலை எட்டியிருந்தவர்கள். இத்தகைய பின்னணியிலே, மக்கள் வாழ்வதற்கான இல்லங்களும், அரசர்களுக்கான மாளிகைகளும், வணக்கத்தலங்களும், பொதுக் கட்டிடங்கள் பலவும் உருவாக்கப் பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இவையெல்லாம் அழிந்துபோகக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டதால் எதுவும் எஞ்சவில்லை.

ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னரே தமிழ்நாட்டில் கற்களால் கட்டிடங்கள் கட்டப்பட்டன. இக் கட்டிடங்களில் மிகப் பெரும்பாலானவை கோயில்களே. இவை கட்டிடக்கலையின் உயர் மரபைச் சாந்தவை. ஆனாலும் இவற்றோடு இணையாகச் சாதாரண மக்களுக்கான வீடுகளையும் கட்டிடங்களையும் உள்ளடக்கிய இன்னொரு கட்டிடக்கலை மரபும் இருந்தது. ஆறாம் நூற்றாண்டளவில் தொடங்கிய கற்கட்டிட மரபு நாயக்கர் காலம் வரை வளர்ந்து வந்தது. இதுவே திராவிடக் கட்டிடக்கலை எனப்படுகின்ற கட்டிடக்கலை மரபாகும். இதன் பின்னரும் தற்காலம் வரையில் ஆங்காங்கே தனித்துவமான வகைகளைச் சேர்ந்த கட்டிடங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

இத்தகைய எல்லாவகைக் கட்டிடக்கலைகளினதும் கூட்டுமொத்தம் தமிழர் கட்டிடக்கலை எனப்படலாம்.

இலக்கியத்தில் தமிழர் கட்டிடக்கலை

வீடுகள் அமைப்பதில் சில முறைகள் அக்காலத்தில் இருந்தன என்று குறிப்பிடுகிறார் டாக்டர் உ. வே. சாமிநாதையர். நெடுநல்வாடையில்: "பெரும் பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து" என்பதனால் அவரவர்களுக்கேற்றபடி மனைகள் அமைக்கும் வழக்கம் இருந்ததென்பதை அறியலாம். வீடுகள் கட்டுவதற்கு கடைக்கால் (அத்திவாரம்) போடும் காலம் நெடுநல்வாடையில் காணப்படுகிறது. கோபுரங்களும், வாயின் மாடங்களும், நிலாமுற்றங்களும், அறைகளும் அமைக்கப்பட்டன. வீடுகளின் நிலைகளிற் சித்திர வேலைகள் செய்யப்பட்டிருந்தன. மாடங்களாகவே சில வீடுகள் கட்டப்பட்டிருந்தன. காற்று ஓட்டத்திற்காக வீட்டின் சுவர்களிற் பலவகைச் சாளரங்கள் வைப்பதுண்டு. இவை காலதர் என்று கூறப்படும். கால் = காற்று, அதர் = வழி. அதாவது காற்றுப் போகும் வழி என்று பொருள்[1].

நீர்த்தேக்கங்களும் கட்டிய மன்னர்களும்

வ.எண்அணைகள்கட்டியவர் பெயர்காலம்
1கல்லணைகரிகாலன்2
2திரையனேரிதிரையன்6
3மகேந்திர தடாகம்மகேந்திர வர்மன்7
4பரமேசுவரத் தடாகம்பரமேசுவர வர்மன்7
5வயிரமேகத் தடாகம்வயிரமேக பல்லவன்8
6மார்பிடுகு ஏரிவயிரமேக பல்லவன்8

உறுப்புகள்

தமிழர் கட்டிடக்கலையில் பொதுவாக மூன்று உறுப்புகள் காணப்படுகின்றன . அவை தாங்குதளம் , சுவர் மற்றும் விமானம் ( அல்லது கோபுரம் )ஆகும் .

மேலும் பார்க்க

உசாத்துணை

  1. உ. வே. சாமிநாதையர், நல்லுரைக்கோவை, சென்னை, 1991

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.