சக்கரப்பள்ளி சக்கரவாகேசுவரர் கோயில்

சக்கரப்பள்ளி சக்கரவாகேசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் அய்யம்பேட்டையில் அமைந்துள்ளது. திருமால் வழிபட்டுச் சக்கராயுதம் பெற்ற தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 17ஆவது சிவத்தலமாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
சக்கரப்பள்ளி சக்கரவாகேசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருச்சக்கரப்பள்ளி, இராசகிரி ஐயம்பேட்டை, குலோத்துங்க சோழவள நாடு, குலோத்துங்க விளநாடு, இராசேந்திர சோழ சதுர்வேதிமங்கலம்
பெயர்:சக்கரப்பள்ளி சக்கரவாகேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:சக்கரப்பள்ளி
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சக்கரவாகேஸ்வரர்
தாயார்:தேவநாயகி
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:காவிரியாறு, காக தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்

தல வரலாறு

  • சக்கரவாகப் பறவை வழிபட்டதாலும், (சக்கரமங்கை வழிபட்டதாலும்) இவ்வூர் சக்கரப்பள்ளி என்று வழங்கலாயிற்று.
  • திருமால் வழிபட்டுச் சக்கராயுதம் பெற்ற தலம். சக்கரவாகப் பறவை வழிபட்டத் தலம் என்று கூறுவதும் உண்டு.
  • பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தியன்று சூரியன் இவ்விறைவனை வழிபடும் அற்புதக் காட்சியைக் காணலாம்.
  • மக்கள் வழக்கில் இவ்வூர் ஐயம்பேட்டை என்று வழங்குகிறது. (இப்பெயரில் பல ஊர்கள் இருப்பதால் வழக்கில் இதை தஞ்சாவூர் ஐயம்பேட்டை என்று கூறுகின்றனர்.)

அமைப்பு

முகப்பு

நுழைந்தவுடன் மரத்தாலான கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளன. கருறையில் மூலவர் லிங்கத்திருமேனியாக உள்ளார். கருவறை வாயிலில் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். சன்னதியில் நால்வர், சூரியன், பைரவர், சந்திரன், நாகங்கள், லிங்க பானம் ஆகியவை காணப்படுகின்றன. கருவறை மற்றும் விமானத்துடன் கூடிய மூலவர் சன்னதி தரைத்தளத்திலிருந்து சற்று தாழ்ந்த நிலையில் காணப்படுகிறது. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர் சன்னதியும், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. கோயிலின் இடப்புறம் தேவநாயகி அம்மன் சன்னதி உள்ளது.

தல சிறப்புக்கள்

  • கருவறை கீழ்ப்புறம் கருங்கல்லாலும் மேற்புறம், விமானம் சுதையாலும் ஆக்கப்பட்டவை.
  • அம்பாள் சன்னதி எதிரில் பெண்களுக்கு மாங்கல்ய பலன் தருவதும், யம பயம் நீக்க வல்லதுமான குங்குலியக் குண்டம் அமைந்துள்ளது.
  • கல்வெட்டுக்களில் இவ்வூர், "குலோத்துங்க சோழவள நாடு, குலோத்துங்க விளநாடு, இராசேந்திர சோழ சதுர்வேதிமங்கலம்" என்று குறிக்கப்பட்டுள்ளது.

ஊர் சபை விதி

இத்தலத்திலுள்ள மூன்றாம் குலோத்துங்க சோழனின் 12-ஆவது ஆண்டுக் கல்வெட்டு, இவ்வூர்ச் சபைக்குரிய சில விதிகளைக் கூறுகின்றது. நாற்பது வயதுக்கும் மேற்பட்டவரே ஊர்ச்சபை உறுப்பினராகலாம் என்றும், அவர்களும் பத்து ஆண்டுகளுள் உறுப்பினர்க்கு நிற்காதவராக இருக்க வேண்டும் என்றும் ஊர்ச்சபை விதிகள் கூறப்பட்டுள்ளன.

திருத்தலப் பாடல்கள்

இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:

திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்

படையினார் வெண்மழுப் பாய்புலித் தோலரை
உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர்
விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல்
சடையினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.
வெந்தவெண் பொடியணி வேதியர் விரிபுனல்
அந்தமில் அணிமலை மங்கையோ டமருமூர்
கந்தமார் மலரொடு காரகில் பன்மணி
சந்தினோ டணைபுனற் சக்கரப் பள்ளியே..

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புக்கள்

படத்தொகுப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.