வடிவமைப்பு

வடிவமைப்பு என்பது, பொதுவாக பயன்படுகலைகள், பொறியியல், கட்டிடக்கலை மற்றும் இவைபோன்ற ஆக்க முயற்சிகள் தொடர்பில் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். ஒரு பொருள் அல்லது ஒரு செயல்முறையை வடிவமைப்புச் செய்யும்போது, அழகியல், செயற்பாடு முதலிய பல அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. இதனால் வடிவமைப்பு முயற்சியின்போது, ஆய்வு, சிந்தனை, மாதிரியாக்கம், திருத்தம், மீள்வடிவமைப்பு போன்ற செயற்பாடுகள் அவசியமாகின்றன. இவ்வாறு வடிவமைப்பில் ஈடுபடுபவர் வடிவமைப்பாளர் எனப்படுகிறார். கட்டிடங்கள் மற்றும் இதுபோன்ற பெரிய திட்டங்கள் தொடர்பிலான வடிவமைப்புகளைத் தனியாக எவரும் செய்யமுடியாது. இத்தகைய வடிவமைப்புக்களுக்குப் பல்துறை அறிவு தேவைப்படுவதால், பல துறைகளையும் சேர்ந்த நிபுணர்கள் குழுக்களாகவே இம்முயற்சியில் ஈடுபடுவார்கள். இதனை வடிவமைப்புக் குழு என்பர்.

சென். லூயிஸ் பேராலய பசிலிக்காவிலுள்ள ஆல் செயிண்ட் சப்பல். இதன் அமைப்பும், அலங்காரமும் வடிவமைப்புக்கான எடுத்துக்காட்டுகளாகும்.

வடிவமைப்புத் தத்துவங்கள்

ஒரு நீராவித் தொடர்வண்டி இயந்திரத்தின் வரைபடம். செயற்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ஒரு பொறியியல் வடிவமைப்பு.

வடிவமைப்பதற்காகவும், அதனை வழிப்படுத்துவதற்காகவும், ஏராளமான தத்துவங்கள் உள்ளன. வடிவமைப்புத் தத்துவங்கள் பெரும்பாலும், வடிவமைப்பின் நோக்கங்களைத் தீர்மானிப்பதற்காகவே அமைகின்றன. வடிவமைப்பு நோக்கங்கள், அதிக முக்கியத்துவம் அற்ற, சிறிய பிரச்சினையொன்றுக்குத் தீர்வுகாண்பது முதல் முழுதளாவிய, பாரிய திட்டங்களை உருவாக்குவது வரை வேறுபட்டு அமையக்கூடும். எவ்வாறாயினும், இத்தகைய நோக்கங்கள் வடிவமைப்பை வழிப்படுத்துவதற்காகவே பெரும்பாலும் உருவாக்கப்படுகின்றன.

வடிவமைப்பை வழிப்படுத்துவதற்கான தத்துவங்கள்

வடிவமைப்புத் தத்துவம் என்பது, வடிவமைக்கும்போது தெரிவுகளைச் செய்ய உதவும் வழிகாட்டல் ஆகும்.

வடிவமைப்பு அணுகுமுறைகள்

ஆடை அலங்காரத்திற்கு வடிவமைப்புச் செய்யும்போது, அதன் இறுதி வடிவத்தில் அழகியலுக்கும், செயற்பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

வடிவமைப்பு அணுகுமுறை என்பது ஒரு பொதுவான தத்துவமேயன்றி ஒரு குறிப்பிட்ட ஒரு செயல்முறைக்கான வழிகாட்டல் அல்ல. சில அணுகுமுறைகள் மேலோட்டமான வடிவமைப்பு நோக்கத்தை அடைய வழிகாட்டுகின்றன. வேறு சில, வடிவமைப்பாளரின் போக்கை வழிப்படுத்துவதாக அமைகின்றன. ஒன்றுக்கொன்று முரண்பாடாக இல்லாவிட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட அணுகுமுறைகளைக் கலந்தும் கைக்கொள்ளுதல் சாத்தியமே.

பரவலாகக் கையாளப்படும் சில அணுகுமுறைகள்:

  • பயனர் மைய வடிவமைப்பு (User centered design): இது வடிவமைக்கப்பட்ட பொருளின் இறுதிப் பயனரின் தேவைகள், விருப்பங்கள், எல்லைகள் என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு அணுகுமுறை.
  • பயன்பாட்டு மைய வடிவமைப்பு (Use-centered design): உருவாக்கப் படும் பொருள் எவ்வாறு பயன்படுத்தப்படப் போகிறது என்பதை மையப்படுத்தும் ஒரு வடிவமைப்பு அணுகுமுறை. இது, பயனருக்கு அளிக்கும் முக்கியத்துவம் முதற்கூறிய முறையில் உள்ளதிலும் குறைவே.
  • கிஸ் தத்துவம் (KISS principle): இங்கே, எளிமையாக வைத்திரு முட்டாளே, என்ற பொருள் தரும் ஆங்கிலத் தொடரரான Keep it Simple, Stupid என்பதன் சுருக்க வடிவமே KISS. இந்த அணுகுமுறை, வடிவமைப்பில் தேவையற்ற சிக்கல்களை நீக்குவதில் அக்கறை உள்ளதாக இருக்கிறது.
  • இதைச் செய்ய ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் உள்ளன. (There is more than one way to do it) (TMTOWTDI): பர்ள் கணிமொழியின் வடிவமைப்புத் தத்துவமான இது ஒரு வேலையைச் செய்வதற்குப் பல வழிமுறைகளை அனுமதிக்கும் ஒரு அணுகுமுறையாகும்.
  • மர்பியின் விதி (Murphy's Law): வாய்ப்புக் கொடுத்தால், எந்தச் சந்தர்ப்பத்திலும் எதுவும் பிழையாகிப் போகலாம் எனவே முன்னரே திட்டமிடவேண்டும் என்று விளக்கும் அணுகுமுறை.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.