இலிங்கோத்பவர்

சிவ வடிவங்களில் ஒன்றான
'
மூர்த்த வகை:மகேசுவர மூர்த்தம்,
உருவத்திருமேனி
இடம்:கைலாயம்
வாகனம்:நந்தி தேவர்


லிங்கோத்பவர் சிற்பம், காலடியில் வராக உருவில் விஷ்ணுவும், தலைமேல் அன்னப் பறவை உருவில் பிரம்மாவும். இடம்: ஐராவதேசுவரர் கோயில்


இலிங்கோத்பவர் அல்லது இலிங்கோற்பவர் எனப்படுவது சிவபெருமானது உருவத்திருமேனிகளில் ஒன்றாகும்.இலிங்கோத்பவ மூர்த்தம் சிவாலயங்களின் கருவறையின் பின்புறச் சுவரில் மேற்கு நோக்கியவண்ணம் காணப்படும்.சிவன் ஆதியும் அந்தமும் இல்லா பெருஞ்சோதியன் என்பதனை விளக்கும் வண்ணம் அமையப்பெற்ற இம்மூர்த்தம் மகா சிவராத்திரி விழாவுடன் தொடர்புடையது

தோற்றம்

சிவாலயங்களின் கருவறையின் பின்புறம் நின்ற திருக்கோலத்தில் சோதிப்பிழம்பாக அடியும் முடியும் காணவொண்ணாதவாறு இருக்கும் இச் சிவமூர்த்ததின் அடியில் பன்றி வடிவத்தில் திருமாலும் முடியில் அன்னபட்சி வடிவில் நான்முகனும் காணப்படுவர். சிவராத்திரி தினத்தன்று இவ்மூர்த்ததிற்கு சிறப்பு பூசணைகள் இடம்பெறும்.

திருமுறை

மாலும் நான்முகன் தானும் வார்கழற் சீல மும்முடி தேட நீண்டெரி போலும் மேனியன் பூம்பு கலியுட் பால தாடிய பண்பன் நல்லனே.

பொருள் - திருமால் நான்முகன் ஆகியோர் நீண்ட திருவடிப் பெருமையையும், திருமுடியையும் தேட எரிபோலும் மேனியனாய் நீண்டவனும், அழகிய புகலியுள் பால் முதலியவற்றை ஆடி உறைபவனும் ஆகிய பண்பினன் நமக்கு நன்மைகள் செய்பவன்.

திருவருட்பா

வான்காணா மறைகாணா மலரோன் காணான்
மால்காணான் உருத்திரனும் மதித்துக் காணான்
நான்காணா இடத்ததனைக் காண்பேம் என்று
மான்காணா உளக்கமல மலர்த்தா நின்ற
வான்சுடரே ஆனந்த மயமே ஈன்ற
ஆன்காணா இளங்கன்றாய் அலமந் தேங்கும்
அன்பர்தமைக் கலந்துகொள்ளும் அமலத் தேவே.
-இராமலிங்க அடிகள்


சிவராத்திரியும் இலிங்கோத்பவரும்

சிவனது இலிங்கோத்பவ வடிவிற்கும் சிவராத்திரிக்கும் மிகு தொடர்புள்ளது.இலிங்க புராணத்தின் படி ஒருமுறை திருமாலுக்கும் நான்முகனுக்கும் தம்முள் யார் உயர்ந்தவர் என வாதம் உண்டாயிற்று இதனை தீர்க்க சிவனிடத்தே சென்று முறையிட்டனர்.அப்பொழுதே சிவன் இலிங்கோத்பவர் உருக்கொண்டு இதன் அடியையோ முடியையோ எவர் முதலில் காண்பவரோ அவரே உயர்தவராவார் என கூற திருமால் பன்றி உருகொண்டு அடியினையும் நான்முகன் அன்ன உருகொண்டு முடியினையும் காண துணிந்தனர். ஈற்றில் இருவரும் அடியினையோ முடியினையோ காணவொண்ணாது தம் தோல்விய்ற்று சிவனே உயர்ந்தவன் என உணர்ந்தனர். இந்நாளே சிவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகின்றது.சிவராத்திரி தினத்தன்று 3ம் சாமப்பூசணை காலம் இலிங்கோற்பவ காலம் என குறிப்பிடப்பட்டு இவ்வேளை இலிங்கோற்பவருக்கு சிறப்பு முழுக்குகள் இடம்பெறும்.

திருவண்ணாமலை

இந்த திருவுருவ மேனி தத்துவத்தை உணர்த்துவதே அண்ணாமலை கோவில். அக்னியின் உருவமாக லிங்கோத்பவர் நின்ற இடம். இங்கு வருடந்தேறும் நடைபெறும் "அண்ணாமலை ஜோதி" விழா, இதை நினைவு கூறுகிறது.

சிற்ப வளர்ச்சி

தமிழகத்தில் முதன்முதலில் இராசசிம்ம பல்லவனாலே(கி.பி.700-730) காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் இலிங்கோத்பவர் சிற்பம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.இதன் பின்னர் முதலாம் பராந்தக சோழன்(கி.பி 907-953)காலத்திலே சிவாலயங்களின் கருவறையின் பின்புறம் அதுவரைக்கும் அமைக்கப்பட்டிருந்த அர்த்தநாரீசுவரர் படிமத்திற்கு பதிலாக இலிங்கோத்பவர் அமைக்கப்படுவது தொடங்கலாயிற்று இதன் தொடர்ச்சியாக பிற்கால சோழர்களாலும் இம்முறை கைகொள்ளப்பட்டு இற்றைவரையும் பேணப்படுகின்றது.(1)

இவற்றையும் பார்க்க

உசாவு துணை

1.திருகோடிக்காவல் இலிங்கோத்பவ மூர்த்தி சிற்பம் ஒர் ஆய்வு கட்டுரை - முனைவர் மு.கலா வாழ்வியல் சுரங்கம்,கலைஞன் பதிப்பகம்.

வெளி இணைப்புகள்

யார் படைப்பாளி , யார் படைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.