தாங்குதளம்

தாங்குதளம் என்பது சிற்பநூல் விதிகளின்படி அமைக்கப்படுகின்ற இந்தியாவின் மரபுவழிக் கட்டிடங்களின் உறுப்புக்களில் ஒன்றான அடித் தளத்தைக் குறிக்கும். தொடக்ககாலக் கட்டிடங்களின் உறுப்புகளில் நிலத்தின்மேற் அமைக்கப்பட்ட முதல் உறுப்பு இதுவாகவேயிருந்தது. பிற்காலங்களில் உபபீடம் எனப்படும் இன்னொரு உறுப்பு தாங்குதளத்தின் கீழ் அமைக்கப்படுவது வழக்கமாயிற்று. சிற்பநூல்களில் உபபீடங்கள் பற்றி விபரிக்கப்பட்டிருப்பினும் கட்டிடங்களின் அடித்தளமாகக் கருதப்படுவது தாங்குதளமே.

திராவிடக் கட்டிடக்கலை உறுப்புக்கள்

பெயர்கள்

சிற்பநூல்கள் இதனை வடமொழியில் பொதுவாக அதிஷ்டானம் எனக் குறிப்பிட்டாலும், இந்நூல்களில் தாங்குதளத்துக்குப் பல்வேறு பெயர்கள் வழங்குகின்றன. மயமதம், கசியப சிற்பசாஸ்திரம் ஆகிய நூல்களில் கீழே பட்டியலிடப்பட்டுள்ளவை உட்படப் பல பெயர்கள் காணப்படுகின்றன.

1. அதிஷ்டானம் 6. ஆதாரம் 11. தரணி
2.மசூரகம்7.தரணீதலம்12.குட்டிமம்
3.வாஸ்துவாதாரம்8.புவனம்13.ஆதியங்கம்
4.தராதலம்9.பிருதிவீ--
5.தலம்10.பூமி--

துணையுறுப்புக்கள்

ஒரு பாதபந்தத் தாங்குதள அமைப்பு

தாங்குதளங்கள் ஒன்றின்மேலொன்றாக வரிவரியாக அல்லது பல படைகளாக அமைகின்ற துணையுறுப்புக்களின் சேர்க்கையால் உருவாக்கப்படுகின்றன. இத் துணையுறுப்புக்களில், உபானம், ஜகதி, குமுதம், கும்பம், பத்மம், கம்பம், கண்டம், பட்டிகை, வாஜனம், கபோதம், பிரதி என்பன அடங்குகின்றன. இத் துணை உறுப்புக்கள், பல்வேறு வடிவவியல் வடிவங்களிலான வெட்டுமுகங்களுடன் பிதுக்கங்களாகவோ அல்லது உள்ளடங்கியோ ஒன்றுடனொன்று தொடர்புகொண்டு அடுக்கடுக்காக அமைகின்றன. இத் துணை உறுப்புக்களின் பயன்பாடு, இட அமைவு, உருவ ஒற்றுமை என்பவற்றைக் கருத்தில் கொண்டு இவற்றுக்குப் பெயரிடப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். எடுத்துக்காட்டாக, குமுதம், பத்மம் ஆகிய பெயர்கள் முறையே குமுத மலர், தாமரை மலர் ஆகிய மலர்களின் வடிவங்களையொத்த வெட்டுமுகத் தோற்றத்தைக் கொண்டிருப்பதனால் ஏற்பட்டவை.

தாங்குதள வகைகள்

தாங்குதளங்களில் அடங்கியுள்ள துணை உறுப்புக்களின் வகைகள், அவற்றின் எண்ணிக்கை என்பவற்றைப் பொறுத்து, தாங்குதளங்கள் வகைகளாக வகுக்கப்பட்டுள்ளன. இவை மேலும் பல துணை வகைகளாகவும் பிரிக்கப்படுகின்றன. சிற்பநூல்கள் கூறும் மூன்று வகையான தாங்குதளங்கள் பின்வருமாறு:

  1. பாதபந்தத் தாங்குதளம்
  2. பிரதிபந்தத் தாங்குதளம்
  3. பத்மபந்தத் தாங்குதளம்

இவற்றின் வேறுபாடுகளாக மயமதம் 14 துணை வகைகளையும், காசியப சிற்பசாஸ்திரம் 22 துணை வகைகளையும் குறிப்பிடுகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.