கல்வெட்டு

பண்டைக் காலத்தில் நீண்ட காலம் அழியாதிருக்க வேண்டும் எனக் கருதப்பட்ட செய்திகள் கற்களில் வெட்டப்பட்டன. இவ்வாறு கல்லில் பொறிக்கப்பட்ட செய்தியே கல்வெட்டு எனப்படுகின்றது. பெரும்பாலும், மன்னர்களின் ஆணைகள், அவர்கள் செய்த பணிகள் போன்றவை கல்வெட்டுக்களாகப் பொறிக்கப்பட்டன. இவை தவிர வீரர்கள், பிரபுக்கள், அதிகாரிகள் போன்றோர் தொடர்பிலும், முக்கிய நிகழ்வுகள் தொடர்பிலும் கல்வெட்டுக்கள் உள்ளன.

ராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் மாமல்லபுரம் அதிரணசண்டன் கோயிலில் காணப்படும் ஒரு கிரந்தக் கல்வெட்டு

கல்வெட்டுக்கள், பெரும்பாலும் பொதுமக்கள் பார்ப்பதற்காக வெட்டப்படுவதால் இவை பொது இடங்களிலேயே அதிகம் காணப்படுகின்றன. கோயில்கள், குகைகள், பொது மண்டபங்கள், வெற்றித் தூண்கள், நடுகற்கள் எனப்படும் இறந்தோர் நினைவுக் கற்கள் என்பவற்றில் கல்வெட்டுக்களைக் காணலாம். கல்வெட்டுப் பொறிக்கும் வழக்கம் உலகின் பல பகுதிகளிலும் காணப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வுகள் இறந்துபட்ட அல்லது இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பல்வேறு மொழிகளிலுமான கல்வெட்டுக்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளன.

கல்வெட்டுக்கள் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கக் கூடியவை ஆதலால், மிகப் பழங்கால வரலாற்றுச் செய்திகள், நிகழ்வுகளுக்கான நம்பகமான சான்றுகளாக இவை திகழ்கின்றன. பல கல்வெட்டுக்கள் ஒரு மொழியில் மட்டுமன்றி, ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளிலும் ஒரே செய்தியைக் குறிக்கும்படி அமைந்துள்ளன. இத்தகைய கல்வெட்டுக்கள் வழக்கொழிந்து மறக்கப்பட்டுவிட்ட மொழிகள் பலவற்றை வாசித்து அறியவும் அவற்றை மீட்டுருவாக்கம் செய்யவும் உதவுகின்றன. பண்டை எகிப்திய மொழி இவ்வாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டதே. பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கல்வெட்டுக்களை ஆய்வு செய்வதன் மூலம் எழுத்துக்களின் படிமுறை வளர்ச்சிகளையும் அறிந்துகொள்ள முடிகிறது.

தமிழ் நாட்டில் கல்வெட்டுக்கள்

தஞ்சைப் பெரிய கோயிலில் காணப்படும் தமிழ்க் கல்வெட்டுக்களின் ஒரு பகுதி.

தமிழ் நாட்டின் மிகப் பழைய கல்வெட்டுக்கள் நடுகற்களில் வெட்டப்பட்டவை ஆகும். தொல்காப்பியம் முதலான பழந்தமிழ் நூல்களிலுள்ள செய்திகளும் இதற்குச் சான்றாக அமைகின்றன. தொல்காப்பியத்தில், போர்க்களத்திலே வீரச்சாவு அடைந்தோருக்குக் கல்லெடுத்தலும், அக்கல்லில் அவர்தம் வீரச் செயல்களைப் பொறித்தலும் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.

இவ்வாறாக நடுகற்களில் தோன்றிய கல்வெட்டுக்கள் பல்லவர் காலத்தில் வேறு தேவைகளுக்கும் பயன்படத்தக்கதாக வளர்ச்சியடைந்தன. பல்லவர்களின் தொடக்ககாலக் கல்வெட்டுக்கள் பிராகிருத மொழியிலும், இடைக்காலத்தில் சமஸ்கிருதத்திலும் கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல், பிற்காலப் பல்லவர் காலத்தில் தமிழிலும் பொறிக்கப்பட்டன.

இவர்களுக்குப் பின்னர் சோழ மன்னரும், பாண்டியரும் கல்வெட்டுக்களைப் பொறிக்கும் வழக்கம் உடையோராக இருந்தனர். இதனால் கல்வெட்டுக்கள் பெரிதும் வளர்ச்சியுற்றன. இவ்வாறு பொறிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்களின் மூலமே தமிழ் நாட்டின் இடைக்கால வரலாற்றின் பெரும்பகுதியை அறிந்து கொள்ள முடிந்தது.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.